அருணகிரியார் – குருபரர் அறிவுரைகள்
சாமி சிதம்பரனார்

12. பகுத்தறிவின் பயன்

தேசிகன், குரு என்ற சொற்கள், ஞானோபதேசம் செய்யும் ஆசிரியனைக் குறிக்கும் சொற்கள். அருணகிரிநாதர் முருகனைத் தேசிகன் என்று அழைக்கின்றார். பல இடங்களிலே குருநாதனே என்று குறிக்கின்றார். தனக்கு உண்மையறிவைக் காட்டியவர் முருகன். ஆதலால் முருகனைத் தேசிகன் என்றும், குருநாதன் என்றும் அவர் விளிப்பதிலே வியப்பில்லை.

முருகனாகிய தேசிகன்- குருநாதன்- குருமூர்த்தி- அருண கிரிநாதருக்கு அருளிய உண்மையை, அருணகிரிநாதருடைய திருமொழிகளாலேயே காணலாம்.

பகுத்தறிவாகிய ஒளியின் மூலந்தான் உண்மையான அறிவு- ஞானம் – உண்டாகும். உண்மை ஞானம் உண்டானால் தான், அன்பு, அருள் என்னும் குணம் பிறக்கும். இத்தகைய நிலையை அடைந்தவர்கள் எங்கும் இறைவனைக் காண்பார்கள். அவன் உருவாக இல்லை, வெட்டவெளியிலே அருவாக அமைந் திருக்கின்றான் என்று காண்பார்கள். இந்த உண்மையை முருகன் தனக்கு உபதேசித்ததாகக் கூறுகிறார் அருணகிரிநாதர்.

ஒளியில் விளைந்த உயர்ஞான
பூதரத்து உச்சியின்மேல்
அளியில் விளைந்ததுஓர் ஆநந்தத்
தேனை; அநாதியிலே
வெளியில் விளைந்த வெறும்பாழைப்
பெற்ற வெறும்தனியைத்;
தெளிய விளம்பிய வா! முகம்
ஆறுஉடைத் தேசிகனே!

இச்செய்யுளிலே ஞானத்தை மலையாகவும், ஆனந்தத்தை தேனாகவும் உருவகம் செய்யப்பட்டுள்ளது. இனிய செந்தமிழ்ப் பாட்டு.

பகுத்தறிவாகிய ஒளியிலே தோன்றிய உயர்ந்த ஞானமாகிய மலையின் உச்சியிலே, அன்பிலே உண்டான ஒப்பற்ற ஆனந்தமாகிய தேனை, காலம் குறிக்க முடியாத காலத்திலே தோன்றிய ஒன்றுமில்லாத சூன்யத்தையே உருவாகக் கொண்ட, ஒன்றுமற்ற தனித்த பொருளை, நான் நன்றாக உணர்ந்து கொள்ளும்படி உபதேசித்தவனே! ஆறுமுகங்களைக் கொண்ட தேசிகனே!

முருகன் தனக்கு உபதேசித்த உண்மையை- முருகன் திருவருளால்தான் உணர்ந்த உண்மையை- இவ்வாறு உரைத்தார் அருணகிரிநாதர்.

பகுத்தறிவாகிய ஒளியினால் உண்மையறிவைப் பெறலாம். உண்மையறிவின் முடிவிலே அன்பைக் காணலாம். அன்பிலே ஆனந்தத்தைப் பெற்றவர்கள் வெட்டவெளியாகிய பரம் பொருளைப் பெறுவார்கள். இந்த உண்மையை இப்பாடல் நமக்கு உணர்த்தியது.

இதற்கு அடுத்த செய்யுளும் முருகன் கூறிய உண்மையை எடுத்துரைக்கின்றது. முருகன் தனக்கு உரைத்த உண்மை இன்னது என்பதை அருணகிரிநாதர் எடுத்துரைக்கின்றார். அவர் அச் செய்யுளில் உரைப்பதைக் காண்போம்.

முருகன் தெய்வத் தன்மை பொருந்திய வள்ளியம்மையின் தலைவன். வள்ளியின் மொழிகள் மிகவும் இனிமையானவை. அம்மொழிகளின் இனிமை தேனையும், சர்க்கரைப் பாகையும் மிஞ்சியவை. அவற்றை அம்மொழிகளுக்கு உவமை கூற முடியாது. இத்தகைய வள்ளி மணாளன் எனக்குச் செய்த உபதேசம் ஒன்று உண்டு, அது ஒப்பற்ற உயர்ந்த உபதேசம். அந்த உபதேசத்தைப் பற்றி இன்னதென்று சொல்ல முடியாது.

அவன் கூறியது வானத்தைப் பற்றியதும் அன்று; வானமும் அன்று. காற்றைப் பற்றியதும் அன்று; காற்றும் அன்று, நெருப்பைக் குறித்ததும் அன்று; நெருப்பும் அன்று. தண்ணீரைப் பற்றியதும் அன்று; தண்ணீரும் அன்று. நிலத்தைப் பற்றியதும் அன்று; நிலமும் அன்று, தன்னைப் பற்றியதும் அன்று; தானும் அன்று. என்னைப் பற்றியதும் அன்று; நானும் அன்று. உருவம் அற்றதைப் பற்றியும் அன்று; உருவமும் அன்று. இவற்றையெல்லாம் கடந்த பொருளையே வள்ளி மணானன் எனக்கு உபதேசித்தான். காட்டினான்.

தேன் என்று பாகுஎன்று உவமிக்
கொணாமொழித் தெய்வள்ளி
கோன், அன்று எனக்குஉப தேசித்தது
ஒன்றுண்டு கூறஅற்றோ!
வான்அன்று, கால்அன்று, தீஅன்று,
நீர்அன்று, மண்ணும் அன்று,
தான்அன்று, நான் அன்று, அசரீரி
அன்று, சரீரி அன்றே.

இந்தப் பாடலும் முதலிலே காட்டிய பாடலின் கருத்தையே வலியுறுத்துகின்றது.

வள்ளிமணாளராகிய முருகப்பெருமான் எனக்கு உபதேசித்த உண்மைப் பொருள் ஒன்றுண்டு. அது இவ்வுலகில் நம்மால் காணப்படும் பஞ்ச பூதங்களையும் கடந்தது. அத்தகைய உண்மை ஞானத்தையே எனக்கு அறிவுறுத்தினார் என்பதே இப்பாடலின் கருத்தாகும்.

மேலே கூறிய பாடல்கள் இரண்டும் கந்தர் அலங்காரத்தில் உள்ளவை. இப்பாடல்களால் ஓர் உண்மையை நாம் காண முடிகின்றது. அருணகிரிநாதர் முருகனை வழிபடு தெய்வமாகக் கொண்டார். உள்ளத்தை ஒருநிலைப் படுத்துவதற்கு ஒரு கருவியாகக் கொண்டார். முருகனை உள்ளத்திற் கொண்டு மனத்தை ஒருவழிப்படுத்தி உண்மைப் பொருளை ஆராய்ந்து உணர்ந்தார் என்றுதான் நாம் முடிவு கட்ட வேண்டும்.

அருணகிரிநாதர் கண்ட உண்மையான கடவுள் எல்லா வற்றையும் கடந்து நிற்கும் பரம்பொருளாகும். அந்தப் பரம் பொருளை இன்னதென்று குறித்துக் காட்ட முடியாது. வெறும் வெட்டவெளியாக இருப்பதை எப்படிச் சுட்டிக்காட்ட முடியும்?

ஆனால், பகுத்தறிவு என்னும் ஒளிவிளக்கைக் கொண்டு உண்மை ஞானம், அந்த உண்மை ஞானத்தின் தன்மையாகிய அன்பு, அந்த அன்பின் மூலம் உண்டாகும் ஆனந்தம்- இவற்றால் அந்தப் பரம்பொருளை அறிய முடியும் என்பதே அருணகிரிநாதர் கருத்தாகும். அறிவு, அன்பு, ஆனந்தம் மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளவை. இத்தொடர்பே உயர்ந்த பரம் பொருளை அறிந்துகொள்ள வழி காட்டுவன என்று சுருங்கக் கூறிவிடலாம்.

அருணகிரிநாதர் பாடல்கள் பலவற்றிலே இத்தகைய சிறந்த தத்துவங்களைக் காணலாம்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 1 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !