
இருளும் ஒளியும்
சரோஜா ராமமூர்த்தி
26. தாய்க்குப் பிறகு தாரம்
தீபாவளி அழைப்பைக் கையில் வைத்துக்கொண்டு கூடத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான் ரகுபதி, ’கடிதம் யார் எழுதி இருக்கிறார்கள்? என்ன எழுதப்பட்டிருக்கிறது?’ என்று அறிந்து கொள்ள ஸரஸ்வதியும், ஸ்வர்ணமும்
ஆவலுடன் அவன் எதிரில் நின்றிருந்தார்கள்.
“கடிதம் போட்டுவிட்டார்கள் பிரமாதமாக! நான் குதித் துக்கொண்டு ஓட வேண்டியதுதான் பாக்கி!” என்று வெறுப்புடன் கடிதத்தை அங்கிருந்த மேஜைமீது வீசி எறிந்துவிட்டு ’விடுவிடு’ என்று வெளியே போய்விட்டான் ரகுபதி. ஸரஸ்வதி, ஸ்வர்ணத்தின் ஏக்கம் நிறைந்த முகத்தைக் கவனித்துவிட்டு, “அத்தை! கடிதத்தை நான் படிக்கட்டுமா? ஒருவேளை கடிதம் சாவித்திரி எழுதியதாக இருக்குமோ என்று யோசிக்கிறேன். படிக்கட்டுமா அத்தை? அதில் ஒன்றும் தவறில்லையே?” என்று கேட்டாள்.
“இப்பொழுது நடக்கிறதெல்லாம் சரியாக இருக்கிறது! கடிதத்தைப் படித்தால்தான் தவறு ஏற்பட்டுவிடுமோ? படியேன்” என்றாள் ஸ்வர்ணம் பாதி கோபமாகவும், பாதி வருத்தமாகவும் ஸரஸ்வதியைப் பார்த்து. கடிதத்தை உறையிலிருந்து எடுத்து ஸரஸ்வதி படிக்க ஆரம்பித்தாள்:
அன்புள்ள ரகுபதிக்கு,
அநேக ஆசீர்வாதம். நீயும், உன் அம்மாவும், சௌ. ஸரஸ்வதியும் சௌக்கியமென்று நம்புகிறேன். தீபாவளிப் பண்டிகை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த வருஷம் தலை தீபாவளி ஆதலால் உன் வரவை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
சௌ. ஸரஸ்வதியின் கச்சேரி அரங்கேற்றத் துக்கு வரமுடியாமல் போய்விட்டது. பத்திரிகைகளில் வெளியான செய்திகளையும், புகைப் படங்களையும் பார்த்து ஆனந்தப்பட்டேன். ஸரஸ்வதியைக் கட்டாயம் உன்னுடன் அழைத்து வரவேண்டும். ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
இப்படிக்கு.
சந்திரசேகரன்.
கடிதத்தைப் படித்து முடித்ததும் ஸரஸ்வதி கபடமில்லாமல் ’கல கல’ வென்று சிரித்து, ‘அத்தை! தலை தீபாவளி அழைப்பு மாப்பிள்ளைக்கா அல்லது எனக்கா என்பது புரியவில்லையே. வெறுமனே பத்துத் தடவை என்னைத்தானே வரும்படி சந்துரு எழுதி இருக்கிறார்?” என்றாள்.
“அவர்கள் வீட்டில் எல்லோருக்கும் உன் பேரில் கொள்ளை ஆசை. சாவித்திரியின் அம்மாவுக்குச் சதா உன் பேச்சுத்தான். சீதாவும் கல்யாணத்தின்போது எப்படி ஒட்டிக்கொண்டு இருந்தாள் பார்த்தாயா? நமக்கென்று வந்து வாய்த்திருக்கிறதே அந்தப் பெண் தான் அவர்கள் வீட்டிலேயே அலாதியாக இருக் கிறது!” என்று ஸ்வர்ணம் கூறிவிட்டு, “எப்பொழுது அவர்கள் மதித்துக் கடிதம் போட்டிருக்கிறார்களோ அவசியம் நீயும் ரகுபதியும் போய்விட்டு வாருங்கள். இந்தச் சந்தர்ப்பத்திலாவது இருவரின் மனமும் மாறி ஒற்றுமை ஏற்படட்டும்” என்றாள்.
ஸரஸ்வதி கடிதத்தை மறுமுறை மனதுக்குள் படித்துக் கொண்டாள். ‘இவருக்கென்ன என்னிடம் அலாதி அன்பு? வருந்தி வருந்தி அழைக்கிறாரே. ஒரு வேளை அவருக்கு என்னை-‘ என்று நினைத்த ஸரஸ்வதியின் மனம் அதற்குமேல் ஒன்றையும் யோசியாமல் தயங்கியது. பிறகு ஸ்வர்ணத்தை நிமிர்ந்து பார்த்து, “அத்தான் அவசியம் போக வேண்டியதுதான் அத்தை. நான் எதற்கு?” என்று கேட்டாள்.
” உன்னை வரச் சொல்லி அந்தப் பிள்ளை எழுதி இருக்கிறானே. முன்பு அவர்கள் இங்கு வந்திருந்தபோதும் கூப்பிட்டார்கள். போய் விட்டுத்தான் வாயேன், ஸரஸு” என்றாள் ஸ்வர்ணம்.
ஸ்வர்ணம் கூறுவதைச் சரியென்று ஸரஸ்வதியின் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. ‘ஏற்கனவே. என்னால் கணவன் – மனைவி இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு, அதனால் பிறந்தகம் போயிருக்கிறாள் சாவித்திரி. ஊரிலும் என்னைப் பற்றியே தான் அவள் குடும்பத்தார் பழி கூறிக்கொண்டிருப்பார்கள். சில விஷயங்களில் ஆண்களின் சுபாவம் பரந்த நோக்கமுடையதாக இருக்கும். ஆகவே, சந்துரு என்னையும் வரும்படி கூப்பிடுகிறார். இதைப்போய்ப் பிரமாதமாக நினைத்துக்கொண்டு போவது தவறு’ என்று ஸரஸ்வதி தீர்மானித்துக்கொண்டாள்.
வெளியே சென்றிருந்த ரகுபதி திரும்பியதும் ஸ்வர்ணம் மறுபடியும் கடிதத்துடன் அவன் அருகில் சென்று உட்கார்ந்து கொண்டாள். தீவிரமான யோசனையில். ஈடுபட்டிருக்கும் மகனின் முகத்தை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டே, “ரகு! என் பேரில் கோபமோ, வருத்தமோ வைத்துக் கொள்ளாதே. விரோதத்தை வளர்த்துக்கொண்டே போனால் அது வளர்ந்து கொண்டுதான் வரும். எதையும் பாராட்டாமல் தள்ளிவிட்டோ மானால் – விரோதம் வளர்வதற்கு இடமில்லையப்பா. தலை தீபாவளிக்கு மாப்பிள்ளை வர வேண்டும் என்று ஆசைப்பட்டுத் தான் அந்தப் பிள்ளை கடிதம் போட்டிருக்கிறான். அவன் அழைப்பிலே எல்லோருடைய அழைப்பும் கலந்திருப்பதாக பாவித்துப் போய்வா. நான் தான் எவ்வளவு காலம் சாஸ்வதமாக இருக்கப் போகிறேன்? ’தாய்க்குப் பிறகு தாரம்’ என்று சொல்லுவார்கள். எனக்குப் பிறகு உன்னைப் பார்த்துக் கொள்ள வேண்டியவள் சாவித்திரிதான். அவளும் சிறியவள். உலகம் தெரியவில்லை. என் வார்த்தையைத் தட்டாதே. ரகு!” என்று உருக்கமாகக் கூறிவிட்டு மகனின் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தாள்.
தாயின் கையிலிருந்த கடிதத்தைத் திருப்பிப் பார்த்துக் கொண்டே , ”ஸரஸ்வதியும் வருகிறாள் இல்லையா?” என்று கேட்டான் ரகுபதி.
“உன்னுடன் ‘போய் வா’ என்றுதான் சொன்னேன். அவளுக்குத்தான் தனியாக ஏதோ லட்சியம், கொள்கை என்றெல்லாம் இருக்கிறதே. அவள் என்ன சொல்லப் போகிறாளோ?” என்றாள் ஸ்வர்ணம்.
இதுவரையில் இவர்கள் பேச்சில் தலையிடாமல் கையிலிருந்த “மீரா பஜனை’க் கீர்த்தனங்களில் லயித்திருந்த ஸரஸ்வதி, அத்தையைப் பார்த்து, ”இந்த விஷயத்தில் என்னை இரண்டு பேரும் மன்னித்துவிடுங்கள். இன்றைய தினசரியில், அப்பா சர்க்கார் வேலையாக, அயல் நாட்டிலிருந்து சென்னை வந்து. மைசூர் போவதாகச் செய்தி வந்திருக்கிறது. நானும் மைசூர் போகப் போகிறேன், அத்தை. அத்தான் மட்டும் போய்வரட்டும். என்ன அத்தான் நான் சொல்கிறது?” என்று கேட்டாள்.
மூன்று வருஷங்களுக்கு மேலாகத் தகப்பனாரைப் பாராமல் இருந்த பெண்ணைத் தடை செய்வது நியாயம் என்று தோன்றாமல் போகவே ஸ்வர்ணமும், ரகுபதியும் ஸரஸ்வதியை அதற்கு மேல் வற்புறுத்த வில்லை. அத்துடன் ஸரஸ்வதியிடம் ஒரு சிறப்பான அம்சம் உண்டு. மனத்துக்குப் பிடிக்காத விஷயமாக இருந்தாலும் சரி, கொள்கைக்கு முரணாக இருந்தாலும் சரி, அதனால் எவ்வளவு நன்மை ஏற்படுவதானாலும் விட்டுக் கொடுக்க மாட்டாள். ஸரஸ்வதி, சாவித்திரியின் வீட்டுக்குப் போனால் சட்டென்று சமரஸம் ஏற்பட்டுவிடும். சமத்காரமாகப் பேசி எல்லோர் மனதையும் கவர்ந்துவிடுவாள். பழைய விரோதத்தை எல்லோரும் மறந்துவிடுவார்கள். ஆனால் சாவித்திரி புக்ககத்தில் இருந்த நான்கு மாதங்களில் ஒரு தினமாவது ஸரஸ்வதியிடம் இன்முகமாகப் பேசியதில்லை. அவளாகவே வலுவில் சென்று சாவித்திரியிடம் பேசினாலும், அவளை மதிப்பதில்லை. கடைசியாக சாவித்திரி ஊருக்குப் புறப்படுவதற்கு முதல் நாள் அன்புடன் அவள் கேட்டுக் கொண்டதைக்கூடப் பாராட்டாமல் சென்ற பெண்ணுடன், நேருக்கு நேர் நின்று, ‘நான் வந்திருக்கிறேன், பார்! அழையா வீட்டுக்குச் சம்பந்தியாக!’ என்று கூறிச் செல்வதற்கு வெட்கமாக இராதா? அசட்டுக் கௌரவமும், முரட்டுப் பிடிவாதமும் உடைய பெண்ணிடம் போய் கைகட்டி நிற்கும் படியான நிலைமை ஸரஸ்வதிக்கு ஏற்படவில்லை. ‘ என்னை இரண்டு பேரும் மன்னித்துவிடுங்கள்’ அவள் அத்தையிடம் கேட்டுக் கொண்ட பாவனை-யிலிருந்து அவள் மனத்தில் ஓடும் எண்ணங்களை ஸ்வர்ணம் ஒருவாறு ஊகித்துக் கொண்டாள்.
‘ இந்த மட்டும் பிள்ளையாவது தீபாவளிக்குப் போகிறேன் என்று ஒப்புக் கொண்டானே’ என்று ஸ்வர்ணம் ஆறுதல் அடைந்தாள்.



