அருணகிரியார் – குருபரர் அறிவுரைகள்
சாமி சிதம்பரனார்

4. தமிழ்த் தெய்வம்

அருணகிரிநாதரின் தமிழ்ப் பற்று அளவிட முடியாதது. தமிழைத் தெய்வத்தன்மை நிறைந்ததாகவே நினைக்கிறார்; அவருடைய பாடல்களிலே வடமொழிச் சொற்கள் ஏராளமாகக் கலந்திருக்கின்றன. அவைகள் தமிழோடு கலந்து தமிழ்த்தன்மையையே பெற்ற விட்டன; தமிழின் பெருமைக்கு – சிறப்புக்கு – இயல்புக்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும். வடமொழிச் சொற்களை அவர் தாராளமாகக் கையாள்வதினால் அவரைத் தமிழ்த் துரோகி என்றோ, தமிழ்ப் பற்றில்லாதவர் என்றோ சொல்லிவிட முடியாது. இப்படிச் செல்வோர் இருப்பாரானால் அவர்கள் மொழி வளர்ச்சியின் தத்துவத்தை அறியாதவர்கள் என்பதில் ஐயம் இல்லை.

தமிழுக்கு இலக்கணம் செய்தவர்- தமிழை வளர்த்தவர்- அகத்தியர் என்பது தமிழர் பரம்பரையாக நம்பி வரும் செய்தி. தமிழ் முனிவன் என்பது அகத்தியரையே குறிக்கும். தமிழ் எனும் அளப்பரும் சலதி தந்தவன், என்று கம்பர் அகத்தியரைக் குறிப்பிடுகிறார். இத்தகைய அகத்தியருக்கு முருகக் கடவுளே தமிழைப் போதித்தார் என்று கூறுகிறார் அருணகிரிநாதர்.

சிவபெருமானுக்கு ஒப்பானவன் அகத்தியன்; அவன் பொதியமலை முனிவன். அவன் மனம் மகிழும்படி – இரண்டு காதுகளும் குளிரும்படி- இனிமை யான தமிழை உபதேசித்தவனே!

சிவனைநிகர் பொதியவரை
முனிவன் அகம் மகிழஇரு
செவிகுளிர இனியதமிழ்- பகர்வோனே

குடமுனிவனாகிய அகத்திய முனிவன் கற்றுக் கொள்ளும் படி, அக்காலத்தில் தமிழ்மொழியை அவன் காதிலே கூறிய குமரனே! குறத்தியாகிய வள்ளியின் அன்புக்குரிய பெருமாளே!

குடமுனிவன் கற்கஅன்று
தமிழ்செவி யில்பகர்ந்த
குமர! குறத்திநம்பு- பெருமாளே.

இத்திருப்புகழ்கள், முருகனே அகத்தியர்க்குத் தமிழை அறிவித்தான் என்ற தமிழர் கொள்கையை அறிவித்தன. அகத்தியருக்கு மட்டுமா? சிவபெருமானுக்குக் கூடத் தமிழின் உண்மையைப் போதித்தவன் முருகன்தான் என்று பாடுகின்றார் அருணகிரிநாதர்.

கொன்றை மலரை அணிந்த சடையையுடைய சிவபெரு மானுக்கு, ஒப்பற்ற உண்மையை அறியும்படி கொஞ்சிப் பேசித் தமிழை உபதேசித்தவனே!

கொன்றைச் சடையர்க்கு
ஒன்றைத் தெரியக்
கொஞ்சித் தமிழைப் பகர்வோனே.

மழுவாயுதத்தைக் கையிலே கொண்ட சிவபெருமானிடம் சென்று, வளம்பொருந்திய தமிழ்ச் சொல்லின் இனிய சந்தம் ஒன்றைக் கூறியருள்கின்றவனே!

மழுக்கைக் கொண்ட
சங்கரர்க்குச் சென்றுவண்
தமிழ்ச்சொல் சந்தம்ஒன்று அருள்வோனே.

இத்திருப்புகழ்கள், சிவபெருமானுக்கும் முருகப் பெருமானே தமிழின் உண்மையை – தமிழின் இனிமையை- எடுத்துரைத்தான் என்று கூறுகின்றன.

முருகனை ஒப்பற்ற தமிழ்ப் புலவன் என்று போற்றுகிறார் அருணகிரிநாதர்.

பாண்டியர் வளர்த்த தமிழ்மொழியிலே தோன்றிய நூலின் சிறந்த பொருளை எல்லோரும் ஒப்புக்கொள்ளும்படி கூறிய முருகப் பெருமானே!

வழுதியர் தமிழின் ஒருபொருள் அதனை
வழிபட மொழியும்- முருகேசா.

என்பது திருப்புகழ். இறையனார் அகப்பொருளுக்குச் சங்கப் புலவர்கள் பலர் உரை செய்தனர். உருத்திரசன்மர் என்னும் பெயருடன் அவதரித்திருந்த முருகப் பெருமான் அவ்வுரைகளை யெல்லாம் தனித்தனியே சொல்லக் கேட்டார். அவற்றுள் நக்கீரர் செய்த உரையையே சிறந்ததென்று பாராட்டினார். இது இறையனார் அகப்பொருள் உரை பற்றி வழங்கும் செய்தி. இச்செய்தியையே மேலே கண்ட திருப்புகழ் குறித்தது.

சிறப்பாக மதிக்கப்பட்ட, இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழிலும் சிறந்தவனே!

மதித்த முத்தமிழில் பெரியோனே

முத்தமிழிலும் சிறந்த வினோதனே! இசையுருவாக இருப்பவனே! மற்றவர் யாரும் ஒப்பில்லாத அழகனே! ஒளி உருவானவனே! அன்பர்களுக்கு முத்தி கொடுத்து, அவர்கள் மேல் அன்பு காட்டுகின்றவனே!

முத்தமிழ் வித்வ வினோதா! கீதா!
மற்றவர் ஒப்பிலர் ரூபா! தீபா!
முக்தி கொடுத்துஅடி யார்மேல் மாமால் உறுவோனே

அளவற்ற சிறப்பையுடைய தமிழாராய்ச்சியால் உயர்ந்து நிற்கும் திறமுள்ள புலவனே! வணக்கம்!

அலகில் தமிழால் உயர் சமர்த்தனே போற்றி

மேலே காட்டிய திருப்புகழ்ப் பகுதிகள், முருகன் சிறந்த தமிழாராய்ச்சியுடையவன், உயர்ந்த தமிழ்ப் புலவன் என்ற கருத்தை உணர்த்தின.

அருணகிரிநாதர், தனக்குத் தமிழிலே பாடும்படி அருள் செய்தவன் முருகப் பெருமானே என்று கூறுகின்றார்.

கதிரொளி வீசும் பாத தாமரைகளை, நான் தினந்தோறும் போற்றிப் பாடும்படி சிறந்த தமிழ்மொழியை எனக்களித்த மயில் வாகனத்தையுடைய வீரனே!

அருணதள பாதபத்மம்
அதுநித மேதுதிக்க
அறியதமிழ் தான் அளித்த- மயிர்வீரா!

என்று முருகனே தனக்குத் தமிழை அருளிச்செய்தான் என்று பாடினார்.

அடியேன், செந்தமிழ்மொழி நூல்களை நாள்தோறும் ஓதி, தீமையினின்றும் நீங்கி நல்வழியிலே செல்லும்படி, அறிவுரைகள் ஊறி வருகின்ற உனது சிவந்த கனி போன்ற வாயினால் ஒரு சொல் அருள்வாயாக!

செந்தமிழ் நாளும்ஓதி
உய்ந்திட ஞானம்ஊறும்
செங்கனி வாயில்ஓர்சொல் அருள்வாயே.

இதனால், மேலும் தமிழைப் போதிக்கும்- ஞானத் தமிழை அருளும்படி வேண்டினார்.

இவ்வுலகிலே வளர்ந்து வரும் மொழி செந்தமிழ் மொழி. அச்செந்தமிழ்ப் பாடல்களால் உன்னை என்றும் வாழ்த்திப் போற்றிக்கொண்டே இருக்கும் உறுதியான உள்ளத்தை எனக்கு அருள் செய்வாயாக.

அம்புவி தனக்குள்வளர்
செந்தமிழ் வழுத்திஉனை
அன்பொடு துதிக்கமனம் அருள்வாயே.

இதனால், எப்பொழுதும் மாறாமல், முருகனையே பாடிப் போற்றிக் கொண்டிருக்கும் உறுதியான உள்ளம் வேண்டும் என்று விண்ணப்பம் செய்கின்றார்.

இவ்வடியில் வளர் செந்தமிழ் என்ற தொடர் அமைந் திருப்பது குறிப்பிடத்தக்கது. வளருந் தமிழிலே சொற்கள் பெருகிக் கொண்டேயிருக்கும். இருக்கும் சொற்களை மட்டும் வைத்துக் கொண்டு, புதிய சொற்களைச் சேர வொட்டாமல்- கலக்க ஒட்டாமல்- தடுத்து நின்று எந்த மொழியையும் வளர்க்க முடியாது. இவ்வாறு மொழியை வளர்க்க முயல்வோர் மொழி வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகவே இருப்பார்கள். வளர் செந்தமிழ் என்ற தொடர் இவ்வுண்மையை விளக்கி நிற்கின்ற தென்பதில் ஐயம் இல்லை.

மேலே காட்டிய உதாரணங்கள் அருணகிரிநாதரின் தமிழ்ப் பற்றை விளக்குவதற்குப் போதுமானவை. தமிழ் தெய்வத்தன்மை பொருந்தியது; அகத்தியருக்கு முருகனே தமிழைப் போதித்தான்; சிவபெருமானுக்கும் தமிழின் சிறப்பை முருகன் மொழிந்தான்; முருகனே ஒரு சிறந்த புலவன்; முத்தமிழிலும் வல்லவன்; தனக்குத் தமிழிலே பாடும் வல்லமையை யளித்தவன் முருகப் பெருமானே- என்ற உண்மையை யளித்தவன் முருகப் பெருமானே- என்ற உண்மைகளை மேலேகாட்டிய திருப்புகழ்ப் பகுதிகள் விளக்குகின்றன. இத்தகைய சிறந்த தமிழ்ப் பற்றுள்ள அருணகிரி நாதரை- தமிழுக்குச் சிறந்த பணியாற்றிய அருணகிரிநாதரை- யார்தான் போற்றாமலிருக்க முடியும்?

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 1 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !