அருணகிரியார் – குருபரர் அறிவுரைகள்
சாமி சிதம்பரனார்

27. கவிகளின் பெருமை

இக்காலத்தில் கவிகள் கணக்கில்லாமல் மலர்கின்றன; அவற்றில் கவி மணம் கமழ்கின்றதா என்பது விவாதத்திற்கு உரிய செய்தி. கவி மணம் வீசும் செய்யுட்களும் உண்டு; மணம் அற்ற பாடல்களும் உண்டு, மணம் வீசாத பாடல்கள் எல்லாம் வெயிலால் வாடி வதங்கி உதிர்ந்து காய்ந்து சருகாகப் போகும் மலர்களைப் போலவே சிதைந்துவிடுகின்றன.

கவிகள் சுவையுள்ளனவோ, சுவை இல்லாதனவோ- அவற்றைப் பற்றிப் பாடுவோர் கவலைப்படுவதில்லை. தமது கவிகளை மக்கள் ஏற்றுக்கொள்ளுவார்களா? ஏற்றுக் கொள்ள மாட்டார்களா? – என்பதைப் பற்றிக் கூடப் பலர் கவலைப் படுவதில்லை. தமது பாடல்கள் படிப்போர் மனத்திலே குடிகொள்ளுமா? குடி கொள்ளாதா? – என்பதைப் பற்றிக்கூடப் பலர் எண்ணிப் பார்ப்பதில்லை.

நமது பாடல்கள் பத்திரிகைகளில் வெளிவந்தால் போதும்; அல்லது புத்தக உருவில் வெளியிடப்பட்டால் போதும் என்று நினைக்கின்றனர். பிறர் படிக்காவிட்டாலும்- சுவைக்கா விட்டாலும்- பாராட்டாவிட்டாலும், தாம் எழுதிய பாடல் களைத் தாமே படித்துப் படித்து இன்புறுவோர் உண்டு. தாம் எழுதியவை கவிகளாயினும் சரி, கட்டுரைகளாயினும் சரி, கதைகளானாலும் சரி- அவற்றைத் தாமாகவே ஒன்றிரு தடவை படித்து மகிழாதவர்கள் யாரும் இல்லை. ஒரு சிலரே இதற்கு விலக்காக இருக்கலாம்.

நல்லவையோ கெட்டவையோ, உயர்ந்தவையோ, தாழ்ந் தவையோ- விடாமுயற்சியுடன் எழுதிக் கொண்டே இருப்பவர் களைப் பாராட்டத்தான் வேண்டும். நீந்தக் கற்றபின்தான் தண்ணீரில் குதிப்பேன் என்றால் முடியுமா? ஏதோ காமா சோமா என்று எழுதப் பழகத்தான் வேண்டும். இப்படித் துணிந்து எழுத முன்வருகின்றவர்கள் வர வர எழுத்திலே வல்லவர்கள் ஆவார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் இவர்களிடம் ஓர் உறுதி மட்டும் வேண்டும்.

நான் சிறந்த புலவனாவேன்; கவிஞன் ஆவேன். மக்கள் மனத்தைக் கவரும்படி கவி எழுத வல்லவனாவேன் என்பதுதான் கவி எழுதுவோன் உள்ளத்தில் இருக்க வேண்டிய உறுதி.

இதைப் போலவே, நான் சிறந்த கட்டுரையாளன் ஆவேன்; கதை ஆசிரியனாவேன்; படிப்போர் சுவைக்கும்படி கட்டுரைகளும் கதைகளும் இனிமை தவழ எழுதும் சக்தியைப் பெற்றே தீருவேன் என்ற உறுதி, மறுமலர்ச்சி எழுத்தாளன் மனத்திலே இருக்கவேண்டும். இத்தகைய எழுத்தாளன் பிற்காலத்திலே பலரும் போற்றத்தக்க எழுத்தாளன் ஆவான் என்பதில் ஐயமில்லை.

ஆகவே, முயற்சியும் உறுதியும் வீண்போகமாட்டா. மக்களை முன்னுக்குத் தள்ளும் ஊர்திகள் இவைதாம்.

இந்த முயற்சியும் உறுதியும் இரு வகைகளில் ஏற்பட வழியுண்டு. ஒருவகை, தன்னம்பிக்கையுடன் உழைப்பது; எத்தனை தோல்வி ஏற்பட்டாலும் சலிக்காமல் உழைப்பது. தாம் எழுதுவன நன்றாயில்லை என்று பிறரால் புறக்கணிக்கப்பட்டாலும் அலுப்புச் சலிப்பில்லாமல் நன்றாக எழுத வேண்டும் என்ற எண்ணத்துடன் எழுதுவது; எழுதியவை நன்றாக இல்லா விட்டால் எழுதியவற்றைச் சுக்குநூறாகக் கிழித் தெறிந்துவிட்டுப் புதிதாக எழுதுவது; மையும் காகிதமும் நேரமும் வீணாகின்றனவே என்று கவலைப்படாமல் மேலும் மேலும் எழுதிக் கொண்டே இருப்பது. இவ்வாறு செய்வது முயற்சியும் உழைப்பும் ஆகும்; முன்னேறுவேன் என்ற உறுதியையும் காட்டுவதாகும். இத்தகை யவர்கள் வெற்றி பெறுவார்கள் என்பது உறுதி. இன்றில்லா விட்டாலும் நாளைக்கு வெற்றி நிச்சயம்.

வெற்றி பெறுவதற்கு வேறு ஒரு வழியும் உண்டு. அது தெய்வ நம்பிக்கை. தமிழக மக்கள், கலைத் தெய்வமாகக் கலைமகளை வழிபட்டு வருகின்றனர். கலைத் தெய்வ வணக்கம் பாரத நாடு முழுவதும் உண்டு. இந்தக் கலைத் தெய்வத்தைச் சரசுவதி என்றும், இவள் பிரமதேவன் மனைவி என்றும், அவனுடைய நாவில் வசிப்பவள் என்றும் புராணங்கள் கூறும். இப்புராணக் கூற்றுப் புனைந்துரையாகும். ஆயினும் இதில் ஒரு தத்துவம் உண்டு.

நான்முகன் நாவில் இருப்பவள் கலைமகள் என்ற கூற்றை ஆராய்ந்தால் இவ்வுண்மையைக் காணலாம். யாராவது நாக்கிலே ஒரு பெண்ணை வைத்துக் கொண்டிருக்க முடியுமா? ஒரு பெண்ணை நாக்கிலே உட்கார வைத்துக்கொள்ளுவ தென்றால், அந்த ஆண் உருவம் எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும்? அல்லது ஓர் ஆண் உருவத்தின் நாவிலே ஒரு பெண் உருவம் உட்கார்ந்தோ படுத்தோ இருப்பதென்றால் அப் பெண்ணின் உருவம் எப்படி இருக்க வேண்டும்? இந்தப் பெண்ணும் ஆணும் கணவன்- மனைவி என்றால், அவர்களுக்குள் உருவப் பொருத்தம் இருக்க முடியுமா? இவற்றை எண்ணிப் பார்த்தால் கலைமகள் என்பது ஒரு கற்பனை என்பதைக் காணலாம்.

நாவன்மையைத்தான் நாமகள் என்று குறித்தனர். கலைத் திறமையைத்தான் கலைமகள் என்று குறித்தனர். கலைமகள் வெண்தாமரை மலரில் வீற்றிருப்பாள் என்று குறித்திருப்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்; வெண்தாமரை என்பது உள்ளத்தைக் குறிப்பது. வெண் தாமரை உள்ளத்தின் தூய்மையை உணர்த்துவது. நாமகள் என்பது நாவின் வல்லமையைக் காட்டுவது. இதை அறியாமல், நாமகள் என்பவள், புராணங்கள் சொல்லுவது போல் நான்முகன் நாவிலே வீற்றிருப்பவள் என்று நம்பி அவளை வழிபடுகின்றவர்களும் சோர்வடைந்து விடுவதில்லை. நம்பிக்கை அவர்களுக்கு உள்ள துணிவையும், நாவன்மையையும் அளிக்கின்றது. நாமகளை வழிபட்டுப் பாடும் புலமை பெற்ற புலவர்கள்- கவிகள்- பலருடைய வரலாறுகளைக் கேட்டிருக்கின்றோம். நம்பிக்கை வீண் போவதில்லை. நம்பினார் கெடுவதில்லை; நான்குமறைத் தீர்ப்பு என்பது ஒரு பெரியார் வாக்கு. நம்பிக்கை வெற்றிப் பாதையிலேதான் நடத்திச் செல்லும்.

இத்தகைய நம்பிக்கை கொண்ட புலவர்களிலே குமர குருபர சுவாமிகள் ஒருவர். அவர் தனக்கு நல்ல செய்யுள் திறமை வேண்டும் என்று நாமகளை முன்னிட்டுப் பாடுகின்றார்.

நாடும் பொருட்சுவை சொற்சுவை
தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்தருள்
வாய்; பங்க யாசனத்தில்
கூடும் பசும் பொன் கொடியே!
கனதனக் குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே!
சகலகலா வல்லியே!

என்பது அவர் பாடல்களுள் ஒன்று. இப்பாடலில், அவர் தனக்கு நல்ல சொல்லின்பம், பொருளின்பம் அமையும்படி நான்கு வகையான கவிதைகளையும் பாடும்படி அருள் செய்வாய் என்று கலைமகளை வேண்டுகின்றார்.

தாமரை மலராகிய ஆசனத்தில் அமர்ந்திருக்கும் பசுமையான பொற்கொடியே! பருத்த தனமாகிய குன்றுகளையும் ஐந்து வகையாக அழகு செய்யும் கூந்தல் காட்டையும் சுமந்திருக்கும் கரும்பே! சகலகலாவல்லி என்னும் பெயருள்ளவளே! பிறர் விரும்பும்படி, சொற் சுவையும் பொருட் சுவையும் அமையும்படி ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் நான்கு வகையான கவிதைகளையும் பாடும்படி எனக்கு அருள் செய்வாய் என்பதே இதன் பொருள்.

குமரகுருபரரிடம் இருந்த உறுதியுள்ளம் அவரைச் சிறந்த கவியாகச் செய்தது என்பதில் ஐயமில்லை. ஆகவே, உறுதியும் உழைப்பும் வெற்றி தரும் என்பதில் ஐயம் சிறிதும் இல்லை.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 1 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !