அருணகிரியார் – குருபரர் அறிவுரைகள்
சாமி சிதம்பரனார்

10. வெறும் பேச்சால் பயன் இல்லை

முருகன் அருளைப் பெறுவதற்கு எளிய வழி ஒன்றைக் கூறுகின்றார் அருணகிரிநாதர். அவர் சொல்வது, பொதுவாக இறைவன் அருளைப் பெற விரும்புவோர் எல்லோர்க்கும் ஏற்றதாகும். பலருக்குப் பயன்படும்படி ஒன்றை உரைப்பது தான் உயர்ந்த உரையாகும். அறிவுள்ளோர்- அருளுள்ளோர் – புலமையுள்ளோர் – கூறும் மொழிகளில் இத்தகைய பொதுத் தன்மையைக் காணலாம்.

மனத்தைப் பொறிவழி செல்லாமல் தடுக்க வேண்டும்; கண்ணாற் காணும் பொருள்கள் மேல் எல்லாம் மனத்தைச் செல்ல விடாமல் தடுக்க வேண்டும்; காதுக்கு இனிமை தரும் நிகழ்ச்சிகளைக் கேட்பதிலே மனத்தைத் தாராளமாகச் செல்ல விடக்கூடாது; தடுத்தாள வேண்டும் மூக்கு விரும்பும் வாசனைப் பொருள்களையெல்லாம் நுகர்வதற்கு இடந்தரக் கூடாது. நாக்கு விரும்பும் சுவைகளையெல்லாம் சுவைக்க இடந்தரக்கூடாது. உடல் விரும்பும் இன்பத்தை எல்லாம் நாடி வருந்துவதற்கு இடந்தரக்கூடாது- இவற்றில் எல்லாம் மனத்தைக் கட்டுப் படுத்தியாள வேண்டும். இதுதான் மனத்தைத் தடுக்கும் வழியாகும்.

அடுத்தபடியாகப் பொறுமையுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். வெகுளி- கோபம்- சினம் தோன்ற இடந் தரக்கூடாது. சினத்தைப் போலச் சீரழிப்பது வேறு ஒன்றும் இல்லை. சினம் பொருந்தியவர்- சினத்துடன் தொடர்பு கொண்டவர்- எல்லா இன்னல்களுக்கும் ஆளாவார்கள். சினம் உள்ளவர்களுக்கு நட்பினர்- உறவினர் – ஒருவரும் இருக்க மாட்டார்கள். அதைப்போல எல்லா நன்மைகளையும் சுட்டுப் பொசுக்கும் பெருநெருப்பு ஒன்றுமேயில்லை. ஆதலால் சினமின்றிப் பொறுமையுடன் வாழவேண்டும்.

மூன்றாவதாக, வறுமையால் வாடுவோர்க்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும்; ஒளிக்காமல் மறைக்காமல் உதவி புரிய வேண்டும்; வருந்துவோர் துன்பம் தீர நமது கையில் கிடைத்த பொருளை உதவ வேண்டும்.

நான்காவதாக, மௌனமுடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். அளவுக்கு மேல் பேசுவதால் தீமைகள் பல தோன்றும். பயனற்ற சொற்களைக் கூற வேண்டிய நிலைமையும் ஏற்பட்டு விடும். ஆதலால் பேச்சை மட்டுப் படுத்திக் கொள்ள வேண்டும். கூடிய வரையிலும் மவுனமாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

இந்த நான்கு பண்புகளையும் பின்பற்றினால் முருகன் திருவருள் தானாகவே கிடைக்கும்; அவன் திருவருள் வேண்டித் தவம் கிடக்க வேண்டியதில்லை.

இந்த உண்மையை ஒரு செய்யுளில் எடுத்துரைக்கின்றார் அருணகிரிநாதர்.

தடுங்கோள் மனத்தை; விடுங்கோள்
வெகுளியைத்; தானம் என்றும்
இடுங்கோள்; இருந்த படிஇருங்
கோள்; ஏழு பாரும் உய்யக்
கொடும்கோபச் சூருடன் குன்றம்
திறக்கத் துளைக்கவைவேல்
விடும்கோள் அருள்வந்து தானே
உமக்கு வெளிப்படுமே.

இதுதான் மேலேகாட்டிய கருத்தமைந்த பாட்டு. உலகினர்க்கு அறிவுரை கூறும் முறையில் அமைந்த பாடல் இது. உலக வாழ்வில் திளைத்துத் திகைப்போர்க்கு உய்யும் நெறியை உரைக்கும் செய்யுள் இதுவாகும்.

உள்ளத்தைப் பொறிகளின் வழியிலே செல்லாமல் தடுத்துக் கொள்ளுங்கள்; கோபத்தை விட்டுவிடுங்கள் என்றும் தானம் புரியுங்கள்; இருந்தபடியே மவுனமாக இருங்கள்; இப்படி யிருந்தால் ஏழுலகங்களும் பிழைக்கும்படி கொடுமையான கோபத்தையுடைய சூரபதுமன் உடல் பிளக்கும் படியும், கிரவுஞ்சம் என்னும் குன்றம் துளைபடும் படியும் தனது கூர்மையான வேலாயுதத்தைச் செலுத்திய முருகப் பெருமானுடைய அருள் தானாகவே உம்மிடம் வந்து சேரும். இதுவே இச் செய்யுளின் பொருளாகும்.

இவ்வாறு முருகன்- இறைவன்- அருளை அடைவதற்கு வழியுரைத்தார் அருணகிரிநாதர். மனத்தை அடக்கியாளுதல், கோபத்தை கைவிடுதல், தானம் புரிதல், மொளனமாக இருத்தல்- இந்த நான்கும் சன்மார்க்க நெறியாகும்.

மற்றொரு செய்யுளிலே முருகன் அருளைப் பெறும் வழியை வலியுறுத்தியுள்ளார். முருகா! முருகா! வடிவேலா! மயில்வாகனா! தேவாதி தேவனே! குருநாதா! என்று வாயளவில் வாழ்த்தி வணங்குவது மட்டும்போதாது; இத்தகைய வாழ்த்தினால் மட்டும் அவன் அருளை அடைந்துவிட முடியாது. கையில் உள்ள பொருளை ஏழையர்க்கு உதவுங்கள். மிகுதியாக உதவி செய்ய உள்ளம் இல்லாவிட்டாலும் சிறிதளவாவது உதவி செய்யுங்கள். அதுதான் பயன் தரும். வீணாகப் பொருளைச் சேர்த்து வைப்பதனால் பயன் இல்லை. நீங்கள் சாகும் போது அப்பொருளால் உங்களுக்கு எப்பயனும் இல்லை என்று அறிவுரை கூறுகின்றார் அருணகிரிநாதர்.

வையில் கதிர்வடி வேலோனை
வாழ்த்தி வறிஞர்க்கு என்றும்
நொய்யில் பிளவுஅள வேனும்
பகிர்மின்கள்! நுங்கட்குஇங்ஙன்
வெய்யிற்கு ஒதுங்க உதவா
உடம்பின் வெறுநிழல்போல்
கையில் பொருளும் உதவாது
காணும் கடைவழிக்கே.

இந்த அரிய செய்யுள் மூலம் மன்பதைக்கு அறிவுரை கூறினார். இதன் பொருளைக் காண்போம்;

முருகன் கூர்மையும் ஒளியும் அமைந்த வேலாயுதத்தை உடையவன். அவனை என்றும் வாழ்த்தி வழிபடுங்கள். அவ்வளவோடு நின்றுவிடாதீர்கள். வறிஞர்களின் துன்பத்தைக் கண்டு இரக்கங் கொள்ளுங்கள். ஒரு நொய்யின் பிளப்பு அளவாவது, அதாவது ஒரு நொய்யின் பாதி அளவாவது அவர்கள் உண்ணும் படி உங்கள் உணவிலிருந்து பிரித்துக் கொடுங்கள். நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் பொருள் நீங்கள் இறக்கும் போது உதவி செய்யாது. நுமது உடம்பின் நிழலிலே, வெயிலைக் கண்டு அஞ்சியவர் ஒண்டி இளைப்பாற முடியாது. உங்கள் உடம்பின் நிழல் வெறும் நிழலே அன்றிப் பயன்படும் நிழல் அன்று. அதுபோல உங்கள் கையில் உள்ள பொருளும் உங்கள் இறுதிக் காலத்தில் உங்களுடன் உதவியாக- துணையாக- வரப்போவதில்லை. இந்த உண்மையை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள்.

இதுதான் இச்செய்யுளில் அமைந்துள்ள பொருள். கடவுளிடம் அன்பு செலுத்துவதோடு, ஏழையர்பால் இரக்கம் காட்டி அவர்களுக்கு உதவி செய்யும் தன்மையும் அமைந்திருக்க வேண்டும். இதுதான் இறைவன் அருளை எய்தும் வழி. இதையே அருணகிரிநாதர் வலியுறுத்தினார்.

மேலே காட்டிய இரண்டு பாடல்களும் இறைவன் அருளைப் பெறுவது எப்படி என்பதை எடுத்துக்காட்டின. வெறும் பக்தி யால் மட்டும் இறைவன் இரங்கிவிட மாட்டான். ஒழுக்கமும் வேண்டும்; பிறர்க்கு உதவி செய்யும் பண்பும் வேண்டும். பக்தியும் ஒழுக்கமும் பிரிக்க முடியாதவை. ஒழுக்கம் மட்டும் இருந்தால் போதாது; பக்தி மட்டும் இருந்தாலும் போதாது. இரண்டும் ஒன்று சேர்ந்திருக்க வேண்டும் என்பதே அருணகிரிநாதர் போன்ற அறிஞர் பெருமக்களின் கொள்கையாகும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 1 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !