அருணகிரியார் – குருபரர் அறிவுரைகள்
சாமி சிதம்பரனார்

20. பொதிய மலைக் காட்சி

குறம் என்பது ஒருவகை நூல். இத்தகைய நூல் பிற்காலத்தில் எழுந்தது. பிற்காலத்திலும் புதிதாகத் திடீரென்று கிளம்பிவிட வில்லை; தமிழரின் பண்டைக் காலப் பண்பாட்டை ஒட்டிப் பிறந்ததேயாகும்.

குறவர்கள் குறிஞ்சி நில மக்கள்; மலைநிலத்தில் வாழ்வோர். அவர்களிடம் குறி சொல்லும் வழக்கம் உண்டு. தாய், தன் மகளிடம் ஏதேனும் வேறுபாட்டைக் கண்டால் குறத்தியை அழைத்துக் குறி கேட்பாள்; மகளின் வேறுபாட்டுக்குக் காரணம் என்ன என்பதைக் கேட்டறிவாள். குறத்தியும் முறத்திலே நெல்லை வைத்து எண்ணிக் குறி சொல்லுவாள். இச்செய்தி பழந்தமிழ் இலக்கியங்களிலே காணப்படுகின்றது. இச்செய்தியை அடிப்படை யாகக் கொண்டு பிறந்ததுதான் குறம் என்னும் நூல்.

குறத்திலே சிறந்தது மீனாட்சியம்மை குறம். உருவிலே சிறியது மீனாட்சியம்மை குறம். குறைந்த பாடல்களைக் கொண்டது. இதுவே முதலில் தோன்றிய குறம் என்று கூடச் சொல்லி விடலாம். குற்றாலக் குறவஞ்சி என்பது உருவிலே பெரியது. மீனாட்சியம்மை குறத்தைவிட அதிலே பாடல்கள் மிகுதி. சந்தப் பாடல்கள் அதிகம். மீனாட்சியம்மை குறமும், குற்றாலக் குறவஞ்சியும் செந்தமிழ் வளம் நிறைந்த நூல்கள்.

ஆயினும் இரண்டையும் சீர்தூக்கினால் மீனாட்சியம்மை குறம் பழந்தமிழ் வளத்திலே ஒரு படி உயரத்தான் நிற்கும். மீனாட்சியம்மை குறத்தில் கதைப்போக்கு இல்லை; குற்றாலக் குறவஞ்சி கதைப்போக்கில் அமைந்திருக்கின்றது. குமரகுருபர முனிவர் மீனாட்சியம்மை குறத்தின் ஆசிரியர்; திரிகூட ராஜப்பக் கவிராயர் குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர்.

பொதிய மலைக் குறத்தி ஒருத்தி மதுரைக்கு வருகின்றாள். மீனாட்சியம்மையின் கையைப் பார்த்து குறி சொல்லுகின்றாள், இதுதான் மீனாட்சியம்மை குறத்தின் அமைப்பு.

இதிலே குறி சொல்லும் குறத்தி தன் பிறந்தகமாகிய பொதிய மலையைப் புகழ்ந்து பேசும் பகுதி மிகவும் அழகாக அமைந்துள்ளது. அது, பாண்டி நாட்டின் பெருமையையும், பொதிய மலையின் சிறப்பையும், தமிழின் அருமையையும் விளங்கும் சித்திரங்களாகக் காட்சியளிக்கின்றன. பொதிய மலையின் சிறப்பைக் கூறும் பாடலைக் காண்போம்.

திங்கள்முடி சூடும்மலை;
தென்றல்விளை யாடும்மலை;
தங்குபுயல் சூழும்மலை;
தமிழ்முனிவன் வாழும்மலை;
அங்கையற்கண் அம்மைதிரு
அருள்சுரந்து பொழிவது எனப்
பொங்குஅருவி தூங்கும்மலை;
பொதிய மலை என்மலையே.

குறத்தி தான் வாழும் பொதிய மலையைப் பற்றிச் சொல்வதாகக் குமரகுருபரர் இவ்வாறு பாடுகின்றார். இச்செய்யுளின் பொருள் எளிதானது. இனிய செய்யுள்.

சந்திரனைத் தன் உச்சியிலே சூடிக் கொண்டிருக்கின்ற உயர்ந்த மலை; தென்றற் காற்று மகிழ்ந்து விளையாடிக் கொண்டிருக்கின்ற மலை; அம்மலையிலே குடியிருக்கின்ற மேகங்கள் சஞ்சரித்துக் கொண்டேயிருக்கின்ற மலை; தமிழ் முனிவராகிய அகத்தியர் வாழ்கின்ற மலை; அந்த மலையிலே அருவி நீர் வற்றாமல் ஓடுகின்றது; அது மீனாட்சியம்மையின் திருவருள் எப்படி வற்றாமல் சுரந்து பெருகுமோ அது போலப் பெருகி ஓடிக்கொண்டேயிருக்கின்றது. இத்தகைய பொதிய மலைதான் என்னுடைய மலையாகும்.

இதுதான் பொதிய மலையின் சிறப்பு. இந்தப் பாட்டிலே பொதிய மலையின் உயர்வு, அதில் உள்ள இனிமை, அந்த மலைக்குள்ள பெருமை, அந்த மலையின் இயற்கைச் சிறப்பு எல்லாம் எடுத்துக்காட்டப்பட்டன.

திங்கள் முடிசூடும் மலை என்பதும், தங்கு புயல் சூழும் மலை என்பதும் மலையின் உயர்ச்சியைக் குறித்தன. தென்றல் விளையாடும் மலை என்பது மலையிலுள்ள இனிமையைக் குறித்தது. தமிழ் முனிவன் வாழும் மலை மலைக்குள்ள சிறப்பைச் சுட்டிற்று, அருவிக்கு அங்கையற்கண் அம்மையின் அருளை உவமையாகக் காட்டப்பட்டது. இதன் மூலம் இறைவியின் வற்றாத பேரருள் விளக்கப்பட்டது.

மீனாட்சி என்பதற்கு மீன் போன்ற கண்ணுடையவள் என்பது பொருள். இதைத் தூய தமிழ்ச் சொல்லால் அம்கயல் கண் என்று குறித்திருப்பது வியக்கத் தக்கது! அம் கயல் கண்: அழகிய மீன் போன்ற கண்.

தமிழ் வளர்த்த அகத்திய முனிவர் வாழ்வதும் மலைக் கொரு பெருமையாகக் குறிக்கப்பட்தும் குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்த பாட்டும் பொதிய மலையின் சிறப்பைக் குறிப்பிடுகின்றன. மேலே காட்டிய பாட்டைப் போலவே கீழ்வரும் பாட்டும் சந்தமும் பொருளும் அமைந்த பாட்டு.

கன்னம் பெய்து உறங்குகொலைக்
களிறு கிடந்து பிளிறுமலை;
தென் அம் தமிழும் பசும்குழவித்
தென்றல் கொழுந்தும் திளைக்கும் மலை;
அன்னம் பயிலும் பொழில்கூடல்
அறம்அம் கூந்தல் பிடி ஆள்
பொன்அம் குடுமித் தடம்சாரல்
பொதிய மலைஎன் மலைஅம்மே.

இந்தப் பாட்டும் மலையின் சிறப்பைச் சொல்லுகிறது. தென்றலும் தமிழும் அம்மலையிலே பொருந்தியிருப்பது, அம்மலையிலே விளையாடிக் கொண்டிருப்பது- இது அதற்கொரு பெருமை. இதைப் போன்ற மற்றொரு சிறந்த பெருமை, அந்தப் பொதியமலை மீனாட்சி அம்மையின் ஆட்சிக்கு உட்பட்டிருந்ததாகும். தென்றல், தமிழ், மீனாட்சியம்மையின் ஆட்சி- இவற்றால் பொதிய மலை சிறப்படைந்தது, பெருமை பெற்றது. இக்கருத்தை இச்செய்யுளிலே காண்கிறோம். செய்யுளின் பொருள் முழுவதையும் காண்போம்.

காதின் வழியே மத நீரை ஊற்றிக் கொண்டிருக்கின்ற கொலை செய்யுந் தன்மையுள்ள ஆண் யானைகள் சில சமயங்களில் படுத்துக் கிடந்து உறங்குகின்றன. சில சமயங்களில் உறக்கம் வராமல் பிளிறுகின்றன. யானைகள் வாழும் இத்தகைய பெரிய காடு நிறைந்த மலை.

மிக அழகும் இனிமையும் பொருந்திய தமிழும், இளங் குழந்தையாகிய தென்றற் கொழுந்தும் சேர்ந்து விளையாடிக் கொண்டிருக்கின்ற இனிமை நிறைந்த மலை.

அன்னப் பறவைகள் வாழ்கின்ற நீர்நிலைகள் அமைந்த சோலைகளோடு கூடிய மதுரை நகரத்தையாண்டவள் அங்கயற் கண் அம்மை. கருமையான அழகிய கூந்தலையுடைய பெண் யானை போன்றவள் அந்த அம்மையார். அவரால் ஆளப்பட்டது அந்தப் பொதியமலை.

அந்த மலை அழகான உச்சியை உடையது. பரந்த பக்கங்களை உடையது. இத்தகைய பொதிய மலைதான் நான் வாழுகின்ற மலை.

இந்த இரண்டு பாடல்களும், குறத்தி, தன்னுடைய இருப்பிடமாகிய பொதிய மலையைப் புகழ்ந்து சொல்லியது. யாரும் தன் தாயகத்தைக் குறைத்துப் பேசமாட்டார்கள். அதைப் புகழ்ந்துதான் பேசுவார்கள்.

தன் தாயகம், வறுமைக்கு எடுத்துக்காட்டாக இருக்கலாம்; கொடுமைக்கு உறைவிடமாக இருக்கலாம். இருப்பினும் அதைப் பற்றிப் பிறர் இழித்துப் பேச இடந்தர மாட்டார்கள். தன் தாயகத்திலே எல்லாச் செல்வமும் அமைந்திருந்தால் அதைப் பற்றிப் பெருமையடைவதைக் குறித்துக் கேட்கவா வேண்டும்?

பொதிய மலை, இயற்கையிலேயே வளம் நிறைந்தது. பொருள் வளம் மட்டும் அன்று, அருள் வளமும் நிரம்பியது. அந்தப் பொதியத்தைத் தாயகமாகக் கொண்ட குறத்தி அதைத் புகழ்ந்து பேசுவதைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?

பெண்கள் பிறந்தகத்தின் பெருமை பேசுவதிலே தவற மாட்டார்கள். இது அவர்கள் இயற்கை. இயற்கையை ஒட்டியும் இப்பாடல்கள் அமைந்திருக்கின்றன.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 1 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !