
இருளும் ஒளியும்
சரோஜா ராமமூர்த்தி
15. ‘மாலே மணி வண்ணா !’
பல நாள் முயற்சியின் பேரில் ரகுபதி அந்த ஊரில் ஒரு சிறு சங்கீத மண்டபம் கட்டி முடித்திருந்தான். அதன் திறப்புவிழாவை அவன் வெகு விமரிசையாகக் கொண்டாட வேண்டும் என்றும் தீர்மானித்திருந்தான். மனைவியுடன் வெகு உற்சாகமாக அவன் அந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பியதில் வியப்பு ஒன்றுமில்லை. ஆனால், பிறந்தகம் சென்ற சாவித்திரி மூன்று மாதங்களாகியும் அவனுக்கு ஒரு கடிதங்கூடப் போடாததை நினைத்துத்தான் அவன் மனம் சதா ஏங்கிக்கொண்டிருந்தது. ‘சௌக்கியமாக ஊர் போய்ச் சேர்ந்தேன்’ என்று கடிதம் போடும்படி அன்று ரெயிலடியில் அவளிடம் தான் கேட்டுக்கொண்டும் அவள் தன்னை மதிக்கவில்லையே என்று ரகுபதி எண்ணி வருந்தாத நாளில்லை. ஆசையுடன் வாங்கிவந்த வீணை அவன் அறையில் ஒரு மூலையில் கேட்பாரற்றுத் தூசி படிந்து கிடந்தது. அன்று நடந்த ஒரு சிறு சம்பவம் மனைவியையும் கணவனையும் பிரித்து எவ்வளவு பெரிய பிளவை ஏற்படுத்திவிட்டது! குடும்ப வாழ்க்கையில் இன்பமும், அமைதியும் நிலவ வேண்டிய நாட்களில் மன அமைதி குறைந்து வாழ்க்கையில் கசப்பல்லவா ஏற்பட்டிருக்கிறது?
மன நிம்மதியை இழந்த ரகுபதி தன் அறைக்குள் மேலும் கீழுமாக உலாவிக்கொண்டே சிந்தனையில் மூழ்கி இருந்தான். எதிரே மேஜைமீது திறப்பு விழாவுக்காக அனுப்ப வேண்டிய அழைப்பிதழ்கள் வைக்கப்பட்டிருந்தன. தான் நடத்தப் போகும் இந்த விழாவைக் குறித்துத் தன் மாமனாருக்கும் அன்றைய தபாலில் நான்கு வரி ஒரு கடிதம் எழுதிப் போட்டிருந்தான். அதில் அவரைக் கட்டாயம் வரவேண்டும் என்றும் எழுதி இருந்தான். ஒருவேளை பெண்ணைச் சமாதானப்படுத்தி அவர் அழைத்து வந்தாலும் வரலாம் அல்லவா? சாவித்திரி தன் தகப்பனாருடன் வந்துவிட்டால் பழைய விஷயங்களை எல்லாம் மறந்துவிடவேண்டும். அதைப்பற்றித் தப்பித் தவறிக் கூட அவளிடம் பிரஸ்தாபிக்கக்கூடாது என்று ரகுபதி தீர்மானித்துக் கொண்டான்.
அவன் சிந்தனையைக் கலைப்பது போல் கீழே பூஜை அறையை மெழுகிப் படத்தருகில் வித விதமாகக் கோலம் போட்டுக்கொண்டே மெல்லிய குரலில் ஸரஸ்வதி பாடிக் கொண்டிருந்தாள். மாடியில் ரகுபதியின் அறைக்கு வெளியே இருக்கும் வராந்தாவில் நின்று பார்த்தால் அறையும் நன்றாகத் தெரியும். குந்தலவராளி ராகத்தில் உருக்க மாக “மாலே மணி வண்ணா’ என்கிற ஆண்டாளின் பாசுரத்தை அவள் பாடுவதைக் கேட்டு வராந்தாவின் கைப்பிடிச்சுவர் மீது சாய்ந்து நின்றுகொண்டு அதை ரசிக்க ஆரம்பித்தான் ரகுபதி. அப்பொழுது மாலை நேரம். எல்லோர் வீட்டிலும் விளக்கேற்றி விட்டார்கள். வித விதமாக ஆடைகள் உடுத்து இளம் பெண்களும் சிறுமிகளும் கையில் குங்குமச் சிமிழுடன் ஊரழைக்க வெளியே புறப்பட்டுக்கொண்டிருந்தனர். இன்று என்ன விசேஷம்?’ என்று ரகுபதி யோசித்தான்.
“ஓஹோ! நவராத்திரி – ஆரம்பம்போல் இருக்கிறது. கல்யாணம் நடந்த வருஷத்தில் மங்களகரமாகக் கணவனுடன் இருந்து பண்டிகைகள் கொண்டாட வேண்டியவள் பிறந்தகத்தில் – போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள்! ஆயிற்று, நவராத்திரி முடிந்ததும் தீபாவளி வரும். இந்தத் தீபாவளி தலை தீபாவளி ஆயிற்றே?. மாமனார் வீட்டிலிருந்து பலமாக அழைப்பு வரும்! பெட்டி நிறையப் பட்டாசுக் கட்டுகளும் ஆருயிர் மனைவிக்கு வண்ணச்சேலையும் வாங்கிப் போகவேண்டியது தான் பாக்கி.
ரகுபதிக்கு எதையோ, என்னவோ நினைத்து நினைத்துத் தலையை வலிக்க ஆரம்பித்தது. அவன் சிந்தனையைக் கலைத்து அவன் தாய், “ரகு!” என்று ஆதரவுடன் கூப்பிட்டாள். திடுக்கிட்டு அவன் திரும்பிப் பார்த்தபோது ஸ்வர்ணம் அவனுக்கு வெகு அருகிலேயே நின்றுகொண்டிருப்பதைக் கண்டான்.
“ஏண்டா அப்பா! திறப்பு விழாவுக்காவது சாவித்திரி வந்துவிட்டால் தேவலை. நாம்தான் பேசாமல் இருக்கிறோம். ஊரில் நாலுபேர் கேட்பதற்குப் பதில் சொல்ல முடியவில்லையே. உன் மாமனாருக்காவது ஒரு கடிதம் எழுதிப் பாரேன்” என்றாள்
ஸ்வர்ணம்.
“அவருக்கு இன்று தான் ஒரு கடிதம் எழுதிப்போட்டேன்” –வரட்சியுடன் பதிலளித்த மகனின் முகத்தைப் பார்த்ததும் ஸ்வர்ணத்தின் மனம் உருகியது. இப்படிச் செய்வதுதான் நல்லது. இது தான் உடம்புக்கு ஒத்துக்கொள்ளும். நான் சொல்வதை நீ கேட்டுத்தான் ஆகவேண்டும்’ என்று குழந்தையில் அதட்டித் திருத்தி அவள் வளர்த்த மகன்தான் ரகுபதி. இருந்தாலும், இன்று அவன் மனத்துக்கு நல்லது கெட்டது தெரிந்திருக்கிறது. அதிகமாக அவனை ஒன்றும் சொல்ல முடிய வில்லை. அப்படிச் சொல்லித் திருத்துவதற்கும் பிரமாதமாகத் தவறு ஒன்றும் அவன் இழைத்துவிடவில்லை. இந்தப் பிளவு – இந்த வைராக்கியம் – ஒரு வேளை நீடித்து நிலைத்துவிடுமோ? அப்படியானால், அவள் ஒரே மகன் வாழ்க்கை முற்றும் இப்படித் தான் ஒண்டிக் கட்டையாக நிற்கப்போகிறானா? ஸ்வர்ணத்தின் நெஞ்சை யாரோ கசக்கிப் பிழிவது போன்ற வேதனையை அநுபவித்தாள்.
பெற்ற அன்னை மகனைப் பாலூட்டி, சீராட்டி வளர்க்கிறாள். அவன் அறிவு பெற அரிய கதைகளை மனதில் பதியும்படி கூறுகிறாள். பள்ளிக்கு அனுப்புகிறாள். அவன் கல்வியில் தேர்ந்து பட்டம் பெற்று வரும்போது திருஷ்டி கழிக்கிறாள். பொங்கிப் பூரிக்கிறாள். அவனுக்கு ஆசையோடு மணம் முடித்து வைத்துப் பேரன் பேத்தியோடு குலம் தழைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறாள். நடு நடுவில் குடும்பங்களில் சிறு பூசல்கள் எழலாம். மாமியாரும், மரு மகளும் சண்டை போட்டுக்கொண்டு விலகி வாழலாம். இவை தினமும் நடக்கின்றன. பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், மகன் நல்வாழ்வு வாழவேண்டும் என்று எண்ணிய அன்னையின் உள்ளத்தில் அந்த ஆசை, சண்டை – பூசல்களுக் கிடையில் நிலைத்துத்தான் இருக்கும். அதன் முன்பு மற்றச் சிறு வியவகாரங்கள் மறைந்து போகின்றன; தெளிந்த கங்கையில் கழுவப்படும் மாசுமறுக்களைப்போல!
கீழே கூடத்தில் கலகலவென்று சிரித்துக்கொண்டே நாலைந்து பெண்கள் வந்தார்கள்.
“ஸரஸ்வதி! புது சங்கீத மண்டபத்தில் உன்னுடைய கச்சேரியாமே! என்ன பாட்டுகள் பாடப் போகிறாயடி?” என்று ஒருத்தி கேட்டாள்.
“அதெல்லாம் முன்னாடி சொல்லுவாளா? நாளைக்கே பெரிய பாடகியாகி ‘தேசிய’ நிகழ்ச்சியில் பாடினாலும் பாடுவாள். இப்பொழுது சாதாரண ஸரஸ்வதியாக இருக்கிறவள் அப்பொழுது கான ஸரஸ்வதியாகவோ, இசைக் குயிலாகவோ மாறிவிடுவாள் இல்லையா? ‘நீ யார்? எந்த ஊர்?’ என்று உன்னைப் பார்த்துக் கேட்டாலும் கேட்பாள். இல்லாவிடில் எல்லோருக்கும் பொதுவாக ஒரு ‘நமஸ்காரம்’ போட்டுவிட்டுக் காரில் போய் ஏறி உட்கார்ந்து காண்டாலும் கொள்வாள்!” என்றாள் இன்னொருத்தி.
அவள் பேசி முடித்ததும் எல்லோரும் ‘கலி’ ரென்று சிரித்தார்கள்.
“அப்படியெல்லாம் பண்ண மாட்டாள் ஸரஸ்வதி. இன்றைக்கு மாத்திரம் என்ன, அவள் பெரிய பாடகி ஆவதற்கு வேண்டிய தகுதி இல்லையா? குடத்துள் விளக்காக இருக்கிறாள். தன்னைப்பற்றி அதிகம் வெளியிலே சொல்லிக்கொள்ளவே அவளுக்கு வெட்கம்!” – முதலில் பேசிய பெண் ஸரஸ்வதிக்காகப் பரிந்து பேசினாள்.
இவர்கள் பேச்சுக்குப் பதில் கூறாமல் ஸரஸ்வதி புன்சிரிப்புடன் கம்பளத்தை எடுத்து விரித்து அவர்களை அதில் உட்கார்ந்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டாள். பிறகு, அங்கிருந்த பெண்கள் பூஜை அறையைக் கவனித்துவிட்டு, “இந்த வருஷம் ஏன் பொம்மைகளை அதிகமாகக் காணோம்? சாவித்திரி எப்பொழுது பிறந்தகத்திலிருந்து வருவாள்?” என்றெல்லாம் கேட்க ஆரம்பித்தார்கள். அங்கே நின்று பேசினால் மேலும் அவர்கள் ஏதாவது கேட்டுக்கொண்டே இருப்பார்கள் என்று நினைத்து, ஸரஸ்வதி பூஜை அறைக்குள் சென்று தட்டில் வெற்றிலை பாக்கு, பழத்துடன் வெளியே வந்தாள். வந்த பெண்கள் எல்லோரும் தாம்பூலம் பெற்றுக்கொண்டு வெளியே போய் விட்டார்கள்.
மாடியிலிருந்து அந்தப் பெண்கள் பேசியதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ரகுபதி நிதானமாகக் கீழே இறங்கி வந்தான். பூஜை அறை வாயிற்படியில் நின்றிருந்த ஸரஸ்வதியைப் பார்த்து, “சங்கீத மண்டபத்தில் உன்னுடைய கச்சேரிக்கு ஏற்பாடு ஆகி இருக்கிறதுபற்றி உனக்குத் தெரியுமா ஸரஸு? அதைப்பற்றி அழைப்பிதழ்களில் கூட வெளியிட்டிருக்கிறோமே! பத்திரிகைகளிலும் விளம்பரம் வந்திருக்கிறது” என்று சொன்னான்.
“இதெல்லாம் எதற்கு அத்தான்? நான் என்றும் சாதாரண ஸ்ரஸ்வதியாகவே இருக்கிறேனே. நீ ஏன் இப்படி அமர்க்களப் படுத்துகிறாய்?” என்று கேட்டாள் ஸரஸ்வதி, குழந்தையைப் போல.



