

அருணகிரியார் – குருபரர் அறிவுரைகள்
சாமி சிதம்பரனார்
ஆசிரியர் முன்னுரை
‘அருணகிரியார்- குருபரர் அறிவுரைகள்’ என்னும் இந்நூல் அருள்நெறித் தொடரில் ஐந்தாவதாக வெளிவருகின்றது. இதில் உள்ள கட்டுரைகளில் பல, சிங்கப்பூர்- தமிழ் முரசு பத்திரிகையில் வெளிவந்தவை. தமிழர் அருள் நெறி என்ற தலைப்பில், மெய் கண்டான் என்னும் பெயரால் என்னால் எழுதப்பட்டவை. பல கட்டுரைகள் இந்நூலுக்கென்றே புதிதாக எழுதப்பட்டவை.
அருணகிரியார் என்பது திருப்புகழ் பாடிய அருணகிரி நாதரைக் குறிக்கும்; குருபரர் என்பது சிற்றிலக்கியங்கள் பல இயற்றிய குமரகுருபர சுவாமிகளைக் குறிக்கும். இவர்களுடைய வரலாற்றுக் குறிப்புக்களை, அருணகிரிநாதர் என்ற தலைப்பிலும், குமரகுருபர சுவாமிகள் என்ற தலைப்பிலும் காணலாம்.
இருவரும் சிறந்த புலவர்கள்; பக்தர்கள்; துறவிகள்; வடமொழிக் கலைகளையும், தமிழ்க் கலைகளையும் கற்றுணர்ந் தவர்கள்.
இருவர் பாடல்களிலும் வடமொழிச் சொற்கள் கலந்து கிடக்கின்றன. குமரகுருபரர் பாடல்களிலே வடமொழியல்லாத வேற்று மொழிச் சொற்களும் உண்டு.
தமிழில் பிற மொழிச் சொற்கள் கலந்தால், தமிழ் கெட்டுப் போய்விடும்; அதன் தனித்தன்மை போய்விடும்; அதன் தூய்மை அழிந்துவிடும்; தமிழே அழிந்து போய் விடும்; என்று சொல்வோர் உண்டு.
இவர்கள் கூற்று, மொழி வளர்ச்சியின் தத்துவத்தை அறியாதார்- அறிந்தும் அதை ஒப்புக்கொள்ளாதவர் கூற்று என்றே கொள்ள வேண்டும். பல மொழி மக்களுடன் கூடிப் பழகுவோரின் தாய்மொழியிலே பிற மொழிச் சொற்கள்- அவர்களுடன் பழகுவோர் மொழியில் உள்ள சொற்கள்- கலந்து தான் தீரும். இதற்கு உதாரணம் ஆங்கில மொழி ஒன்றே போதுமானது. ஆங்கிலத்திலே பல மொழிகள் கலந்ததால் அதன் இலக்கியம் அழிந்துவிடவில்லை; அதன் வளர்ச்சி குறைந்து விடவில்லை. ஆங்கிலேயர் ஆட்சி போய் விட்டாலும், அந்த ஆட்சி இருந்த இடங்களில் எல்லாம் ஆங்கில மொழி நிலைத்து நின்று உலவுகின்றது. ஆங்கிலந்தான் உலக மொழி என்று சொல்லும் அளவுக்கு அது பெருமை பெற்று விட்டது. பிற மொழிக் கலப்பால் ஆங்கிலத்தின் தன்மையும், அதன் மதிப்பும் குறைந்துவிடவில்லை என்பதற்கே இவ்வுதாரணம்.
சிறப்பாகத் திருப்புகழில் ஏராளமாக வடசொற்கள் கலந்து விட்டன. இதனால் தமிழின் தன்மை கெடவில்லை என்பது நிச்சயம்.
மனிதருள்ளே எல்லோருடனும் கூடிப் பழகும் மனிதர்- எல்லோரிடமும் அன்பு காட்டும் மனிதர்- எல்லோரையும் சமமாக நினைக்கும் மனிதர்- மக்களுள் உயர்ந்தவராகக் கருதப்படுகிறார். மக்கள் அனைவராலும் போற்றப்படுகிறார். இப்படிப் பலருடனும் ஒத்துப் பழகுவது- பலருடனும் அன்புடன் கலந்து பழகுவது- உயர்ந்த மனிதப் பண்பு என்று பாராட்டப் படுகின்றது.
மக்களைப் போலவே, அவர்கள் பேசும் மொழியும், அவசியம் நேர்ந்த போது பிற மொழிச் சொற்களை ஏற்றுக் கொள்ளுவதிலே தவறில்லை. அவ்வாறு ஏற்றுக் கொள்ளும் இயல்பு படைத்த மொழியே சிறந்த மொழியும் ஆகும். தமிழுக்கு இத்தகைய இயற்கைப் பெருமையுண்டு.
தமிழ் பண்டைக் காலத்திலிருந்து- பழமையானது என்று அனைவராலும் போற்றப்படும் தொல்காப்பிய காலத்திலிருந்து- வடமொழிச் சொற்களை ஏற்று வந்திருக்கின்றது. தமிழிலே கலந்திருக்கும் வடமொழிச் சொற்கள் தமிழோடு கலந்து தமிழ்ச் சொற்களாகவே ஆகிவிட்டன; உருவத்தில்- ஓசையில்- எல்லாம் தமிழ் மயமாகவே ஆகிவிட்டன. இந்த உண்மையைத் திருப்புகழ் படிப்போர் காணலாம். குமரகுருபரர் பிரபந்தங்களைப் படிப்போர் அறியலாம்.
வடமொழியைத் தமிழில் கலந்து எழுதுவோர் தமிழ்த் துரோகிகள் என்று வசைபாடுவோரும் உண்டு. தமிழ் மக்களுக்குப் புரியாத- தமிழ் மக்களிடையிலே வழங்காத- வடசொற்களை யெல்லாம் வேண்டுமென்றே தமிழுக்குள் திணிப்பது தவறு; அது மொழியை வளர்ப்பது ஆகாது; அத்தகையோர் தமிழைக் கெடுக்கவேண்டும் என்று நினைப்போர்தான் என்று சொல்வதை மறுக்கவில்லை.
ஆனால், தமிழர்க்குத் தெரிந்த வடசொற்கள்- பேசிப் பழகிய வடசொற்கள்- தமிழுடன் கலந்து வருவது இயல்பு. இந்த இயற்கையைக் கட்டுப்படுத்துவது முடியாத காரியம்.
சிலப்பதிகார- மணிமேகலைகளாகிய காவிய காலங்களுக்குப் பின் தோன்றிய தமிழ் நூல்களில் எல்லாம் வடசொற்கள் மிகுதியாக வழங்கியிருக்கின்றன. சிலப்பதிகார மணிமேகலைகளிலும் வடசொற்கள் உண்டு. வட மொழிக்கும் தமிழர்க்கும் ஏற்பட்ட ஒற்றுமை- கூட்டுறவு- இவைகள்தான் இதற்குக் காரணம். தமிழ் நூல்கள் இயற்றிய புலவர்கள் பெரும்பாலும் வடமொழியும் பயின்றவர்கள். ஆதலாலும், அவர்கள் பாடல்களிலே வடசொற்கள் கலந்து நிற்பதில் ஆச்சரியம் இல்லை.
தேவாரப் பாடல்களிலே வடசொற்கள் உண்டு; திவ்வியப் பிரபந்தப் பாடல்களிலே வடசொற்கள் உண்டு; கம்பன் கவிதைகளிலே வடசொற்கள் உண்டு; இராமலிங்க சுவாமிகள் பாடல்களிலே வடசொற்கள் உண்டு. அவைகளைக் காட்டிலும் திருப்புகழிலே வடசொற்கள் கொஞ்சம் அதிகம் அவ்வளவுதான்.
திருப்புகழிலே வடசொற்கள் கலந்திருப்பதனால் பாட்டின் சுவை குறைந்து விடவில்லை. அவைகள் பக்தியைப் புகட்டும் பாட்டுக்களாகத்தான் விளங்குகின்றன; உள்ளத்தை உருக்கும் ஓசை நயத்துடன்தான் உலவுகின்றன. ஆதலால் அவசியங் கருதிப் பிறமொழிச் சொற்களை ஏற்பதனால் எந்த மொழியும் அழிந்து விடாது. வளருமே ஒழியக் குறையாது.
இவ்வுண்மையை உணராதவர்கள்- உணர்ந்தும், உள்ளத்திலே ஏதோ ஒரு வெறுப்பை வளர்த்துக் கொண்டிருப்பவர்கள்தாம், தனித்தமிழ்! தனித்தமிழ்! என்று கூச்சலிடுவார்கள். இத்தகைய கூச்சல்காரர்களால் தமிழ் வளர்ந்ததும் இல்லை. வளரப் போவதும் இல்லை. இது உண்மை.
தமிழிலே இப்பொழுதுள்ள சிரஞ்சீவி இலக்கியங்கள் அனைத்தும் வடமொழிச் சொற்கள் கலந்தவைதான். சில இலக்கியங்களிலே வடசொற்கள் மிகக் குறைவாக இருக்கலாம். அருணகிரியார், வில்லிப்புத்தூரார், குமரகுருபரர், தாயுமானார் போன்றோர் பாடல்களிலே வடசொற்கள் கொஞ்சம் அதிகமாகக் கலந்திருக்கலாம். இதுதான் வித்தியாசம்.
திருப்புகழிலும், பொதுவாக அருணகிரியார் பாடல்களிலும், குமரகுருபரர் பாடல்களிலும் வடமொழிச் சொற்கள் கலந்திருக்கின்றன என்பதற்காக அவற்றை வெறுப்போர் தமிழின் பெருமையை அறியாதவர்கள்- தமிழ்ப் பற்று இல்லாதவர்கள்- என்பதே நமது நம்பிக்கை.
இவ்விருவர் பாடல்களும் ஓசைநயம் பெற்று விளங்குகின்றன; படிப்போர் மனத்தைப் பரவசமாக்குகின்றன. இவ்விருவர் கவிதைகளிலும், மக்கள் வாழ்வை வளம்படுத்தக்கூடிய- மக்கள் அறிவை வளர்க்கக்கூடிய- மக்களை நல்ல நெறியிலே நடக்கும் படி அறிவுறுத்தக் கூடிய- பல கருத்துரைகளும் அடங்கியிருக்கின்றன. அவர்கள் கவிதைகளைப் படிப்போர் இவ்வுண்மைகளை உணரலாம். அவர்களின் பெருமையை- அவர்கள் கவிதைகளின் உயர்வை- மக்கள் உணர வேண்டும்; அக்கவிதைகளைப் படிக்க வேண்டும்; படிப்பதற்குத் தூண்டுகோலாக இருக்க வேண்டும் என்னும் ஆவலுடன் தான் இக்கட்டுரைத் தொகுப்பு புத்தக வடிவில் வெளிவருகின்றது. தமிழன்பர்கள் இதை வரவேற்பார்கள் என்ற நம்பிக்கை நமக்குண்டு.
சாமி. சிதம்பரன்



