அருணகிரியார் – குருபரர் அறிவுரைகள்
சாமி சிதம்பரனார்

11. ஊழ்வினை ஓடும்

இறைவனை வணங்குகிறவர்களிடந்தான் இரக்கம் இருக்கும். அவர்கள்தாம் மற்றவர்கள் படும் துன்பத்தைக் கண்டு மனம் இரங்குவார்கள். துன்புறுகின்றவர்களின் துயரத்தைப் போக்கத் துணிவார்கள். தம்மால் இயன்ற உதவியைச் செய்ய பின்வாங்க மாட்டார்கள். இது அருணகிரிநாதர் கருத்தாகும்.

இதுமட்டும் அன்று. முருகனிடம் அன்பு கொண்டவர்கள் தாம் தமது செல்வத்தின் பயனையும் அனுபவிப்பார்கள். செல்வத்தால் பயன் பெறுவது என்பது, அதனால் தாமும் இன்பம் அடைவது, பிறருக்கும் உதவி செய்து அவர்களையும் இன்பம் அடையச் செய்வதாகும்.

சிலர் மிகுந்த செல்வத்தைப் பெற்றிருக்கின்றனர். வேண்டிய எல்லாச் செல்வங்களும் இருக்கின்றன. அவற்றால் அவர்கள் நன்றாக வாழலாம்; பிறரையும் வாழச் செய்யலாம். ஆனால் அவ்வாறு செய்வதில்லை. தாமும் ஒன்றும் இல்லாத ஓட்டாண்டிகள் போல நடிக்கின்றனர். யாரேனும் அவர்களிடம் உதவி கேட்டால் எம்மிடம் ஒன்றும் இல்லையே! நான் செய்வேன், கொடுக்க வேண்டும் என்ற எண்ணந்தான்; இல்லாத குறைதான் ஒன்றும் உதவ முடியவில்லை என்று கையை விரிப்பதைக் காணலாம். ஏராளமான செல்வம் இருந்துகூடப் பஞ்சப்பாட்டுப் பாடுவதைப் பார்க்கலாம்.

செல்வம் இருந்தும் சிலர் இப்படி இருப்பதற்குக் காரணந் தான் என்ன? இக்கேள்விக்குச் சரியான விடை கூறுகின்றார் அருணகிரிநாதர். அவர்களுடைய ஊழ்வினை தான் அவர்களை அவ்வாறு செல்வம் இருந்தும் இல்லாதவர்களைப் போல வாழச் செய்கின்றது; ஊழ்வினைதான் அவர்கள் ஒன்றாலும் இன்புற்று வாழ முடியாதபடி தடுத்து வைத்திருக்கின்றது; செல்வத்தைச் சும்மா சேர்த்து வைத்திருக்கும்படி- ஒருவருக்கும் உதவாமல் அழுத்தி வைத்திருக்கும்படி- புதைத்து வைத்திருக்கும் படி- செய்திருக்கின்றது. எவ்வளவுதான் அவர்கள் செல்வத்தைப் பத்திரமாக, பாதுகாப்புடன் சேமித்து வைத்திருந்தாலும் அது அவர்களுக்கு உதவப் போவதில்லை. அவர்கள் செத்தாலும் அவர்கள் பின் செல்லப் போவதில்லை. இவ்வாறு செல்வத்தை அனுபவிக்காமைக்குக் காரணம் கூறுகின்றார்.

செல்வத்தை அனுபவிக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? ஊழ்வினை தடுத்தாலும் அதையும் உதறித் தள்ளி விட்டுச் செல்வத்தின் பயனை நுகர வேண்டுமானால் அதற்கு ஒரு வழிதான் உண்டு என்று கூறுகிறார் அருணகிரிநாதர். அந்த ஒரு வழி முருகப்பிரானை வழிபடுவது தான் என்பது அவருடைய அசையாத நம்பிக்கை. இதனைக் கந்தர் அலங்காரப் பாட்டு ஒன்றால் காணலாம்:

கோழிக் கொடியன் அடிபணி
யாமல் குவலயத்தே
வாழக் கருதும் மதியிலி
காள்! உங்கள் வல்வினைநோய்
ஊழின் பெருவலி உண்ணவொட்
டாது; உங்கள் அத்தம்எலாம்
ஆழப் புதைத்துவைத் தால்வரு
மோநும் அடிப்பிறகே

இச்செய்யுள் மேலேகூறிய கருத்தை வலியுறுத்தி இருப்பதைக் காணலாம்.

கோழிக்கொடியை உடையவன் முருகப்பெருமான். அவனது அடியைப் பணிய மறந்தீர்கள். இவ்வுலகத்தில் நன்றாக வாழலாம் என்று கருதி உழைக்கின்றீர்கள். உங்களுக்கு அறிவே இல்லை. முருகப் பிரானை வணங்காமல் நீங்கள் அறியவில்லை. நீங்கள் எவ்வளவு உழைத்து, எத்தனை செல்வங்களைச் சேர்த்தாலும் உங்களால் இன்புற்று வாழ முடியாது. வலிமை பொருந்திய வினைத் துன்பம் என்னும் ஊழ்வினையாகிய பெரிய வலிமையை நீங்கள் மீற முடியாது. அது உங்களை உங்கள் செல்வத்தை அனுபவிக்க முடியாமல்- உண்ண முடியாமல்- தடுத்துவிடும். உங்கள் செல்வங்களை எல்லாம் பிறர் கவராதபடி ஆழமான பள்ளத்திலே புதைத்து வைத்திருந்தாலும் அது உங்களுக்குப் பயன்படாது. நீங்கள் இறந்தால் அச்செல்வம் உங்கள் பின், உங்கள் அடியைத் தொடர்ந்து வரப்போவதில்லை. இந்த உண்மையை உணருங்கள்.

இதுவே மேலேகாட்டிய செய்யுளின் பொருள்.

மேலும் அந்த முருகனுடைய பெருமையை எடுத்துரைக்கின்றார் அருணகிரிநாதர். முருகன் இரக்கம் உள்ளவன். தமிழிலே தனிச்சுவை காணுகிறவன். அரக்கனை- கொடிய அரக்கனாகிய இராவணனை- கொன்றழித்த திருமாலின் மருகன்; உமையாளின் புதல்வன்- ஆதலால் அவனை வணங்கி வழிபடுங்கள். அருள் புரிவான். உங்கள் துன்பந் தணியும் என்று கூறுகின்றார்.

மொய்தார் அணிகுழல் வள்ளியை
வேட்டவன்; முத்தமிழால்
வைதா ரையும் அங்கு வாழவைப்
போன்; வெய்ய வாரணம்போல்
கைதான் இருபது உடையான்
தலைபத்தும் கத்தரிக்க
எய்தான் மருகன்; உமையாள்
பயந்த இலஞ்சியமே.

இச்செய்யுளில் அமைந்திருக்கும் அரும்பொருள் சிந்திக்கத் தக்கதாகும்.

முருகன் வள்ளியைத் தானே விரும்பிச் சென்று மணம் புரிந்துகொண்டவன். ஆதலால் அவன் உலக வாழ்வை நன்றாக அறிவான். மக்கள் இவ்வுலகில் பெண்ணுடன் கூடி வாழும் இன்பத்தை விரும்புகின்றனர் என்பதையும் உணர்வான். ஆகவே, உங்களையும் இவ்வுலகில் இல்லறத்திலிருந்து இன்பந் துய்த்து வருவதற்கு உதவி செய்வான்.

அடுத்தபடியாக, அம்முருகன் தமிழ்த் தெய்வம் தமிழை நன்றாக அறிந்து சுவைப்பவன். தமிழ் ஓசையினாலேயே அவனை வயப்படுத்திவிட முடியும்; தமிழ் மொழியைக் கேட்கும்போது தமிழால் தன்னைத் துதிக்கிறார்களா, பழிக்கிறார்களா என்று கூட எண்ணமாட்டான். தமிழால் அவனை வைதாலும், அவனைப் பழித்துப் பாடினாலும் சரி, சினங்கொள்ள மாட்டான். தமிழோசையின் இனிமையிலே உள்ளத்தைப் பறிகொடுத்து உதவி செய்ய முந்துவான். தமிழால் தன்னை வைகின்றவர்களைக்கூட வாழ வைக்கும் தன்மையுள்ளவன் அவன் அத்தகைய முருகனைத் தமிழால் போற்றிப் புகழ்ந்தால் அவன் என்னதான் செய்ய மாட்டான்?

அன்றியும் அந்த முருகன் பகைவர்களுக்கு அஞ்சாதவன். உங்களுடைய பகைவர்களை எல்லாம் அழித்து உங்களைக் காப்பாற்றுந் தன்மையுள்ளவன். அத்தகைய பரம்பரையிலே பிறந்தவன் அவன். கொடிய யானை போன்ற இராவணன் இருபது கைகளும் பத்துத் தலைகளும் உடையவன். அவனுடைய பத்துத் தலைகளையும் கத்தரிக்கும்படி அம்பெய்தான் திருமாலாகிய இராமன். அத்தகைய திருமாலின் மருகன்தான் முருகன். ஆதலால் நீங்கள் அவனைப் பணிந்தால் பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை. உங்களுக்குப் பாதுகாப்பாக என்றும் துணை நிற்பான்.

அன்றியும் அவன் உலகத்தை ஈன்றெடுத்து வளர்க்கும் உமாதேவியின் புதல்வன். ஆதலால் எப்பொழுதும் இரக்கமே உருவாக இருப்பவன். அவனை நினைத்தால்- பணிந்தால்- போற்றினால் உங்களுக்கு அருள் புரியாமல் இருக்க மாட்டான். அவன் இரக்கம் நிறைந்த இலஞ்சியம், அதாவது களஞ்சியமாக இருப்பவன். பணியுங்கள், அவனைப் பணிந்து அருள் பெறத் தவறாதீர்கள்.

இப்பாடலிலே இவ்வாறு விரிவான பொருள் அடங்கி யிருப்பதை காண்கின்றோம். செந்தமிழ்ப் புலவர்- முருக பக்தர்- அருணகிரிநாதரின் திருமொழிகளிலே இத்தகைய ஆழ்ந்த கருத்துக்களைக் காணலாம்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 1 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !