
அருணகிரியார் – குருபரர் அறிவுரைகள்
சாமி சிதம்பரனார்
23. கற்றோர் பெருமை
குமரகுருபரர் இயற்றியிருக்கும் நீதிநெறி விளக்கம் சிறந்ததொரு நூல். நூறு வெண்பாக்களிலே உயர்ந்த நீதிகள் பலவற்றை அமைத்துப் பாடியிருக்கிறார். இதைத் திருக்குறளைப் பிழிந்தெடுத்த சாரம் என்றே சொல்லி விடலாம்; இந்நூலைப் பற்றி வழங்கும் கதையே இவ்வுண்மையை வலியுறுத்தும். திருமலை நாயக்கர், திருக்குறள் விரிவாக இருப்பதனால், அதனை முழுவதும் படிக்க நேரம் இல்லை; ஆதலால் அந்நூலின் கருத்துக்களைச் சுருக்கமாகத் தொகுத்துக் கூறும் நூல் ஒன்றை இயற்றித்தர வேண்டும் என்று கேட்டாராம். அவர் வேண்டுகோளுக்கு இணங்கியே குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் பாடினார் என்பதே அந்த வரலாறு.
நீதிநெறி விளக்கத்தில், கல்வியின் சிறப்பு, அதைக் கற்பதனால் உண்டாகும் நன்மை, உண்மையான கல்வியைக் கற்றவர்களின் இயல்பு- இவைகள் சிறப்பாக வலியுறுத்தப்படுகின்றன. நூறு வெண்பாக்களிலே ஏறக்குறைய பதினைந்து வெண்பாக்கள் கல்வியின் சிறப்பையும், அதன் பயனையும் பற்றிக் கூறுகின்றன. இதனால், மனித சமுதாயம் முன்னேற வேண்டுமானால்- ஒற்றுமையுடன் வாழ வேண்டுமானால்- நல்ல நெறியிலே வாழ வேண்டுமானால்- அதற்குக் கல்வி அறிவே துணை செய்யும். இதுவே குமரகுருபரர் கருத்தாகும் என்பதைக் காணலாம். அவர் கூறும் சில பாடல்களைக் காண்போம்.
இவ்வுலகில் பிறந்த மனிதர்கள் அடையவேண்டிய பயன் நான்கு. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பவை. இதுவே தமிழ் நூல்களிலும், வடமொழி நூல்களிலும் கூறப்படுவது. வடநூலார். இதனை தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்று சொல்லுவார்கள்.
பிறருக்குத் தீமை செய்யாமல், உதவி செய்யும் வாழ்வு அறநெறி வாழ்வாகும். இத்தகைய வாழ்வை மேற்கொள்ளுதல், நல்ல வழியிலே பொருள் சம்பாதித்தல், அப்பொருளால் பிறர்க்கும் உதவி செய்து தானும் இன்பம் நுகர்தல், இறந்தபின் நற்கதியை- பிறவா நிலையைப் பெறுதல்- இவையே அறம், பொருள், இன்பம் மூன்றும் இவ்வுலகில் பெறுவன; வீடு இறந்தபின் பெறுவது.
இவ்வுலகிலே வாழ்கின்றவர்கள் நல்ல பெயருடன் வாழ வேண்டும்; தம்மைப் பிறர் பழித்துப் பேசாதபடி புகழ்ந்து பேசும்படி வாழவேண்டும்; தாம் இருக்கும்போதும் தம்மைப் பிறர் புகழவேண்டும்; தாம் இறந்த பின்னும் தம்மைப்பற்றி மற்ற மக்கள் புகழ்ந்து பேச வேண்டும். இவ்வாறு வாழ்வதே புகழ் பெற்ற வாழ்க்கையாகும். இவ்வாறு வாழ விரும்பாதவர்கள் யாருமேயில்லை. எல்லா மக்களும் புகழுடன்- மற்றவர்கள் தம்மைக் கொண்டாடும்படி- வாழத்தான் ஆசைப்படுகின்றனர்.
அடுத்தபடி கவலையில்லாமல் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்; எவ்வளவு துன்பம் வந்தாலும் அதைப் பொறுத்துக் கொள்ளும் நெஞ்சுரம் வேண்டும். இன்பம் வந்தபோது மகிழ்ச்சியால் துள்ளிக் குதிப்பவர்களும், துன்பம் வந்தபோது ஏங்கிப் பரிதவித்து அழுது புலம்புகிறவர்களும் அறிவுள்ளவர்கள் அல்லர். எது வந்தாலும் சரி; நடப்பது நடக்கட்டும் என்று கவலைப்படாமல் வாழும் மனிதர்களே உயர்ந்தவர்கள். இவ்வாறு வாழ விரும்பாத மனிதர்கள் இல்லை. ஆனால் எல்லா மனிதர்களும் இத்தன்மையை எளிதிலே பெற்றுவிட முடியாது.
சிறந்த கல்வியைக் கற்றவர்கள் அறம், பொருள், இன்பம், வீடுகளை அடையலாம்; புகழுடன் வாழலாம்; கவலைப்படாமல் வாழலாம் என்று கூறுகிறார் குமரகுருபரர், இதனை
அறம், பொருள், இன்பமும், வீடும் பயக்கும்;
புறம்கடை நல்இசையும் நாட்டும்; -உறும்கவல்ஒன்று
உற்றுழியும் கைகொடுக்கும்; கல்வியின் ஊங்கில்லைச்
சிற்றுயிர்க்கு உற்ற துணை.
என்ற பாடலால் காணலாம். மனித சமுதாயத்திலே கல்வி பரவ வேண்டும்; மக்கள் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்துவது இப்பாடலாகும். கல்வியின் பயனை இதைவிடத் தெளிவாக யாரும் விளக்கிச் சொல்ல முடியாது.
கல்வி கற்றவன் அடையும் இன்பத்தை மற்றொரு வெண்பா வினால் விளக்கிக் கூறுகின்றார் குமரகுருபரர். கல்வி கற்றவனுக்கு வேறு குடும்பமே தேவையில்லை; கல்வியே அவனுடைய குடும்பம். மனைவி, மக்கள், செல்வம் எல்லாம் அவன் கற்ற கல்விதான் என்று கூறுகிறது அவ்வெண்பா.
கல்வியே கற்புடைப் பெண்டிர்; அப்பெண்டிர்க்குச்
செல்வப் புதல்வனே தீம்கவியாச்;- சொல்வளம்
மல்லல் வெறுக்கையா; மாண் அவை மண்உறுத்தும்
செல்வமும் உண்டு சிலர்க்கு
என்பதே அவ்வெண்பா. இதன் பொருள் கீழ்வருவது:- உண்மையான கல்வியறிவுள்ளவர்க்குக் கல்விதான் கற்புள்ள மனைவியர் ஆவர்; அவர் பாடும் இனிய கவிதையே மனைவியர் ஆவர்; அவர் பாடும் இனிய கவிதையே அவருடைய செல்வப் புதல்வனாகும்; அவர் ஆராய்ந்து சொல்லும் சிறந்த சொல்லே வளம் பொருந்திய செல்வமாகும்; இவைகளுடன், அறிவுள்ளோர் கூடிய சபையைச் சிறக்கும்படி செய்கின்ற சொற் செல்வமும் கற்றவர்கள் சிலரிடம் உண்டு என்பதே இதன் பொருள்.
கல்வி அறிவுள்ளவர்கள் தம் குடும்பத்துக்கு வரும் துன்பத்தைப் பற்றிக்கூடக் கவலைப்பட மாட்டார்கள். தம் மனைவி மக்களைப் பற்றிக் கூடக் கவலைப்பட மாட்டார்கள். கல்வியே இத்தகைய கவலையற்ற வாழ்க்கையை அளிக்கும். இத்தகைய தன்மையை இன்றும் கற்றவர்கள் சிலரிடம் காணலாம்.
பெற்ற தாய்க்குத் தன் பிள்ளையே சிறந்தது. காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சல்லவா? தான் பெற்ற பிள்ளையின் அழகைப் பழித்துரைக்கும் தாயைக் காண முடியாது. இவரைப் போன்றவர்கள் தாம் நூலாசிரியர்கள். ஒரு எழுத்தாளன் தான் எழுதியதைத் தானே படித்து இன்புறுவான். தான் எழுதியதைப் புத்தக வடிவிலே காண்பதில் அவனுக்கு ஒரு மகிழ்ச்சி; தனது நூலைப் பிறர் பாராட்டிப் பேசினால் அதிலே ஒரு ஆனந்தம். ஒரு எழுத்தாளனுக்கு, அவன் மனைவியை விட – அவன் பெற்ற மக்களை விட- அவன் எழுதிய நூலே- அருமையாகக் காணப்படும். இது போலவே ஒரு கவிஞன் தனது கவிதையைப் போற்றுவான். அதிலும் ஒருவன் எழுதிய நூல்- பாடிய கவி- என்றும் நிலைத்து வாழும் சிறப்புடையதாக இருக்குமானால், அந்த நூலாசிரியன்- கவிஞன்- அடையும் இன்பத்திற்கு ஈடு சொல்லவே முடியாது. இவ்வுண்மையைக் குமரகுருபரர் பாடல் ஒன்றிலே காணலாம்.
கலைமகள் வாழ்க்கை முகத்தது எனினும்
மலரவன் வண்தமிழோர்க்கு ஒவ்வான்; – மலரவன்செய்
வெற்றுடம்பு மாய்வனபோல் மாயா; புகழ்கொண்டு
மற்றிவர் செய்யும் உடம்பு
என்பதே அந்த அருங்கவி. இதன் பொருளைக் கண்டால் புலவர் பெருமையை- அவர் அடையும் இன்பத்தை- அறியலாம்.
கலைமகள்- கல்வியின் அதி தேவதையாகிய சரசுவதி- வாழும் இடம் முகமாக இருக்கலாம்; நாவாக இருக்கலாம். ஆயினும், அத்தகைய வாழ்வைப் பெற்ற பிரமதேவன், சிறந்த தமிழ்ப் புலவர்களுக்கு ஒப்பாக மாட்டான். ஏன் என்றால் இதற்குக் காரணம் உண்டு. மலரவன் படைக்கும் உடம்புகள் வெறும் உடம்புகள்; இனிமையற்ற உடம்புகள். அவ்வுடம்புகள் அழியாமல் நிற்பவையும் அல்ல; சிலகாலம் இருந்து மறைந்து விடக் கூடியவை. புலவர்கள் செய்யும் உடம்பாகிய கவிதையோ அப்படியல்ல. புலவர்கள் படைக்கும் சிறந்த கவிதைகள் புகழ் பெற்று நிற்கும் பல்லாயிரக்கணக்கான ஆண்டகளானாலும், நரை திரை மூப்புப் பிணியின்றி வாய்ந்திருக்கும்.
இதுவே மேலே காட்டிய பாடலின் பொருள். இத்தகைய படைப்பு சக்தி படைத்த புலவர்களின் மகிழ்ச்சியை யார்தான் எல்லை காண முடியும்? அவர்கள் அடையும் ஆனந்தத்துக்கு எதைத்தான் ஈடு சொல்ல முடியும்?
ஆகவே, கல்வி கற்பதனால் மக்கள் அடையும் நன்மை, கற்றவர்க்குக் கல்வி அளிக்கும் இன்பம், கற்றவர்கள் தமது நூலால்- கவிதையால்- பெறும் இன்பம்- இம்மூன்றையும் மேலே காட்டிய நீதிநெறி விளக்க வெண்பாக்கள் எடுத்துக் காட்டின. இவற்றைக் கொண்டே நீதிநெறி விளக்கத்தின் பெருமையைக் காணலாம். குமரகுருபரரின் செய்யுட் சிறப்பையும் அறியலாம்.



