
அருணகிரியார் – குருபரர் அறிவுரைகள்
சாமி சிதம்பரனார்
5. விலைமாதர் நடிப்பு
வேசையர் நட்பால் விளையும் தீமையைப் பற்றி அறிஞர்கள் அளவில்லாமல் கூறியிருக்கின்றனர். வேசையர்க்கு விலைமாதர் என்று ஒரு பெயர். அவர்கள் யார் தங்களுக்குப் பொருள் கொடுக்கிறார்களோ அவர்களிடம் அன்பு காட்டு கின்றவர்கள்போல் நடிப்பார்கள். அந்த நடிப்பும் நீண்ட நாட்களுக்கு நிலைத்திராது.
நெய்யிருக்கும் பாண்டத்தைச் சுற்றிலும் எறும்பு மொய்க்கும்; இனிப்புள்ள பண்டங்களைக் கண்டால் ஈக்கள் சூழ்ந்து கொள்ளும். தக்க பாதுகாப்புடன் வைத்திருந்தால்தான் நெய்யை எறும்புகள் அணுகாமல் செய்யலாம்; இனிப்பை ஈக்கள் சூழாமல் செய்யலாம்.
எல்லா வசதியும் படைத்தவர்கள் ஏமாந்திருந்தால் அவர்கள் தலையைத் தடவப் பலர் சூழ்ந்து கொள்வார்கள். பணம் படைத்தவர்களைச் சுற்றிக் கொள்ளாதவர்கள் யாரும் இல்லை.
ஒருவனிடம் நல்ல வாலிப முறுக்கும் இருக்கிறது; தாராளமான பணப் புழக்கமும் இருக்கிறது; அவற்றோடு பிறர் பேச்சிலே – நடிப்பிலே- எளிதிலே ஏமாந்து போகும் இளிச்சவாய்த்தனமும் இருக்கிறது. இத்தகையவர்கள் வஞ்சகர் பிடிப்பிலிருந்து தப்பித்து வாழ்வது அவ்வளவு எளிதன்று.
வஞ்சகர்களிலே மிகவும் கொடுமையானவர்கள் வேசை யர்கள். வறுமை காரணமாக வேசித் தொழிலை மேற்கொண்டி ருக்கிறவர்கள் எவ்வளவுதான் நீதிநெறிகளை உணர்ந்தவர்களா யிருந்தாலும் அவர்கள் கொடுந்தன்மை யுள்ளவர்களாக மாறித்தான் ஆகவேண்டும். தன்னை யடைந்தவர்களின் செல்வத்தை ஈவிரக்கமற்ற முறையிலே எப்படியாவது பறித்துக் கொள்ளும் வித்தையிலே தேர்ச்சி பெறத்தான் வேண்டும்; அப்பொழுதுதான் அவர்கள் வாழ்வு நடக்கும்; இல்லா விட்டால் அவர்கள் வாழ முடியாது. வறுமை காரணமாக, வழுக்கி வீழ்ந்த சகோதரிகள் இம்மாதிரி மனிதத் தன்மையையே மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடுகின்றது.
வேசித் தொழில்- விபசாரத் தொழில்- எந்தக் காலத்தில் ஏற்பட்டதென்று கூற முடியாது. நீண்ட நெடுங்காலமாக அத்தொழில் இருந்துதான் வருகின்றது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, கணிகையர்- விலை மகளிர்- பொது மகளிர்- என்ற ஒரு கூட்டத்தார் இருந்து வந்திருக்கின்றனர். இக்கூட்டம் வளர்ந்து வந்ததற்குக் காரணம், பெருநிலக் கிழவர்கள்- சிற்றரசர்கள்- பேரரசர்கள்- வாழ்க்கை வசதி படைத்த பெரிய மனிதர்கள் என்றுதான் கூறவேண்டும்.
விலைமாதரைப் பற்றிச் சேக்கிழார் என்னும் பெரும் புலவர் – பெரியபுராண ஆசிரியர் – பதியிலார் என்று குறிப்பிடுகின்றார். பதியிலார்: கணவன் அற்றவர்கள்; காதலன் இல்லாதவர்கள்; தலைவன் இல்லாதவர்கள்; தங்களுக்குத் தாங்களே தலைவர்களாயிருப்பவர்கள்; அவர்கள் யாருக்கும் கட்டுப்பட்டவர்கள் அல்லர். அவர்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்ற விரிந்த பொருளைக் கொண்டது பதியிலார் என்னும் சொல்.
வேசையர்களின் கூட்டுறவைப் பற்றி- அதனால் வரும் அல்லல்களைப் பற்றி- திருக்குறள் முதல் பல நூல்களும் விளக்கமாகக் கூறுகின்றன. ஒழுக்கக் கேட்டில்- தீயொழுக்கத்தில்- பஞ்சமா பாதகங்களில்- வேசையர் கூட்டுறவும் ஒன்று என்று அறநூல்கள் அறிவிக்கின்றன. ஆயினும் இத்தீமையைப் பற்றி விரிவாக எடுத்துரைப்பதில் திருப்புகழுக்கு இணையாக வேறொன்றையும் சொல்ல முடியாது. திருப்புகழைப் பாடிய அருணகிரிநாதர் ஆரம்பத்தில் பெருங் காமுகராயிருந்தார். விலைமாதர் நட்பையே விரும்பித் திரிந்தார்; அதனால் உடல் நோயும் உளநோயும் பெற்றார். பிறகுதான் அந்தத் தீயொழுக்கத்தை வெறுத்தார். முருகனிடம் அன்பு கொண்டார்; அடியவரானார்; திருப்புகழ் முதலிய நூல்களைப் பாடினார் என்று வரலாறு வழங்குகின்றது.
இதனால் அருணகிரிநாதர் விலை மாதர்களைப் பற்றிக் கூறுவனவெல்லாம் வெறும் கற்பனையல்ல; வீட்டில் இருந்தபடி எண்ணிப் பார்த்து எழுதப்பட்டவையல்ல; தாம் அனுபவித்த- கண்ணாற் கண்டறிந்த- உண்மையை அப்படியே உரைப்பன என்று கொள்ளலாம். இதில் தவறில்லை. வேசையர் மீது எழும் ஆசையிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று முருகனிடம் முறையிடும் அவர் பாடல்கள் நமது உள்ளத்தை உருக்குவன; விலைமாதர் மோகத்திலே ஈடுபட்டவர்கள் படிப்பார்களானால் அவர்களை நன்னெறியிலே நடக்கும்படி செய்வன.
அருணகிரிநாதர் தன்னையே வேசையர் வெறியனாக வைத்துக்கொண்டு பாடுகின்றார். அப்பாடல்களில் ஒன்று கீழ்வருவது:-
வடத்தை மிஞ்சிய புளகித வனமுலை
தனைத் திறந்து, எதிர் வரும் இளைஞர்கள் உயிர்
மயக்கி, ஐங்கணை மதனனை ஒருஅரு – மையினாலே
வருத்தி வஞ்சக நினைவொடு, மெலமெல
நகைத்து, நண்பொடு வரும்இரும் எனஉரை,
வழுத்தி அங்கவ ரொடுசரு வியும்உடல் – தொடு போதே
விடத்தை வென்றிடு படைவிழி கொடும்உளம்
மருட்டி, வண்பொருள் கவர்பொழு தினில்மயல்
விருப்பெனும்படி மடிமிசை யினில்விழு- தொழில் தானே.
விளைத்திடும். பல கணிகையர் தமதுபொய்
மனத்தை நம்பிய சிறியனை, வெறியனை
விரைப்ப தந்தனில் அருள் பெற நினைகுவது –
உளதோதான்
என்பது திருப்பரங்குன்றத் திருப்புகழ். ஒரு பாடலின் முன் பகுதி இது. இதன் பின்பகுதியிலே முருகனுடைய பெருமையும் புகழும் உரைக்கப்படுகின்றன. மேலே காட்டிய முதல் பகுதியில் வேசையர் பண்பு விளக்கமாகக் கூறப்பட்டிருக்கின்றது.
விலைமாதர்கள் தங்கள் மார்பைத் திறந்து போட்டிருப்பதற்கு நாணம் அடைய மாட்டார்கள். முத்து ரத்தினம் முதலியவற்றாலாகிய மாலைகளுக்கு மேலாக விளங்குகின்ற பருத்த மார்பைத் திறந்து கிடக்கும்படி செய்து கொள்வார்கள்; இப்படிச் செய்வதன் மூலம் தன் எதிரில் வரும் இளைஞர்களின் உள்ளத்தையும், உயிரையும் தம் வசமாக்கிக் கொள்ளுவார்கள்.
இளைஞர்களை மட்டுமா? மன்மதனைக் கூட ஒப்பற்ற தங்கள் அழகினால் துன்புறச் செய்வார்கள்.
இவர்கள் உள்ளத்திலே வஞ்சக நினைப்புள்ளவர்கள். மெல்ல மெல்ல நகைப்பார்கள்; மிகவும் அன்பு காட்டுகின்றவர் களைப்போல நடிப்பார்கள்; வந்தவர்களை இனிய மொழிகளினால் வாருங்கள், உட்காருங்கள் என்று கூறிக் கொண்டாடுவார்கள். அவர்களோடு அளவளாவுவார்கள்.
வந்த இளைஞர்கள் காமவெறியுடன் தமது உடம்பைத் தொடும் போது, நஞ்சையும் வேற்படையையும் வெல்லுந் தன்மையுள்ள தமது கண்களால் அவர்கள் உள்ளதை மயக்கி விடுவார்கள். அவர்களிடம் உள்ள சிறந்த செல்வங்களை யெல்லாம் கவர்ந்து கொள்ளும் பொழுது, அவர்கள் மடியிலே விழுந்து புரளுவார்கள். அதன் மூலம் தாம் மிகுந்த காதலும், அன்பும் கொண்டிருப்பவர்களைப் போல நடிப்பார்கள்.
இவ்வாறு வஞ்சகச் செயல்கள் பலவற்றையும் செய்கின்ற கணிகையர்களின் வஞ்சகத்தை நான் உணரமாட்டேன்; அவளுடைய பொய் உள்ளத்தையும், பொய் நடிப்பையும் உண்மையென்று நம்பும் சிறுமதி படைத்தவன் நான்; காமவெறி தலைக்கேறியவன்; இத்தகைய சிறுமையும் காமவெறியும் கொண்ட என்னை உன்னுடைய மணம் பொருந்திய பாதங்களை பணிந்து, உனது அருளைப் பெறும்படி நீ நினைப்பாயோ? இப்படி நினைத்து அருள் செய்யும் தன்மை உன்னிடம் உண்டோ?
இதுவே இத்திருப்புகழின் பொருள். இத்திருப்புகழில் கூறப்படும் பொருளை அப்படியே சித்திரமாகத் தீட்டிக் காட்ட முடியும். அவ்வளவு அழகாகப் பாடப்பட்டிருக்கும் பாடல் இது.
விலைமாதர்கள் இளைஞர்களை ஏமாற்றும் விதத்தை அவர்களுடைய நடிப்பை- இதைவிட விளக்கமாகக் கூற முடியாது. விலைமாதர் உறவால் பொருள் இழப்பு நேரும், செல்வம் சீரழியும் என்ற ஒரு கருத்தை மட்டுமே இப்பகுதி விளக்கிக் காட்டிற்று; இளைஞர்களை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்திற்று.



