அருணகிரியார் – குருபரர் அறிவுரைகள்
சாமி சிதம்பரனார்

19. தாய்மொழிப் பற்று

விலங்குகளும் பறவைகளும் நம்மைக்காட்டிலும் வாழ்விலே வேறுபட்டவை. அவை ஈன்ற கன்றுகளும் குஞ்சுகளும் தாயின் உதவியை எப்பொழுதும் நாடுவதில்லை. தாங்கள் வளரும் வரையில்தான் தாயினிடம் அன்பு செலுத்துகின்றன.

அவையும் தங்கள் கன்றுகளும் குஞ்சுகளும், தாமே இரை தேடிக் கொள்ளும் ஆற்றலைப் பெறும் வரையிலுந்தான் ஆதரவு காட்டுகின்றன.

பால் மறந்த கன்றுகளுக்குத் தாயின் தயவு தேவையில்லை. சிறகு முளைத்த குஞ்சுகளுக்கு அன்னையின் ஆதரவு வேண்டுவதில்லை. இந்த நிலை எய்தியவுடன் அவை வெவ்வேறாகிப் பிரிந்து விடுகின்றன.

ஆனால், மக்களுடைய வாழ்க்கை வேறு, எவ்வளவு வயது நிரம்பிய அன்னையும், தான் பெற்ற மக்களிடம் வாழ்நாள் முழுவதும் அன்பு செலுத்துகின்றாள். நரைத்து முதிர்ந்து நல்வாழ்விலே இருக்கும் மகனையும் மகளையும், என் கண்ணே! நான் பெற்ற செல்வமே! என்று கொஞ்சத்தான் ஆசைப்படுகிறாள் அன்னை. தனயனுக்கொரு ஆபத்தென்றால் தாய் மனங் கலங்குகின்றாள், கண் கலங்குகின்றாள்.

பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்றொரு பழமொழியுண்டு. தாயைப் போன்ற அவ்வளவு இளகிய உள்ளம் மக்களுக்கு இருப்பதில்லை என்பது உண்மைதான். தாயைத் தவிக்க விட்டு வாழும் தான்தோன்றிகள் எவ்வளவோ பேர் உண்டு. தாயைப் புறக்கணிக்கக் கூடாது என்பதற்காகவே அன்னையைப் போற்றுக! தெய்வமாகப் போற்றுக! என்று முன்னோர்கள் இளமையிலேயே போதித்து வந்தனர். தாயில் சிறந்ததொரு கோயிலும் இல்லை என்று கூறியதும் இதற்காகத்தான்.

எவ்வளவு கல்மனம் படைத்தவர்களாயிருந்தாலும், தாயைப் போற்றிப் பாதுகாக்காதவர்களாயிருந்தாலும், தாய்க்கொரு துன்பம் நேர்ந்துவிட்டது என்றால், அவர்கள் நெஞ்சம் நெகிழாமல் இருப்பதில்லை. தான் ஆடா விட்டாலும் தன் சரீரம் ஆடும் என்பார்களே, அது மறக்கமுடியாத உண்மை. தாயின் துயர் கேட்டுக் கண் கலங்கித் தவிப்படையாதவர்கள் யாரும் இல்லை. இளமையிலேயே தனது வாழ்வுக்காகத் தாய் செய்த தியாகத்தை எண்ணிப் பார்த்தால் உள்ளம் உருகத்தான் செய்யும்.

இந்த உண்மை தாய்மொழிக்கும் பொருந்தும். இளம் பருவத்தில் தாய்மொழியிலே போதிக்கப்படும் நல்லுரைகள் நமது உள்ளத்தை விட்டு மறைந்துவிடுவதில்லை. நமது பண்பு பெருகுவதற்கு அந்த அறிவுரைகளே ஊன்றுகோல் போல் கைகொடுத்து உதவுகின்றன.

மற்றவர்களைக் காட்டிலும் இந்த உண்மையை இறைவன் அடியார்கள் என்பவர்கள் நன்றாக உணர்ந்திருந்தனர். ஆண்டவன் பால் அன்புள்ளவர்கள் தங்கள் தாய் மொழியிலே அன்புப் பாடல்களைப் பாடும் போதுதான் நெஞ்சம் நெக்குருகி நிற்கின்றனர்; நெஞ்சம் கனிந்து கண்ணீர் விட்டு நிற்கின்றனர். எவ்வளவு பொருள் நிறைந்த இனிய பாடலாயிருந்தாலும், பொருள் தெரியாத- தெரிந்து கொள்ள முடியாத- வேற்று மொழிப் பாடலால் இவ்வாறு நெஞ்சம் இளகுவதில்லை. பக்தியுள்ளவர்கள் அனைவரும் இந்த உண்மையை அனுபவத்தில் அறிவார்கள்.

தமிழகத்திலே வாழ்ந்தவர் தியாகையர். ஆனால் அவர் தாய்மொழி தெலுங்கு. அவர் இராமனைப் பணிந்து பாடியவை அனைத்தும் தெலுங்கில்தான். அவர் தம் தாய்மொழியில் பாடியிருப்பதால்தான் அவர் கீர்த்தனங்களில் அன்பு- பக்தி- சொட்டுகின்றது. இவ்வுண்மை நினைவுகூரத் தக்கது.

தமிழ்நாட்டு அறிஞர்கள்- அன்பர்கள்- அடியார்கள்- அனைவரும், தாய்மொழியை அன்னையைப் போலவே போற்றினர், வாழ்த்தினர், வணங்கினர். அன்னையைக் காட்டிலும் ஒருபடி மேலாகவே உயர்த்திப் பேசினார்கள் என்றும் சொல்லிவிடலாம். தாய்மொழியை இறைவனாகவே, இறைவியாகவே எண்ணிப் போற்றினார்கள். தாய்மொழியை இறைவனாகவும், இறைவி யாகவும் போற்றினார்கள் என்று கூறுவதைவிடத் தாய் மொழியின் வடிவமாகவும், அதன் சுவையாகவும், பயனாகவும் இறைவனையும், இறைவியையும் எண்ணினார்கள் என்றே கூறிவிடலாம். இவ்வளவு அன்பும், ஆதரவும் தாய்மொழியின் மேல் கொண்டிருந்தார்கள்.

இந்த உண்மையை விளக்கும் பாடல்கள் பல உண்டு. தமிழர்கள்- தமிழ்நாட்டுப் புலவர்கள்- தமிழ்நாட்டிலே தோன்றிய அடியார்கள்- தமிழ்மொழியிலே கொண்டிருந்த அன்புக்கு எல்லையில்லை. இவ்வளவுக்குத் தாய்மொழியிலே பற்றுள்ளவர்கள் வேறு எந்த மொழியாளர்களிலும் இல்லையென்றே துணிந்து சொல்லிவிடலாம். இதற்கு உதாரணமாக ஒரு செய்யுளைப் பார்ப்போம்.

தொடுக்கும் கடவுள் பழம்பாடல்
தொடையின் பயனே! நறைபழுத்த
துறைத்தீம் தமிழின் ஒழுகுநறும்
சுவையே! அகந்தைக் கிழங்கை அகழ்ந்து
எடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்கு
ஏற்றும் விளக்கே! வளர்சிமைய
இமயப் பொறுப்பில் விளையாடும்
இளம்மென் பிடியே! எறிதரங்கம்
உடுக்கும் புவனம் கடந்துநின்ற
ஒருவன், திருவுள்ளத்தில் அழகு
ஒழுக, எழுதிப் பார்த்திருக்கும்
உயிர் ஓவியமே! மதுகரம், வாய்
மடுக்கும் குழற்காடு ஏந்தும், இள
வஞ்சிக் கொடியே வருகவே!
மலையத் துவசன் பெற்றபெரு
வாழ்வே! வருக! வருகவே!

இது மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் என்னும் பிரபந்தத்தில் உள்ள ஒரு செய்யுள். இச் செந்தமிழ்ச் செய்யுளை எத்தனை தரம் படித்தாலும், பாடினாலும் நம் உள்ளம் சலிப்படைவதில்லை. தமிழ் தாயின்பால் அன்பும் ஆர்வமும் அளவின்றிப் பெருகி வளர்கின்றது. இச் செய்யுளால் மீனாட்சி அம்மையின்பால் பிறக்கும் அன்பைவிட, தமிழ்த்தாயிடம் பிறக்கும் அன்புதான் அதிகம். நம் உள்ளமெல்லாம் தமிழ்த்தேன் நிரம்பி, நம் உணர்ச்சியே தமிழ் மயமாகி விடுகின்றது.

இச்செய்யுளை இயற்றிய- அல்ல, பாடிய- புலவர் குமர குருபரர். இவர் தென்பாண்டி நாட்டினர். இவரால் தான் திருப்பனந்தாள் மடம் தோன்றியது. இவர்தான் தில்லியிலே வாழ்ந்த பாதுஷாவைத் தமிழின் அருமையை உணரச் செய்து, காசியிலே தமிழ்மணங் கமழும் சைவ மடத்தை நிறுவினார். இந்துதானியும் தெரிந்தவர்.

இவர் வணங்கிப் போற்றிய இறைவியை- மீனாட்சியம்மைத் தமிழின் இனிமையாகவே காண்கிறார். தனது புலமைக்கும், தூய்மைக்கும், பண்புக்கும் காரணமான தாய் மொழியை எவ்வளவு அருமையாகப் போற்றுகிறார் என்பதற்கு இந்த ஒரு செய்யுளே போதுமான எடுத்துக் காட்டாகும். இச்செய்யுளின் பொருளை உணர்ந்தால் தமிழ்தான் தமிழர் உயிர் என்பதை மறவோம்.

தொடுத்துக் கூறுகின்ற தெய்வத்தன்மையுள்ள பழைய செந்தமிழ்ப் பாடல் மாலையின் பயனே! தேன் மிகுந்திருக்கின்ற, பல துறைகளைப் பற்றியும் உரைக்கின்ற இனிய தமிழ்ச் செய்யுட்களிலே வடிகின்ற நல்ல சுவையே! யான் எனும் அகங்காரமாகிய கிழங்கைக் கல்லி எடுத்தெறிகின்ற தொண்டர்களின் உள்ளமாகிய கோயிலிலே ஏற்றியிருக்கும் அணையா விளக்கே! வளர்ந்த சிகரத்தையுடைய இமயமலையிலே விளையாடுகின்ற இளைய மெல்லிய பெண் யானைக் கன்றே! அலை வீசுகின்ற கடலாற் சூழ்ந்த இவ்வுலகத்தைத் தாண்டி நிற்கும், ஒப்பற்ற சிவபெருமான் தனது உள்ளத்திலே அழகு நிரம்ப எழுதி வைத்துப் பார்த்திருக் கின்ற உயிருள்ள சித்திரமே! வண்டுகள் பொருந்தி, வாயாரத் தேனை உண்ணுகின்ற மலர்கள் நிறைந்த கூந்தற் காட்டைத் தாங்கிக் கொண்டிருக்கின்ற முற்றாத வஞ்சிக் கொடியே! வருக! மலயத்துவசன் என்னும் பாண்டிய மன்னன் பெற்றெடுத்த பெரிய செல்வமே! வருக வருகவே!

இதுவே இச்செய்யுளில் அமைந்திருக்கும் பொருள். குமர குருபரர் கற்பனையிலே பிறந்ததுதான், உயிரோவியம் என்னும் சொல். இந்தச் சொல்லை இன்று பொன் போல் போற்றுவதைக் காண்கிறோம்.

பழம்பாடல்களின் தெய்வீகத் தன்மையை இச்செய்யுள் விளக்கி நிற்கின்றது. தமிழின் சுவையை- பெருமையை – அழகை – விளக்குவதிலே இச்செய்யுளுக்கு நிகர் இதுவேதான்.

பழந்தமிழர்கள் தங்கள் ஆருயிர் அன்னை மொழியை எவ்வளவு அருமையாகப் போற்றினார்கள் என்பதற்கு இதைவிட வேறு சான்று என்னதான் வேண்டும்?

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 1 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !