
அருணகிரியார் – குருபரர் அறிவுரைகள்
சாமி சிதம்பரனார்
9. கரும்பும் கசந்து தேனும் புளிக்கும்
பலர், தமக்குப் பிடித்தமான பல தெய்வங்களை வழி படுகின்றனர்; தாம் வழிபடும் தெய்வங்களைப் பற்றியே அவர்கள் போற்றிப் புகழுவார்கள்; கண்கண்ட தெய்வம் என்று கொண்டாடுவார்கள்; எல்லாம் வல்ல தெய்வம் அதுதான் என்று இயம்புவார்கள்; அத்தெய்வத்தின் தோற்றத்தையும் செயல்களையும் நினைத்து நினைத்துச் சொல்லிச் சொல்லி உள்ளம் உருகுவார்கள். இது பக்தர்களின் பண்பு.
முருகனிடம் அன்பு கொண்ட அருணகிரியார் முருகனைப் பாராட்டியிருக்கும் பாடல்கள் படிப்போர் மனத்திலே பக்திச் சுவையை ஊட்டுவன. அவர் தமது பாடல்களில் முருகன் திருவிளையாட்டைப் பலவிதமாகப் பாராட்டிப் பாடி உருகுகின்றார்.
முருகன் தமிழ் நாட்டின் பழம்பெரும் தெய்வம் குறிஞ்சி நில மக்கள் மலை நிலத்தில் வாழும் மாந்தர்கள்- முருகனையே குல தெய்வமாகக் கொண்டாடி வருகின்றனர். குறிஞ்சி நிலத்திற்கு உரிய தெய்வம் முருகன் என்பதே தமிழர் கொள்கை. இதனால் முருகனுக்குக் குறிஞ்சிக் கிழவன் என்று ஒரு பெயர் உண்டு.
இத்தகைய முருகனுடைய பிள்ளைப் பருவத்தைக் குறிக்கும் பாடல் ஒன்று கந்தர் அலங்காரத்தில் காணப்படுகின்றது. அப்பாடல் வருமாறு:-
திருந்தப் புவனங்கள் ஈன்றபொற் பாவை திருமுலைப்பால்
அருந்திச் சரவணப் பூந்தொட்டில் ஏறி அறுவர் கொங்கை
விரும்பிக் கடல்அழக் குன்று அழச் சூர் அழ விம்மிஅழும்
குருந்தைக் குறிஞ்சிக் கிழவன் என்று ஓதும் குவலயமே.
என்பதுதான் அப்பாடல். இச்செய்யுள் முருகனை எல்லாம் வல்ல தெய்வம், உலகம் எங்கும் நிறைந்த தெய்வம், எல்லாப் பொருளாகவும் இருக்கின்ற தெய்வம் என்று கூறுகின்றது.
ஒழுங்காக இவ்வுலகம் முழுவதையும் ஈன்றெடுத்தவள் பார்வதி தேவியார். அவள் அழகிய பாவை போன்றவள். முருகன் அவளுடைய முலைப்பாலை அருந்தினான். சரவணப் பொய்கையிலே பூத்து நின்ற தாமரை மலராகிய தொட்டிலிலே ஏறி விளையாடினான். கார்த்திகை முதலிய மங்கையர்களின் முலைப்பாலை வேண்டி அழுதான். அவன் அழுதபோது, கடலும் அழுதது; மலைகளும் அழுதன; தேவர்களும் அழுதனர்; இவ்வாறு உலகமே அழும்படி வாய்விட்டு அழுத சிறு குழந்தை உருவானவன். அவனை இவ்வுலகம் குறிஞ்சி நிலத் தெய்வம் என்று கூறும் என்பதே இச்செய்யுளின் பொருள்.
இதில், முருகன் உமாதேவியின் புத்திரன்; கார்த்திகை நட்சத்திரங்களாகிய அறுவரின் முலைப்பால் உண்டான்; அவனே இவ்வுலகுக்கெல்லாம் தலைவன்; அவனே குறிஞ்சி நிலக் கடவுள்- என்று குறித்திருப்பதைக் காணலாம்.
இத்தகைய குறிஞ்சிக் கிழவன் மீது அன்பு வைத்தால் இவ்வுலகப் பாசம்- ஆசை- பற்று- விட்டுப் போகும் என்றும் அழியாத ஆனந்தத்தை அடையலாம். அந்த முருகன் ஏழையர் பால் இரக்கம் உள்ளவன்; அன்பு செய்கின்றவர்களுக்கு அருள் புரியும் அண்ணல்; ஆதலால் அவனிடம் மெய்யன்பு காட்டுங்கள். உங்கள் துயரம் ஓடிப்போகும். உயர்ந்த ஆனந்த வாழ்வில் நிலைத்து வாழலாம். இவ்வாறு அடுத்த பாட்டிலே கூறுகின்றார். முருகனிடம் அன்பு செய்து, அதனால் தான் அடைந்த இன்ப நிலையை எடுத்துரைப்பதே அந்தப் பாடலாகும். அப்பாடல் வருமாறு:-
பெரும்பைம் புனத்தினுள் சிற்றேனல்
காக்கின்ற பேதைகொங்கை
விரும்பும் குமரனை மெய்அன்பி
னால்மெல்ல மெல்ல உள்ள
அரும்பும் தனிப்பர மானந்தம்;
தித்தித்து அறிந்த அன்றே
கரும்பும் துவர்த்துச் செந்தேனும்
புளித்து அறக் கைத்ததுவே.
இப்பாடல் அந்தக் குறிஞ்சிக் கிழவனுடைய பெருமையைக் கூறிற்று. அவனிடம் மெய்யன்பு பூண்பதினால் ஏற்படும் இன்ப நிலையை எடுத்துரைத்தது.
முருகன் அடியார்க்கு எளியவன். வள்ளி என்ற குலப் பெண் முருகனையே மணக்கவேண்டும் என்று விரும்பியவள். அவனையே எப்பொழுதும் உள்ளத்தில் நினைந்து உருகியவள். அவள் பெரிய பசுமை நிறைந்த தினைப்புனத்திலே சிறிய தினைக் கதிர்களைக் கிளிகள் கொய்யாமல் பாதுகாத்துக் கொண்டிருந்தவள். அத்தகைய பேதையின் கொங்கையைத் தழுவிக் கொள்ள முருகன் தானாகவே சென்றான். மணந்து தழுவிக் கொண்டு அவன் நீண்ட நாளைய காதலை நிறை வேற்றினான்.
இத்தகைய முருகனைக் கொஞ்சம் கொஞ்சமாக- மெதுவாக- சிறிது உண்மையன்புடன் நினைத்தால் போதும்; உள்ளத்திலே ஒப்பற்ற அழியாத ஆனந்தம் தோன்றி நிற்கும். அந்த ஆனந்தத்தைச் சுவைத்து அறிந்த போதே இவ்வுலகப் பொருள்களில் உள்ள ஆசை அற்றுப் போகும்; ஐம்புலன்களும் அவன் வசமாகிவிடும். அதன் பின் கருப்பஞ்சாறும் கசக்கும்; நல்ல தேனும் புளிக்கும். இவை முற்றிலும் கைத்துப் போகும். நான் அவனை- அந்த வள்ளியைத் தழுவிய முருகனை- உள்ளன்புடனே நினைத்த போதே எனக்கு ஒப்பற்ற பரமானந்தம் உண்டாயிற்று; கருப்பஞ்சாறும் கசந்தது; தேனும் புளித்துக் கைத்துப் போயிற்று.
இதுவே இப்பாடலில் அடங்கியிருக்கும் பொருள்.
முதல் பாட்டு, குறிஞ்சிக் கிழவன்- முருகன்- இன்னார் என்பதை உணர்த்திற்று. இரண்டாம் பாட்டு, அம்முருகனை மெய்யன்புடன் நினைப்போர் அடையும் இன்பத்தை எடுத்துக் காட்டிற்று.
உண்மையன்பர்கள் தான் இத்தகைய ஆனந்தத்தை அடைய முடியும். போலி பக்தர்கள் எந்த இன்பத்தையும் எய்த முடியாது. அவர்கள் மேலும் துன்பத்திற்குத்தான் ஆளாவார்கள். ஆதலால் உண்மைப் பக்திதான் உயர்வளிக்கும் என்பதை இரண்டாவது பாடல் வலியுறுத்திக் கூறியிருப்பதைக் காணலாம்.
மெய் அன்பினால் மெல்லமெல்ல உள்ள, அரும்பும் தனிப் பரமானந்தம் என்ற தொடர் உண்மையன்பின் சிறப்பை உணர்த்தி நின்றது.
பெரும் பைம்புனத்தினுள் சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை விரும்பும் குமரன் என்ற தொடர், தன்னை விரும்புவோர் ஏழைகளானாலும் சரி, நாகரிகமற்ற கீழ்க் குடியினராயினும் சரி, அவர்களுக்கு அருள் செய்யும் பண்புள்ளவன் முருகன் என்பதை உணர்த்திற்று.
அருணகிரிநாதர் தாம் கண்ட அநுபவத்தை, இவ்வாறு செந்தமிழ்ச் செய்யுள் உருவாக உலகினர்க்கு உணர்த்துகின்றார்.



