அருணகிரியார் – குருபரர் அறிவுரைகள்
சாமி சிதம்பரனார்

24. வழிகாட்டும் தெய்வங்கள்

கடவுளுக்கு உருவமில்லை; குணம் இல்லை; விருப்பில்லை; வெறுப்பில்லை. கடவுளை இத்தன்மையன், இவ்வடிவினன், இந்நிறத்தினன் என்று எழுதிக் காட்ட முடியாது; சொல்லியும் காட்ட முடியாது. அப்பாலுக்கு அப்பாலாய் இருப்பவன் என்றுதான் எல்லா அறிஞர்களும் இயம்புகின்றார்கள். கடவுள் அன்பர்களிலே- பக்தர்களிலே – இதை மறுப்பவர்கள் எவரும் இல்லை.

இவ்வுண்மையை உணர்ந்தவர்களிலே பலரும் கடவுளை வணங்கும்போது அவருக்கு ஒரு உருவம் கற்பித்தே வணங்கியிருக்கின்றனர்; அவரைப் பற்றிப் பாடும் போது ஒரு உருவம் அமைத்துப் பாடியிருக்கின்றனர். இப்படிச் சிந்தித்திருப்பது ஏன்? பாடியிருப்பது ஏன்? – என்ற கேள்விகள் எழும்புவது இயற்கை.

இக்கேள்விக்கு விடையிறுப்பது அவ்வளவு அரிதல்ல. மனித வாழ்க்கையைச் செம்மைப்படுத்தக் கடவுள் வாழ்க்கையையும் மனித வாழ்க்கையோடு இணைத்துப் பாடினர். மக்களால் உயர்வாக மதிக்கப்படும் கடவுளை ஒரு குடித்தனக் காரராக வைத்து- இல்லறத்தினராக வைத்து- குடும்பம் நடத்தும் முறையை மக்களுக்கும் போதித்தனர்.

தாங்கள் வழிபடும் கடவுளர்களை, மக்களைப் போல் குடும்பம் நடத்துவோராகக் கற்பனை செய்ததிலே சில கோளாறுகளும் புகுந்துவிட்டன. இதில் ஐயம் இல்லை; உண்மை தான். ஆயினும் சில உண்மைகளும் அடங்கியிருக்கின்றன. அவற்றை மறைக்க இயலாது.

திருமாலோ, சிவனோ, நான்முகனோ, முருகனோ- தங்கள் மனைவியுடன் வாழ்கின்றனர் என்று சொல்லும்போது அவர்கள் தங்கள் மனைவியரிடம் காட்டும் அன்பு வெளிப்படுத்தப்படு கின்றது; அவர்களுடைய காதல் சிறப்பிக்கப்படுகின்றது. மக்களும், காதலனும் காதலியுமாக வாழ வேண்டும்; அவ்வாறு வாழ்வதிலேதான் இன்பம் உண்டு; காதலுடன் வாழ்வதுதான் இல்லறத்தின் சிறப்புக்கு அடிப்படையாகும் என்ற உண்மை எடுத்துக் காட்டப்படுகின்றது.

கடவுளர்கள், இவ்வுலகில் வாழ்ந்த கொடியவர்களை அடக்கினார்கள்; அழித்தார்கள்; நல்லவர்களைக் காப்பாற்றினார்கள்; கொடியவர்களின் செயல்களை வெறுத்தார்கள்; நல்லவர்கள் பணிகளை ஏற்றுக் கொண்டார்கள்; இவ்வாறு புராணங்கள் கூறுகின்றன. மனிதர்களும் கொடுமைகளை வெறுக்க வேண்டும்; கொடியவர்களை வெறுக்க வேண்டும்; நன்மைகளை செய்யவேண்டும்; நல்லவர்களைப் போற்ற வேண்டும் என்பதற்காகவே கடவுளைப் பற்றிய இக்கதைகள் எழுந்தன.

இத்தெய்வங்கள் தங்கள் பிள்ளைகளுடன் கொஞ்சிக் குலாவுவதாகப் பல பாடல்கள் காணப்படுகின்றன. இப் பாடல்களிலே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் காட்டும் ஆதரவும் அன்பும் வெளியிடப்பட்டிருக்கின்றன.

ஆகவே, தமிழர்கள், தங்கள் வணங்கும் கடவுளரைப் பெண்டு பிள்ளைகளுடன் அமைத்துக் காட்டியிருப்பது மாநில மக்கள் வாழ்வதற்கு வழிகாட்டுவதற்காகத்தான் என்பது உண்மை. அவர்கள் கடவுள் ஒன்றென்பதை அறியாமல் இப்படிச் செய்து விடவில்லை; கடவுள் உருவமற்றவர் என்பதை உணராமல் இப்படிச் செய்து விடவில்லை. தமிழ் இலக்கியங்களை நன்றாகச் சுவைத்தவர்கள் இவ்வுண்மையை உணர்வார்கள்.

இவ்வுண்மையை ஒரு உதாரணத்தால் காண்போம். திருவாரூர் நான்மணிமாலை என்பது ஒரு சிறு நூல்; குமர குருபரால் இயற்றப்பட்டது. இந்நூலிலே திருவாரூரின் சிறப்பைக் காணலாம்; இயற்கை வளத்தைக் காணலாம்.

இந்நூலிலே ஒரு ஆசிரியப்பாவில் திருவாரூரின் இயற்கைக் காட்சியும், சிவ பிரானும் பார்வதியும் தங்கள் குழந்தையை வைத்துக் கொண்டு கொஞ்சும் காட்சியும் குறிக்கப்பட்டிருக் கின்றன.

இந்த ஆசிரியப்பாவில் 28 அடிகள் இருக்கின்றன. முதல் 14 அடிகள் திருவாரூரின் காட்சியைக் காட்டுகின்றன; அடுத்த 14 அடிகள், பரமசிவனும் பார்வதியும் தங்கள் குழந்தையிடம் காட்டும் அன்பை அறிவிக்கின்றன.

சூரியன் கதிரைக் கண்டறியாத அடர்ந்த இருண்ட சோலை. மேகங்கள் படுத்துறங்கும்படி வான் முட்ட வளர்ந்த சோலை. காவலர்கள் விரட்டுவதற்கு அஞ்சி ஒரு குரங்கு அச் சோலையில் உள்ள ஒரு பெரிய மரத்தின் கிளையிலே பதுங்கிற்று. மனித உருவும் மிருகத் தோற்றமும் கலந்ததே குரங்கின் உருவமாகும். கரிய விரலையுடைய அந்தக் குரங்கு தன் எதிரிலே பொன்னிறமான சுளைகளையுடைய ஒரு பலாப் பழத்தைக் கண்டது. உடனே பல்லையிளித்துக் கொண்டு அப்பழத்தைத் தன் மடியிலே தூக்கி வைத்துக் கொண்டது. அதைத் தன் நகத்தால் கீறிப் பலாச்சுளைகளை எடுத்துத் தின்று கொண்டிருக்கின்றது.

இக்காட்சியைக் காணும்போது பழைய செய்தி ஒன்று நினைவுக்கு வருகின்றது. வியப்பைத் தருகின்றது. இரணியனைக் கொல்லுவதற்காகத் தூணிலே தோன்றிய நரசிங்கம் அவ் விரணியனைத் தன் துடையிலே வைத்துக் கொண்டு அவன் மார்பைக் கீறி அவனுடைய நீண்ட குடலை எடுத்துத் தின்ற காட்சி நினைவுக்கு வருகின்றது. இத்தகைய காட்சிகள் நிறைந்த சோலைகள் அமைந்த திருவாரூர், நல்ல வயல்கள் சூழ்ந்த மருத நிலத்திலேயுள்ள அழகிய குளிர்ந்த திருவாரூர்.

முதல் பதினான்கு அடிகளில் அமைந்த பொருள் இது. அடுத்த பதினான்கு அடிகளில் அமைந்திருக்கும் அரும் பொருள் கீழ்வருவது:-

திருவாரூரில் அமர்ந்திருக்கும் எந்தையே! எம்பெருமானே! சிம்மாசனத்திலே இரவும் பகலும் நீயும் இறைவியும் ஒன்றாக அமர்ந்திருக்கின்றீர்கள். இறைவி இடப்பக்கத்தில், நீ வலப் பக்கத்தில். உங்களைப் பார்த்தால் இரவும் பகலும் ஒன்று சேர்ந்திருப்பது போன்ற காட்சி. நீ செந்நிறம், இறைவி கருநிறம். இக்காட்சி இரவும் பகலும் போல் இருக்கின்றது.

உங்கள் நடுவே இளங் குழந்தையான முருகனை வைத்துக் கொண்டு கொஞ்சுகின்றீர்கள். ஒருவரை விட மற்றொருவர் மிகவும் மனங்கனிந்து அக்குழந்தையை எடுத்து எடுத்துத் தழுவிக் கொள்ளுகின்றீர்கள்.

சந்திர -சூரிய- அக்கினியென்னும் முச்சுடரும் குளிர்ச்சி யடையும்படி அக்குழந்தையைக் கண்டு மகிழ்கின்றீர்கள். அக்குழந்தையின் உச்சியிலே முத்தம் இடுகின்றீர்கள். அக்குழந்தையின் மழலைச் சொற்கள் செவ்வல்லி மலரிலே கசியும் தேனைப்போல இருக்கின்றன; வேதத்தின் எழிலிசையைப் போல இருக்கின்றன. அத்தகைய சிறந்த மழலைச் சொற்களைக் கேட்டு மகிழும் உங்கள் செவி களிலே என்னுடைய அற்பமான சொற்களைக் கூறி உங்கள் அருளைப் பெற விரும்புகின்றேன். எனது நிலை மிகவும் வியப்புக்குரியதுதான்.

இவ்வாறு இரண்டாவது பகுதி கூறுகின்றது. இப்பகுதியில் குழந்தைகளிடம் பெற்றோர்களுக்குள்ள அன்பு அப்படியே படம் பிடித்துக் காட்டப்பட்டிருக்கின்றது.

ஒண்கதிர் பரப்பும் செங்கதிர் கடவுள்
வெயில்கண்டு அறியா வீங்குஇருள் பிழம்பின்,
புயல்கண் படுக்கும் பூம்தண் பொதும்பின்,
காவலர்ப் பயந்து பாதபத்து ஒதுங்கிய
இருவேறு உருவின் கருவிரல் மந்தி,
பொன்நிறம் பழுத்த பூஞ்சுளை வருக்கை
முன் உறக் காண்டலும் முளை எயிறு இலங்க,
மடித்தலத்து இறுத்தி வகிர்ந்துவள் உகிரால்,
தொகுத்த பொன் சுளைபல் எடுத்துவாய் மடுப்பது,
மானுட மடங்கல் தூண்இடைத் தோன்றி,
ஆடகப் பெயரின் அவுணன் மார்பு இடந்து,
நீடுபைம் குடரின் நிணம் கவர்ந்து உண்டுஎன
இறும்பூது பயக்கும் நறும்பணை மருதத்து
அம்தண் ஆரூர்;

இது செய்யுளின் முதல் பகுதியாகும். இதன் தொடர்ச்சி இரண்டாம் பகுதியாகும்.

எந்தை! எம்பெரும!
சிங்கம் சுமந்த செழுமணித் தவிசில்,
கங்குலும் பகலும் கலந்து இனிது இருந்துஆங்கு,
இடவலம் பொலிந்த இறைவியும் நீயும்
நடுவண் வைகும் நாகு இளம் குழவியை,
ஒருவரின் ஒருவர் உள்ளம் நெக்கு உருக
இருவரும் தனித்தனி ஏந்தினிர் தழீஇ,
முச்சுடர் குளிர்ப்ப முறைமுறை நோக்கி,
உச்சி மோந்தும், அப் பச்சிளம் குழவி
நாறுசெங் குமுதத் தேறலோடு ஒழுகும்
எழுதாக் கிளவியின் ஏழ்இசைப் பழுத்த
இழுமென் குரல மழலைத் தீஞ்சொல்
சுவை அமுது உண்ணும் செவிகளுக்கு, ஐய! என்
பொருள் இல் புன்மொழி போக்கி,
அருள்பெற அமைந்தது, ஓர் அற்புதம் உடைத்தே!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 1 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !