அருணகிரியார் – குருபரர் அறிவுரைகள்
சாமி சிதம்பரனார்

2. முருகன் பெருமை

முருகன் தமிழ்நாட்டுப் பழந்தெய்வம். மலை நிலமாகிய குறிஞ்சி நிலத்துத் தெய்வம். மலைநிலத்து மக்கள் மட்டும் அல்ல; தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் முருகனை வணங்கி வருகின்றனர்; வணங்கி வந்தனர்.

முருகனைப் பற்றி வழங்கும் வரலாற்றுக்குக் கந்தபுராணம் என்று பெயர். கந்தபுராண முருகன் சிறந்த வீரனாக உருவகம் செய்யப்பட்டுள்ளான். முருகன் பிறப்பு, வளர்ப்பு, தேவர்களுக்குப் பரிந்து அவர்களுக்குப் பகைவர்களான அசுரர்களை அழித்து, தன்னை அண்டினவர்களுக்கு அபயம் அளித்தது ஆகிய வரலாறுகளைக் கந்தபுராணத்திலே காணலாம். நம்பினவர்களுக்கு நன்மை தரும் ஒப்பற்ற தெய்வம் முருகன் என்பதே கந்தபுராணக் கருத்து.

முருகு என்பது தனித் தமிழ்ச்சொல். முருகு என்னும் சொல்லே முருகன் ஆயிற்று என்பது ஆராய்ச்சியாளர் கருத்து.

முருகு என்றால் அழகு என்று பொருள். மணம், இளமை, தெய்வத்தன்மை என்ற பொருளும் உண்டு. ஆகவே முருகு என்ற சொல்லுக்கு அழகு, மணம், இளமை, தெய்வத்தன்மை என்ற நான்கு பொருளும் உண்டு.

அழகிலே மணம் உண்டு; மாறாத இளமைத் தன்மையும் உண்டு; தெய்வத்தன்மையும் உண்டு. ஆகவே இயற்கை அழகைத் தான் முருகனாக வைத்து வணங்கினர் முன்னோர். நாளடைவிலே இந்த இயற்கை அழகை- முருகை – முருகனாக்கினர்; தந்தை தாய் கற்பித்தனர்; பல திருவிளையாடல்கள் கற்பித்து விழாச் செய்து போற்றி வணங்கினர்.

வாழ்நாள் முழுவதும் முருகனையே பாடிப் போற்றி வாழ்ந்த அருணகிரிநாதர் இந்த உண்மையை உணர்வார். அவருடைய பாடல்கள் பெரும்பாலும் புராண முருகன் புரிந்த திருவிளையாடல்களையே பாராட்டிப் போற்றுகின்றன. ஆயினும் இயற்கையழகிலிருந்துதான் முருகன் பிறந்தான் என்ற உண்மையை அவர் மறந்துவிடவில்லை; மறைத்து விடவும் இல்லை. முருகனை அழகன் என்றே அவர் அழைக்கிறார், பாடுகிறார்; பணிகிறார்.

முதுமலை அழக – குருநாதா

முதுமலையில் காணப்படும் அழகனே! குருநாதனே!

புதுமா மயில்மீது அணையா வரும் அழகோனே!

புதிய அழகிய மயிலின்மீது ஏறி வருகின்ற அழகுள்ளவனே.

ஐந்து இந்திரியங்கள் வென்று ஒன்றும் அன்பர்
அங்கம் பொருந்தும்- அழகோனே!

ஐம்புலன்களையும் வென்று உன்னிடம் மனம் ஒன்றுபட்ட அன்பர்களிடம் வாழும் அழகுள்ளவனே.

அயிலும், மயிலும், அறமும், நிறமும்

அழகும் உடைய பெருமாளே.

கூர்மையான வேற்படையும், மயில்வாகனமும், அறத்தைக் காக்கும் தன்மையும், கண்கவரும் வண்ணமும், அழகும் அமைந்த பெருமையுள்ளவனே.

இவ்வாறு முருகனை அழகின் வடிவமாகவே திருப்புகழில் பலவிடங்களில் போற்றுகிறார்.

அழகுள்ள இடத்திலேதான் முருகனை வைத்துப் போற்றினர் முன்னோர். மலை, இயற்கை அழகுள்ளது. பசுமை நிறைந்த கொடிகள்; கனிகள் பழுத்த மரங்கள்; கண்கவர மலர்ந்து மணம் வீசும் மலர்கள்; உடலுக்கும் உள்ளத்திற்கும் குளிர்ச்சி தரும் அருவிகள்; அழகான பறவைகள்; விலங்குகள்- இவைகள் அமைந்த மலைகளை அழகுள்ளவை என்று சொல்லாதவர் யார்? இத்தகைய அழகிய மலைகளில் எல்லாம் அழகுத் தெய்வமாகிய முருகன் இருப்பதாக நம்பினர். இந்த நம்பிக்கையை அருணகிரிநாதரும் வெளியிட்டிருக்கிறார்.

அழகு திருத்தணி மலையில் நடித்தருள் பெருமாளே.

அழகிய திருத்தணி மலையில் அமர்ந்து விளையாடுகின்ற பெருமையுள்ளவனே.

செகத்தில் உச்சம்பெற்று, அமராவதி
அதற்கும் ஒப்பென்று உற்று அழகேசெறி
திருக்கழுக் குன்றத்தினில் மேவிய- பெருமாளே.

இவ்வுலகிலே உயர்வுபெற்று, இந்திரன் தலைநகராகிய அமராவதி நகருக்கு நிகரானது என்று இருந்து, அழகு பொருந்தியிருக்கின்ற திருக்கழுக்குன்றத்தில் வாழும் பெருமையுள்ள முருகனே.

பலவின் முதுபழம் விழைவுசெய்து ஒழுகிய
நறவு நிறைவயல், கமுகுஅடர் பொழில்திகழ்
பழனி மலைவரு புரவல! அமரர்கள்- பெருமாளே.

பலாமரத்திலே தானாகவே பழுத்த பழம். தானே விரும்பிச் சிந்துகின்ற தேன் நிறைந்த வயல்களும், பாக்குமரங்கள் அடர்ந்த சோலையும், விளங்குகின்ற அழகிய பழனி மலையிலே வந்து வீற்றிருக்கின்ற அரசே! தேவர்களின் தலைவனே!

இத் திருப்புகழ்கள், முருகன் விரும்பும் இடம் அழகுள்ள இடமே என்பதை உணர்த்தின. இவைபோன்ற பல பாடல் களைத் திருப்புகழிலே காணலாம்.

தூய்மையான இடத்திலே அழகு அமைந்திருக்கும்; அழுக்கும் குப்பையும் நிறைந்த இடத்திலே அழகு எது? கள்ளங் கபடமற்ற தூய்மையான உள்ளம் அழகிய இடமாகும். அங்கும் அழகுருவான முருகன் அமர்ந்திருப்பான் என்று கூறுகிறார் திருப்புகழாசிரியர்.

செம்ம னத்தர் மிகுத்த மாதவர்,
நன்மை பெற்ற உளத்தி லேமலர்
செல்வ சிக்கல் நகர்க்குள் மேவிய- பெருமாளே.

அறம் நின்ற மனத்தவரிடமும், மிகுந்த தவமுள்ளவரிடமும், நன்மை நிலைபெற்ற உள்ளத்திலும் தோன்றுகின்றவனே! செல்வம் நிறைந்த சிக்கல் நகரிலே வாழுகின்ற முருகனே!

திரு.விக. அவர்களின் முருகன் அல்லது அழகு என்னும் நூலில் இயற்கை அழகே முருகன் என்பதை விரிவாகக் காணலாம்.

திருப்பழனி வாழ்வுக்கு உகந்து அடியர்
ஆவிக்குள் நின்று உலவிவரு- பெருமாளே.

அழகிய பழனியிலே வாழ்வதற்கு விரும்பி, அன்பர்களின் உயிருக்கு உயிராக நின்று உலவுகின்ற முருகனே.

கழல்இணை அணியும் அவருடன் முனிவு
கனவிலும் அறியாப் பெருமாளே!

மாசற்ற உள்ளத்திலே உன் பாதங்களையே அணிந்திருக்கின்ற அன்பருடன், கனவிலும் வெறுக்காமல் வாழ்கின்ற தலைவனே.

குற்றம் அற்றவர் உள்ளத்தில்- உறைவோனே!
மாசற்றவர் மனத்திலே எப்பொழுதும் குடியிருப்பவனே.

மேலே காட்டியவை மாசற்றவர்கள் மனத்திலே முருகன் அழகைக் காண்பான்: அங்கே அமர்ந்திருப்பான் என்ற உண்மையை உணர்த்தின.

மேலே எடுத்துக்காட்டிய திருப்புகழ்ப் பகுதிகள், அழகுருவே முருகன் வடிவு; அவன் அழகுள்ள இடங்களிலே அமர்ந் திருப்பான்: மாசற்றோர் உள்ளம் அழகிய இடம் ஆனதால் அங்கும் வீற்றிருப்பான் என்ற உண்மையை உணர்த்தின.

முருகனை இளையோனே! என்று பல பாடல்களில் குறிப்பிடுகின்றார்; எங்கும் நிறைந்தவன் என்று பாடுகின்றார். அவனுடைய அற்புதங்களையெல்லாம் எடுத்துப் பாராட்டிப் போற்றுகின்றார். இவைகளால் அருணகிரியார் முருகனை மாறாத இளமைத் தன்மையுள்ளவனாகவும், எங்கும் பரந்த நறுமணமாகவும், தெய்வத் தன்மையாகவும் போற்றுகிறார் என்பதை அறியலாம்.

முருக பக்தர்கள் பலர் இன்றும் முருகனைக் குழந்தைக் கோலத்தில் வைத்து வணங்குகின்றனர்; வாலிபக் கோலத்தில் வைத்து வணங்குகின்றனர். ஆகவே முருகனை வழிபடுவோர் அனைவரும் அவனை அழகிய உருவில் வைத்துத்தான் வழிபட்டு வருகின்றனர். இது ஒன்றே இயற்கை அழகான முருகில் இருந்து தான் முருகன் பிறந்தான் என்ற உண்மையைக் குறிப்பதாகும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 1 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !