அருணகிரியார் – குருபரர் அறிவுரைகள்
சாமி சிதம்பரனார்

7. மக்கள் முப்பருவம்

மக்கள் வாழுங் காலத்தை மூன்று பிரிவாகப் பிரித்து விடலாம். பொதுவாக மக்கள் வாழ்வு மூன்று பருவத்தில் அடங்கிவிடும். இது மக்களிடையில் நாம் நேரே காணும் உண்மையு மாகும். குழந்தைப் பருவம், வாலிப வயது, கிழப் பருவம் என்பனவே அந்த மூன்று நிலைகள். இம்முப்பருவங்களைப் பாலப் பருவம், குமாரப் பருவம், விருத்தப் பருவம் என்று கூறுவர்.

மக்கள் வாழ்நாளை- வாழ்கின்ற பருவத்தை- இவ்வாறு மூன்று பகுதியாகப் பிரிப்பது ஆண்களுக்கும் பொருந்தும், பெண்களுக்கும் பொருந்தும். அருணகிரி நாதர், மக்கள் வாழ்வை இவ்வாறு மூன்று பிரிவினுள் அமைத்தே பாடியிருக்கின்றார். இவ்வுண்மையைத் திருப்புகழ்ப் பாடல்களிலே காணலாம். ஒரே பாடலில், முப்பருவ நிகழ்ச்சிகளைப் பற்றியும் கூறியிருக்கின்றார். இத்தகைய பாடல்கள் பல உண்டு.

சில பாடல்களில் குழந்தைப் பருவத்தைப் பற்றி மட்டும் பாடுவார்; சில பாடல்களில் வாலிபப் பருவ விளையாட்டைப் பற்றி மட்டும் பாடுவார்; சில பாடல்களில் மக்களின் முதுமைப் பருவ நிலையைப்பற்றி மட்டும் எடுத்துரைப்பார். வாலிபப் பருவத்தைப்பற்றி அருணகிரியார் கூறுவது குறிப்பிடத்தக்கது. வாலிப முறுக்கால்- இளமைத் திமிரால்- அவர்கள் காமத்திற்கு இரையாகிக் கெட்டலைவதைப் பற்றித்தான் மிகுதியாகப் பாடியிருக்கின்றார். அவர் பாடியிருக்கும் அவ்வளவும் இயற்கை யாக அமைந்திருக்கின்றன; நடந்த அல்லது நடைபெறும் நிகழ்ச்சிகளாகவே காணப்படுகின்றன. இவ்வுண்மைகளை விளக்கும் சில பாடல் பகுதிகளைக் காண்போம்:

அவனிதனி லேபி றந்து, மதலைஎன வேத வழ்ந்து,
அழகு பெற வேந டந்து, – இளையோனாய்;
அருமழலை யே,மி குந்து, குதலைமொழி யே,பு கன்று,
அதிவிதம தாய்,வ ளர்ந்து, – பதினாறாய்;
சிவகலைகள், ஆகமங்கள், மிகவும்மறை ஓதும் அன்பர்
திருவடிக ளே, நி னைந்து, – துதியாமல்;
தெரிவையர்கள் ஆசை மிஞ்சி, வெகுகவலை யாய்,உ ழன்று
திரியும்,அடி யேனை, உன்றன்- அடிசேராய்!

என்பது பழனியைப் பற்றிப் பாடியுள்ள ஒரு திருப்புகழின் முதல் பகுதியாகும். இப்பாடலில் குழந்தைப் பருவ நிலையும், குமாரப் பருவ நிலையும் காணப்படுகின்றன. முதல் அடி குழந்தைப் பருவத்தைக் குறிப்பிடுவது; இரண்டாவது அடி வாலிபப் பருவத்தை வர்ணிப்பது.

இந்த உலகிலே மனித உருவில் பிறந்தேன்; சிறு குழந்தையாகி நடக்கத் தெரியாமல் தவழ்ந்தேன்; அதன் பின் என் பெற்றோர் கண்டு மகிழ அழகாக நடந்தேன்; குழந்தைப் பருவம் கடந்து இளைஞன், அதாவது சிறுவன் ஆனேன்.

இதன்பின் சிறந்த மழலைமொழி பேசக் கற்றுக் கொண்டேன்; திருத்தமற்ற குதலைச் சொற்கள் கூறி அனைவரையும் மகிழச் செய்தேன். இவ்வாறு மிகவும் சிறந்த வகையிலே வளர்ந்தேன்; இவ்வாறு இளமைப்பருவத்தைக் கடந்து பதினாறு வயது நிரம்பிய வாலிபன் ஆனேன்; குமரன் ஆனேன்.

இதுவே முதல் அடியின் பொருள். இவ்வடி குழந்தைப் பருவ நிலையைக் குறித்தது. இதன் பிறகு- குமரன் ஆன பிறகு- என்ன நடந்தது என்பதை இரண்டாவது அடியில் குறிப்பிடுகிறார்.

சிவபுராணங்கள், ஆகமங்கள், மிகவும் சிறந்த வேதங்கள்- இவைகளை ஓதிக்கொண்டிருக்கும் அன்பர்களின் திருவடிகளை எண்ணிப் போற்றுவது வாலிபர்களின் கடமையாகும். இத்தகைய நல்லொழுக்க நெறியிலே நிற்கும் வாலிபர்களால் மனித சமூகம் நன்மையடையும். ஆனால் இந்தக் கடமையை நான் செய்ய வில்லை. கல்வி கற்ற- தெய்வத்தின் பால் அன்பு கொண்ட- அடியார்களை நான் போற்றவில்லை.

பெண்ணாசை மிகுந்தேன்; பல பெண்கள் மேல் காமங் கொண்டேன்; அவர்கள் மேல் அளவற்ற ஆசை கொண்டேன்; பெண்களுடன் சேர்ந்து வாழ்வதையே விரும்பி, அதே கவலை யாகத் திரிந்து வருந்தினேன். இன்னும் பெண்ணாசை என்னை விட்டுவிடவில்லை; என்னைப் பிடித்து ஆட்டிக் கொண்டுதான் இருக்கின்றது. இப்படிக் கிடந்து தவித்துத் திரிகின்ற அடியேனை உன் பாதத்தில் சேர்க்கும்படி வேண்டுகின்றேன்; உன் பாதத்தை நினைத்து வணங்கும்படி அருள் செய்ய வேண்டுகின்றேன்.

இதுவே இரண்டாவது அடியின் பொருள். ஆகவே மேலே காட்டிய பாடலில், குழந்தைப் பருவ இயல்பையும், குமரப் பருவ இயல்பையும் எடுத்துக்காட்டியிருப்பதைக் காணலாம்.

முதுமைப் பருவத்தின் இயல்பை அருணகிரிநாதர் மிகவும் தெளிவாக எடுத்துக் கூறுகிறார். பல பாடல்களிலே இதைக் காணலாம். திருச்செந்தூர்த் திருப்புகழில் உள்ள ஒரு பாடலின் பகுதியைப் பார்த்தாலே போதும்; முதுமைப் பருவ நிலையை அப்படியே எடுத்துக்காட்டுவதில் அருணகிரிநாதரின் ஆற்றலைக் காணலாம்.

தொந்தி சரிய, மயிரே வெளிறநிரை
தந்தம் அசைய, முதுகே வளைய இதழ்
தொங்க, ஒருகை தடிமேல் வர மகளிர் நகையாடி;
தொண்டு கிழவன் இவன்ஆர் என, இருமல்
கிண்கிண் என, முன் உரையே குழற, விழி
துஞ்சு குருடு படவே, செவிடுபடு செவியாகி;
வந்த பிணியும், அதிலே மிடையும்ஒரு
பண்டி தனும், மெய் உறவே தனையும், இள
மைந்தர், உடைமை? கடன்? ஏ தென, முடுகு துயர்மேவி;
மங்கை அழுது விழவே, எமபடர்கள்
நின்று சருவ மலமே ஒழுக, உயிர்
மங்கு பொழுது, கடிதே, மயிலின் மிசை வரவேணும்;

இது திருச்செந்தூர்ப் பாட்டு ஒன்றின் முதல்பகுதி. தன்னையே விருத்த வயதினராக ஆக்கிக்கொண்டு பாடுகின்றார். இதன்மூலம் விருத்த வயதிலே ஒருவன் நிலைமை எப்படி யிருக்கும் என்பதை எடுத்துக் காட்டியிருக்கின்றார். இதன் பொருளைக் காண்போம்.

வயிறு மடிந்து சுருங்கிச் சரிந்துவிட்டது; மயிர் வெள்ளை வெளேர் என்று நரைத்துவிட்டது. அழகாக வரிசையுடன் இருந்த பற்கள் ஆட்டங் கண்டுவிட்டன. நிமிர்ந்து உட்காரவோ, நிற்கவோ, நடக்கவோ முடியவில்லை; முதுகு வளைந்துவிட்டது. வாயைச் சரியாக மூட முடியவில்லை. இதழ் தொங்குகின்றது. நடை தளர்ந்து விட்டது; ஒரு கையில் தடியைப் பிடித்து ஊன்றிக் கொண்டுதான் நடக்க முடிகின்றது; இவ்வாறு நான் தள்ளாடித் தள்ளாடி நடக்கும் கோலத்தைக் கண்டு பருவ மங்கையர்கள் சிரிக்கின்றனர்.

இப்படி நடக்கும் இத்தொண்டு கிழவன் ஆர் என்று கேட்டுப் பரிகசிக்கின்றனர்; கிண் கிண் என்ற ஒலியுடன் இருமல் தொண்டையைக் கிழித்துக்கொண்டு வருகின்றது; நினைக்கின்ற நினைப்பைச் சொல்லால் புரியும்படி வெளியிட முடியவில்லை; உரைகள் குழறுகின்றன. விழிகள் பார்வை இழந்தன; குருடாகி விட்டன. காதுகள் ஓசையைக் கேட்க முடியாமல் செவிடாகிவிட்டன.

நோயும் வந்துவிட்டது; அந்த நோயின் காரணமாக வைத்தியம் செய்வதற்கு என்று வந்த பண்டிதனும் தருகின்ற வேதனை- துன்பம்- என் உடம்பை வருத்துகின்றது. இந்த நிலையிலே எனது இளமைந்தர்கள் குடும்பக் கணக்குக் கேட்கின்றனர்; எவ்வளவு சொத்து இருக்கிறது? எவ்வளவு கடன் இருக்கிறது? யார் யாரிடமிருந்து எவ்வளவு வரவேண்டும்? யார் யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும்? என்று நச்சரிக்கின்றனர். இதனால் எனக்குச் சாகுங் காலத்தில் கூட மனச் சாந்தியே இல்லை.

இந்தச் சமயத்தில் எனது மனைவி, மிகுந்த துக்கத்துடன் அழுது விழுந்து புரளுகின்றாள். யமதூதர்கள் என் எதிரில் வந்து என் உடம்பில் உள்ள மல மூத்திரங்கள் தாமே படுக்கையில் கழியும்படி உயிரைக் கவர நிற்கின்றனர். இப்படி எனது உயிர் போகும் பொழுது- மறையும் பொழுது – நீ மயிலின்மேல் ஏறி வந்து என்னைக் காப்பாற்ற வேண்டும்.

இதுவே மேலேகாட்டிய திருப்புகழ் அடிகளின் பொருள். மேலேகாட்டிய திருப்புகழ்ப் பாடல்கள், மனிதப் பிறவியை வீணாக்கக்கூடாது; மனிதப் பிறவி அழியக் கூடியது; ஆதலால், வீணாக மூத்து இறப்பதற்கு முன் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும் என்ற உண்மையை உரைக்கின்றன.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 1 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !