இருளும் ஒளியும்
சரோஜா ராமமூர்த்தி

37. விமோசனம் உண்டா ?

சந்துரு தன் தாயிடம் கூறியபடி ரகுபதியைப் பார்த்து முடிவாக விஷயங்களை ஒழுங்குபடுத்துவது என்கிற தீர்மானத்துக்கு வந்து விட்டான். ஸரஸ்வதி இருந்தால் இந்த விஷயத்தில் மிகவும் உதவி செய்வாள் என்றும் நம்பினான். பலவிதமான குழப்பங்களுக்கிடையில் ஸரஸ்வதியின் அழகிய முகமும், கருணை ததும்பும் கண்களும் அவன் மனத்தைப் பூரிக்கச் செய்தன. ஸரஸ்வதியை எதிர்பாராமல் கிராமத்தில் சந்தித்தால் அவன் ஆசை பூர்த்தி ஆகிவிடும். ஆகவே உற்சாகத்துடன் சந்துரு கிராமத்துக்குக் கிளம்பினான்.

இடையில் ஸரஸ்வதி கிராமத்தின் முக்கியமான இடங்களை எல்லாம் சுற்றிப் பார்த்தாள். தங்கமும், அவளும் ஆந்திரீகமாகக் கூடிப் பேசினர். ரகுபதி தன்னிடம் அசட்டுத்தனமாக நடந்து கொண்டதையெல்லாம் தங்கம் ஸரஸ்வதியிடம் விவரித்தாள், கோவிலில் புஷ்பக் குடலையைப் பற்றி அவன் இழுத்ததையும், தான் அவனைக் கடிந்து பேசினதையும் கூறிவிட்டுத் தங்கம், ’பாவம்’ என்று வருந்தினாள்.

இதையெல்லாம் கேட்டபோது ஸரஸ்வதியின் மனம் வெட்கத்தால் குன்றிப்போனது. உயர்ந்த லட்சியவாதியாகிய ரகுபதி குறுகிய காலத்துக்குள் இவ்விதம் மாறிவிட்டான் என்பதை அவளால் நம்பவே முடியவில்லை. தங்கத்தின் மாசற்ற குணத்தையும், உறுதியையும் கண்டு வியந்தாள்.

”தங்கம்! உன்னை நான் ஊரில் ஒரு தடவை நீ புத்திசாலி என்று தெரிவித்தேனே. அந்த வார்த்தை பொய்க்கவில்லை. நீ ரொம்பவும் புத்திசாலி. மிகுந்த கெட்டிக்காரி. சாவித்திரியைப் பாராமல் உன்னை முதலில் நான் பார்த்திருந்தால் அத்தானுக்கு உன்னையே கல்யாணம் செய்து வைத்திருப்பேன், இவ்வளவு சங்கடங்கள் ஏற்பட்டிருக்காது” என்று பாராட்டினாள் ஸரஸ்வதி.

“போ, அக்கா! நீதான் என்னைக் கெட்டிக்காரி என்று கொண்டாடுகிறாய் புத்திசாலி என்று புகழ்ந்து பேசுகிறாய். நான், பெற்றவர்களுக்கும் உறவினர்காருக்கும் பாரமாக இருக்கிறேன். எனக்குக் கல்யாண ஆகவில்லையே என்று அம்மா வீட்டைவிட்டு வெளியிலேயே வருவதில்லை. பெரியம்மா வேறு மரம்மாதிரி நிற்பதாகச் சொல்கிறாள். கன்னிப்பெண், வாழாமல் வீட்டுடன் இருப்பதால் தான் தரித்திரம் பிடுங்குவதாக பெரியம்மா கோபித்துக்கொள்கிறாள். எனக்கு விமோசனம் ஏற்படுமா அக்கா? என்னை மணந்துகொள்ள யாராவது முன் வருவார்களா?” என்று கண்ணீர் வழியக்கேட்டு, ஸரஸ்வதியின் மடியில் முகத்தைப் புதைத்துக்கொண்டு தேம்பினாள் தங்கம்.

ஸரஸ்வதியின் மனம் துடித்துப் போய்விட்டது. ‘எல்லா வசதிகளும் இருக்கும் என்னைக் கல்யாணம் செய்து கொள்ளும்படி அப்பா மைசூரில் பன்முறை கேட்டாரே. இன்றைக்கு ‘சரி’யென்று தலை அசைத்தால் கல்யாணம் நடந்துவிடும். அப்பாவை அழைத்து வந்து இந்தப் பேதைப் பெண்ணைக் காட்டாமல் போனேமே. வாழ வழி தெரியாமல் ஆயிரக் கணக்கில் பரிதவிக்கும் தமிழ் நாட்டுக் கன்னிகைகளைத் தங்கம் ஒருத்தியின் மூலமாகப் பார்த்துவிடலாம். இப்படி இருக்கும் போது எனக்கு என்ன கல்யாணத்துக்கு அவசரம்? பணமில்லையா? அழகில்லையா? எனக்குக் கல்யாணம் நடக்காமல் போய்விடுமா? தங்கத்துக்குத்தான் முதலில் வாழ வழி செய்யவேண்டும். ஆமாம்!’ என்று ஸரஸ்வதி தனக்குள் பேசிக்கொண்டாள்.

மடியில் முகத்தைப் புதைத்துக்கொண்டிருக்கும் தங்கத்தின் முகத்தைப் பரிவுடன் நிமிர்த்தி, “தங்கம்! கட்டாயம் உனக்குக் கல்யாணம் நடக்கும். உனக்கு நல்ல கணவன் கிடைப்பான். என் மனம் அவ்விதம் கூறுகிறது. அதை நம்புகிறேன். அழாதே அம்மா!” என்று தேற்றினாள்.

தங்கம் மறுபடியும் தன் முத்துப் போன்ற பற்கள் தெரிய நகைத்தாள்.

”இந்த ஊரில் உள்ள குடியான ஜனங்களும் அப்படித்தான் சொல்கிறார்கள், அக்கா. அர்ச்சுனராஜா மாதிரி எனக்குப் புருஷன் கிடைப்பானாம். திடமான நம்பிக்கையுடன்
சொல்கிறார்கள்; நீயும் சொல்கிறாய் அக்கா!” என்றாள்.

ஸரஸ்வதி அர்த்த புஷ்டியுடன் தலை அசைத்து, “ஏழை ஜனங்கள் உள்ளார்ந்த அன்புடன் கூறும் வாக்கு பொய்க்காது. உள்ளம் நிறைந்து பேசுகிறார்கள். தங்கள் எதிரில் வளர்ந்து பெரியவளான நீ நன்றாக வாழவேண்டும் என்று விரும்பு கிறார்கள்” என்று கூறினாள்.

சோர்ந்திருந்த தங்கத்தின் மனத்தில் உற்சாகம் குமிழியிட்டது. ”அக்கா! நீயும், நானும் சேர்ந்து பாடி எவ்வளவு நாட்களாயின? பாடலாமா அக்கா?” என்று கேட்டாள்.

“ஆஹா, பாடவாம்”” என்று ஸரஸ்வதி ஆமோதித்ததும் அந்த வீட்டுக் கூடத்திலிருந்து இன்னிசை பெருகியது.

”பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள்
மாமயில் மீது மாயமாய் வந்தான். …”

பாடிக்கொண்டே தங்கம் சிந்தித்தாள். ‘பரம ஏழையாகிய எனக்கு நல்ல கணவனாக ஒருவன் கிடைப்பான் என்று ஸரஸு அக்கா சொல்கிறாள். மாயமாக அந்த ‘ஒருவன்’ என்று வருவானோ? அவன் எப்படிப்பட்டவனோ? முருகவேள் அதற்குக் கிருபை செய்வானா?” என்று பலவாறு நினைத்தாள் அவள்.

நல்லவர்களை வாழ்விக்கும் இறைவன் அருள் புரிந்தான். தெருவில் வந்து நின்ற வண்டியிலிருந்து சந்துரு இறங்கி உள்ளே வந்தான். இதுவரையில் அறையில் உட்கார்ந்திருந்த ரகுபதி, தங்கமும், ஸரஸ்வதியும் பாடுவதைக் கேட்டுக் கூடத்தில் வந்து உட்கார்ந்திருந்தான். சந்துருவின் வரவை யாரும் எதிர்பார்க்க வில்லை. ஒரு நிமிஷம் ரகுபதியின் மனத்தில் கோபம், ரோஷம், வெட்கம், அவமானம் முதலிய உணர்ச்சிகள் தோன்றின. தலையைக் குனிந்து உதட்டைக் கடித்துக்கொண்டே உட்கார்ந்திருந்தான் அவன்.

வீட்டுக்கு வந்தவர்களை ”வாருங்கள்” என்று வாய்குளிர அழைப்பது நமது சிறந்த குணங்களில் ஒன்று. வரவேற்காத வீட்டு வாசலை மிதிப்பதற்குக்கூட உள்ளம் கூசுகிறது.

சந்துரு தயங்கினான். பாட்டைப் பாதியில் நிறுத்தி விட்டாள் ஸ்ரஸ்வதி. தன் அழகிய கண்களை உயர்த்தி, “நமஸ்காரம், வாருங்கள். ஊரில் எல்லோரும் சௌக்கியந்தானே?* என்று விசாரித்தாள்.

தங்கம் எழுந்து இரண்டெட்டில் உக்கிராண அறைக் கதவருகில் போய் நின்று, வந்தவர் யாராய் இருக்கும் என்று யோசித்தாள். சுருள் சுருளாக வாரிவிடப்பட்ட கேசமும், ஆழ்ந்து சிந்திக்கும் கண்களும் உயர்ந்த உருவமும் கொண்ட அந்தச் சுந்தர புருஷனை, ஆறு முகனேதாள் தனது பிரார்த்தனையைக் கேட்டு அனுப்பி இருக்கிறானோ என்று எண்ணிப் பூரித்துப் போனாள். திடீரென்று எதிர்பாராதவிதமாக –மாயமாக வந்து நிற்கும் புருஷன் – தன்னை வாழ்விக்கத்தான் வந்திருக்கிறானோ என்று எண்ணி எண்ணி மாய்ந்துபோனாள் தங்கம்.

சந்துரு ஸரஸ்வதியைக் கனிவுடன் பார்த்து. “எல்லோரும் சௌக்கியந்தான். அம்மாவுக்குத்தான் உடம்பு சரியில்லை . பலஹீனமாக இருக்கிறாள்” என்று கூறிவிட்டு, “மாப்பிள்ளை! தீபாவளிக்கே நீங்கள் வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன். ஸரஸ்வதியும் வருவாள் என்று அம்மா நினைத்துக் கொண்டிருந்தாள்” என்றான்.

“நான் வந்திருக்கவேண்டியது தான்! அத்தானும், நானும் ரெயிலடி வரையில் ஒன்றாகத் தான் வந்தோம். அவசரமாக என் தகப்பனாரைப் பார்ப்பதற்கு மைசூர் போயிருந்தேன். வராமல் விட்ட பிசகை இப்பொழுது தான் உணர்கிறேன்!” என்றாள் ஸரஸ்வதி.

“யார் பேரில் பிசகிருந்தாலும் அதையெல்லாம் மறந்து மன்னித்துவிடுவதுதான் மனிதப் பண்பு. சாவித்திரி ரொம்பவும் மாறிவாட்டாள். அவள் மனசிலே தன் கணவனை எப்பொழுது சந்திக்கப் போகிறோம் என்கிற ஆவல் மிகுந்திருக்கிறது. தன் செய்கையை நினைத்து வெட்கப்படுகிறாள் என்றே தோன்றுகிறது. ரகுபதி! பெண்ணின் மனத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. ஊருக்குக் கிளம்புவதற்கு முன்பு சீதா என்னிடம் ஒரு சிறு நோட்டுப் புஸ்தகத்தைக் கொடுத்தாள். படித்தேன். நீந்தத் தெரியாதவன் தண்ணீரில் விழுந்து தத்தளிப்பதை யாராவது பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்களா? அவனைக் காப்பாற்ற எப்படியும் முயலுவார்கள். சாவித்திரி கண்ணீர் விட்டுப் பல இரவுகள் அழுதிருக்கிறாள் என்பதை அந்தச் சிறு புஸ்தகம் விளங்க வைத்துவிட்டது.

“மாடியிலே நிலவு வீசுகிறது. களைத்து வீடு வந்த கணவருக்கு நான் எந்த வகையில் இன்பமளித்தேன்? கோபத்தால் பொருமினேன், ஏன்?”

“கணவர் தூங்கிவிட்டார். அமைதியாகத் தூங்குகிறார். அவர் அமைதி என் ஆத்திரத்தைத் தூண்டிவிட்டது. பொறாமைத் தீயில் மனம் வெந்து போகிறது.”

“இன்னும் என்னென்னவோ எழுதி இருக்கிறாள். தன் தவறை உணர்ந்துவிட்டாள் என்றே நினைக்கிறேன். அசட்டுப்பெண்! உங்களுக்குக் கடிதம் எழுதி இருக்கலாம். மனசைக் கொட்டிக் கதறி இருக்கலாம். ஓடிவந்து உங்கள் காலில் விழுந்திருக்கலாம். என் தங்கை குழந்தைப் பருவத்திலிருந்தே பிடிவாதத்தில் வளர்ந்தவள். அந்தப் பிடிவாதமும், போலிக் கௌரவ முந்தான் அவளைத் தடுத்திருக்கவேண்டும்!” என்று சந்துரு விஷயத்தைச் சொல்லிக்கொண்டே போனான்.

ஸரஸ்வதி ரகுபதியைத் திரும்பிப் பார்த்துக் கண்டிப்பு நிறைந்த குரலில், “அத்தான்! அவருடன் ஊருக்குப் புறப்படு, உன் மனைவியை அழைத்துவா, அத்தான். இது பரீக்ஷைக்கூடம் அல்ல; கேள்விகள் தயாரித்துக் கேட்பதற்கும், அவர் பதில்கள் அளிப்பதற்கும். சாவித்திரி தன் குற்றங்களை உணர்ந்து விட்டாள் என்பதே போதுமானது. உன் லட்சியத்தைக் குறுகிய பாதையில் நடத்த வேண்டும் என்பதில்லை. சாவித்திரி ஒருத்தி சங்கீதம் பயின்றுவிட்டால் உன் லட்சியம் நிறைவேறிவிடுமா? ஆர்வத்துடன் சங்கீதத்தைப் பயில்வதற்கு எவ்வளவோ பெண்கள் காத்திருக்கிறார்கள். பரந்த மனப்பான்மையுடன் அவர்களுக்கு உதவி செய்தால் லட்சியம் நிறைவேறிவிடும். இதற்காக இனிக்க வேண்டிய இல்வாழ்வைக் கசப்பாக்கிக் கொள்ளாதே” என்றாள்
ஸரஸ்வதி.

சந்துரு அப்படியே அயர்ந்துவிட்டான். ‘ நாவிலே கலைவாணி நர்த்தனம் புரியும்போது ஸரஸ்வதி ஏன் இவ்வளவு அழகாகப் பேசமாட்டாள்! இந்தப் பெண்ணைப் பார்த்து எப்படி என்னை மணந்து கொள்கிறாயா என்று கேட்பது?’ என்று புரியாமல் விழித்தான் சந்துரு.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *