
அருணகிரியார் – குருபரர் அறிவுரைகள்
சாமி சிதம்பரனார்
26. குரு பக்தி
குருமார்கள் இருவகைப்படுவார்கள். ஒருவகையினர், வித்தை- கல்வி கற்பிக்கும் குருமார்கள். மற்றொரு வகையினர் ஞானத்தையூட்டும் குருமார்கள்; இவ்வாறு வித்யா குரு, ஞான குரு என்று இருவகையினராகக் கொண்டனர் குருமார்களை. இது பண்டைக்கால முறை.
வித்யா குரு என்பவர்கள் கல்வி கற்பிப்பவர்கள்; பல நூல்களைப் போதிப்பவர்கள்; பல தொழில்களைக் கற்றுக் கொடுப்பவர்கள், சுருக்கமாகக் கூறவேண்டுமானால், இவ்வுலக வாழ்வுக்கு வேண்டிய அறிவு புகட்டும் கல்வி கற்றுக் கொடுப் பவர்கள் வித்தை கற்பிக்கும் குருமார்கள் ஆவார்கள்.
ஞான குரு என்பவர்கள், மறுமை இன்பத்தைப் பெறுவதற்கு வேண்டிய ஞானோபதேசம் புரிகின்றவர்கள்; மதகுருமார்கள் என்பவர்களும் ஞான குருமார் இனத்தைச் சேர்ந்தவர்கள். மடாதிபதிகள், பாதிரிமார்கள் போன்றவர்களும் ஞான குருமார் இனத்தைச் சேர்ந்தவர்கள்.
சைவ சித்தாந்தத்திலே குரு பக்தி, சிவ பக்தி, அடியார் பக்தி- இவை மூன்றும் சிறப்பாகக் கொள்ளப்படுகின்றன. இதைத்தான் குருலிங்க சங்கம் பக்தி என்பார்கள்.
இறைவனே குரு வடிவாக, எழுந்தருளிப் பிறவிப் பிணியை நீக்க ஞானத்தை உபதேசிக்கின்றான் என்பது சைவ சித்தாந்த முடிவு. குருவையும் கடவுளைப் போலவே எண்ணி வணங்கு வதும், போற்றுவதும் சைவ சமயத்தின் கோட்பாடுகளில் ஒன்றாகும்.
சைவ சமய பக்தர்களில் பலர்- அடியார்களில் பலர்- புலவர்களில் பலர் -தங்கள் ஞானகுருவைப் புகழ்ந்து பாடிய பாடல்கள் பல உண்டு. போற்றியுரைத்த நூல்கள் பல உண்டு. அப்பாடல்களையும், நூல்களையும் கொண்டு குரு பக்தியின் பெருமையைக் காணலாம்.
இதற்கு உதாரணமாகக் குமரகுருபர சுவாமிகளின் குரு பக்தியைக் கூறலாம். குமரகுருபரர் நல்ல தமிழ்ப் புலவர்; சிறந்த கற்பனா சக்தியும், கவிதா சக்தியும் படைத்தவர். அவருடைய ஞானகுரு மாசிலாமணி தேசிகர் என்பவர். இவர் தருமபுர ஆதினத்தின் நான்காவது குருமூர்த்தி ஆவார். இந்த மாசிலாமணி தேசிகரைப் போற்றும் முறையிலே குமரகுருபரர் பாடியிருக்கும் நூலுக்குப் பண்டார மும்மணிக்கோவை என்று பெயர். இந் நூலில் அவர் தமது தேசிகரிடம் விண்ணப்பித்துக் கொள்ளுவதாக அமைந்துள்ள ஒரு பாடலைக் காணலாம்.
மாசிலாமணி என்ற நல்ல பெயரை நிலை நிறுத்தினாய்; மிகச் சிறப்புடன் அமர்ந்திருக்கின்ற ஞானசம்பந்தனே! இங்கே, அடியேன், உன்னை வேண்டிக் கொள்ளுவது ஒன்றுண்டு; அது யாதென்றால்: மதவாதிகள் ஆன்மா வேறு, கடவுள் வேறு என்பர்; ஆன்மாவும் கடவுளும் வேறல்ல: இரண்டும் ஒன்றேதான் என்பர்; கடவுளும் ஆன்மாவும் வேறும் ஆகும், ஒன்றும் ஆகும். என்பர்; இவ்வாறு பலவாறு கூறும் சொற்களின் வழியிலே சென்று நான் தடுமாறாமல் இருக்க வேண்டும்; தெய்வத் தன்மை பொருந்திய சைவசித்தாந்தம் கூறும் அழியாத நிலைமையைப் பெற வேண்டும். அந்நிலையைப் பெற்று, இன்பத்திலே திளைத்திருக்கும் பிறவா நெறியை நான் அடையவேண்டும்; இதற்கு நீ அருள் செய்ய வேண்டும். இந்த அருளை நீ தராவிட்டால் இங்கு வேறொரு பிறவியை வேண்டுகின்றேன்.
அப்பிறவியையாவது எனக்கு நீ கொடுத்தருள வேண்டும். அந்தப் பிறவி எதுவென்றால், கூறுகிறேன் கேட்டருளுங்கள்.
ஐந்தருக்களின் நிழலின் கீழ் அரசனாக வீற்றிருந்து- அமரர்கள் பணிசெய்யும் தேவேந்திரனாக இருந்து- இன்பமுறும் பிறவியை நான் வேண்டவில்லை.
நான்முகனாகி, தாமரை மலரிலே வீற்றிருந்து பலரும் கொண்டாடும்படி, இவ்வுலகத்து உயிர்களைப் படைக்கும் தெய்வப் பிறவியையும் நான் விரும்பவில்லை.
இந்திரன், நான்முகன், திருமால் என்ற பிறவிகளிலே பிறந்தாலும் பழவினையை ஏமாற்றிவிட முடியாது. இந்தப் பிறவிகளில் இன்பம் உண்டு என்று கூறினாலும், தீவினை தன் பலனைத் தராமல் இராது. ஆதலால், இப் பிறவிகளைத் தவிர நான் வேறு எப்பிறவியைத்தான் வேண்டுகின்றேன் என்றால், அதையும் சொல்லி விடுகின்றேன்.
உன் பாதத்துக்குப் பணி புரிகின்றவர்கள் யாராயிருந்தாலும் சரி, அவர்கள் சிறந்த கல்வியும் ஒழுக்கமும் இல்லாதவர் களாயினும் சரி- அவர்கள் திருவமுது உண்டபின் தெருவிலே எறியப்பட்ட எச்சில் இலையில் உள்ள உணவை உண்டு இப் பிறவிக்கடலிலே கிடந்து வருந்தும் உன் வரம் பெற்ற ஒரு நாயாய்ப் பிறந்து வாழ விரும்புகிறேன். நாயாய்ப் பிறந்து எச்சில் இலையைப் பொறுக்கினாலும் உன் அருளை மறவாமல் வாழ விரும்புகின்றேன். இதுதான் எனது வேண்டுகோள் என்று பாடுகின்றார்.
இதனால் குரு பக்தியின் சிறப்பைக் காணலாம். இப் பொருள் அமைந்த பாடல்தான் கீழ்வருவது:-
மாசிலா மணிஎன வண்பெயர் நிறீஇ,
மேன்மையோடு அமர்ந்தஞான சம்பந்த;
ஈண்டுஉனைத் தமியனேன் வேண்டுவது யாது எனின்?
அந்நியம் என்றும், அநநியம் என்றும்,
இந்நிலை இரண்டும் எய்திற்று என்றும்,
பல்வேறு உரைக்குநர் சொல்வழிப் படாது.
திவ்வியம் பழுத்த சைவ சித்தாந்தத்து
இறவா நிலைமைபெற்ற இன்பம் ஆர்ந்து இருக்கும்
பிறவா நன்னெறி பெறப்புரி வதுவே;
அங்கது புரிதற்கு அரிது எனின், இங்கு ஒரு
சன்னம்யான் வேண்டுவது இனிது அருள் எனக்கே!
அதுவே,
ஐந்தரு நிழல்கீழ் அரசுவீற் றிருக்கும்
இந்திரன் ஆகி வாழ்ந் திருப்பதோ; அன்றே;
மலரோன் ஆகி மன்உயிர்த் தொகுதி
பலர் புகழ்ந்து இசைப்பப் படைப்பதோ; அன்றே;
அடல்அரா வணையில் அறிதுயில் அமர்ந்த
கடவுளாய் உலகம் காப்பதோ; அன்றே;
அவைதாம்:
ஆரா இன்பம் என்று அரும்பெயர் பெறினும்
வாரா வல்வினை வருவிக் கும்மே.
அன்னவை ஒழிய, மற்று என்னைகொல்? பிறஎனில்,
விழுத்தகு கல்வியும் ஒழுக்கமும் இலராய்ப்
பழிப்பு உளர் ஆயினும் ஆக; வழுத்திநின்
பொன்அடித் துணைசேர் நின்னடித் தொண்டர்
திருஅமுது ஆர்ந்து தெருக்கடை எறிந்த
பரிகலம் மாந்தி, இப்பவக் கடல் உழக்கும்
வான்உடை ஞமலி யாகிநின்
அருளையும் அயராது அவதரிப் பதுவே.
இதுவே குரு பக்தியைக் காட்டும் குமரகுருபரர் பாடல்.
எனக்குச் சைவ சித்தாந்த போதம் அருளி, அந்நெறியிலே வாழ அருள் செய். இன்றேல், இவ்வுலகில் ஒரு நாயாகப் பிறந்து, உனது அடியார்களின் எச்சில் இலையை உண்டு, உன்னை மறவாமலிருக்கும்படியாகவாவது அருள் செய்யவேண்டும் என்ற கருத்துள்ளதே இப்பாடல்.
குருவை வேண்டுவதனால் குருபக்தி; சைவ சித்தாந்த நெறியிலே நின்று சிவபிரானைப் பணிய வேண்டுவதால் லிங்க பக்தி; நாயாய்ப் பிறந்தாவது அடியார்களின் எச்சில் இலையைத் தின்ன விரும்புவதால் அடியார் பக்தி (சங்கம் பக்தி) ஆகிய மூன்று கொள்கைகளையும் இச்செய்யுளில் காணலாம்.



