அருணகிரியார் – குருபரர் அறிவுரைகள்
சாமி சிதம்பரனார்

6. வேசையர் இழிவு

தீயோருடன் சேர்ந்து திரிவோர் முதலில் அவர்களை வெறுக்க மாட்டார்கள்; தீயோர்களின் பேச்சு, நடத்தை, செய்கை எல்லாம் அவர்களுக்கு பிடித்தமாகவே இருக்கும். தீயோர் நட்பு தீமை தரும்; ஆதலால் அவர்களுடன் சேரவேண்டாம்; அவர்கள் நட்பை விட்டு விடுங்கள் என்று புத்திமதிகள் சொன்னாலும் கேட்க மாட்டார்கள்; புத்திமதிகள் சொல்கின்றவர்கள்மேல் சீறி விழுவார்கள். இது இயல்பு.

தீயோர்களின் நட்பால் கெட்டுப் போனவர்கள் – தங்கள் வாழ்வைக் கெடுத்துக் கொண்டவர்கள்- தீயோர் சேர்க்கையால் வரும் தீமைகளை எடுத்துரைக்கத் தயங்க மாட்டார்கள்; அவர் களால், தாம் அடைந்த தீமைகளை, மற்றவர்களுக்கு அடிக்கடி எடுத்துச் சொல்லுவார்கள்; அவர்களுடைய வஞ்சகச் செயல் களையும், கொடுமைகளையும் வாய்கூசாமல் கடிந்துரைப்பார்கள். தாம் கெட்டுப் போனது போல மற்றவர்கள் கெடாமலிருக்க வேண்டும் என்பதற்காகத் தீயோர்களைப் பற்றி வசை மொழிகளைக் கூட வாரி இரைப்பார்கள். தீயோர்கள் மேல்- கெட்டவர்கள் பால்- மற்றவர்களுக்கு அருவருப்பு உண்டாக வேண்டும் என்பதற்காக எவ்வளவு தூரம் அவர்களைப் பற்றி இழிவாகச் சொல்ல வேண்டுமோ அவ்வளவு தூரம் இழிவாகப் பேசுவார்கள். இதையும் நாம் இவ்வுலகிலே கண்கூடாகக் காணலாம்.

பரத்தையர் இன்பத்தை நம்பி- வேசையர் கூட்டத்தை விரும்பி- அறிவிழந்து திரிவோரை, ஆரம்பத்தில் புத்திமதி புகட்டித் திருத்துவது எளிதல்ல. அவர்கள் தங்கள் பொருளை யிழந்து, உடல் நலத்தை இழந்து, மானத்தை யிழந்து, வேசையர் களால் கைவிடப்பட்ட பிறகுதான் உண்மையை உணர்வார்கள். பொருள்போன பிறகுதான் புத்திவரும். புத்தி வந்த பிறகு தான் விலைமாதர்களின் இழி செயல்களைப் பற்றிப் பேசுவார்கள். அவர்களை மற்றவர்கள் வெறுக்கும்படி வசைமொழிகளை அடுக்கி வைவார்கள். இதுவும் இவ்வுலகத்து இயல்பு.

திருப்புகழ்ப் பாடல்களிலே பரத்தையர்களைப் பற்றிப் பழித்துப் பேசும் பாடல்கள் பல உண்டு. அப்பாடல்களில் அவர்களுடைய ஈனச் செயல்களை யெல்லாம் காணலாம். அவர்களைப் பற்றி- பரத்தையர்களைப் பற்றி- வசை மொழிகளை அள்ளிக் கொட்டுவதிலே அருணகிரிநாதர்க்கு இணையாக யாரையும் சொல்ல முடியாது. அடக்க முடியாத ஆத்திரத்துடன் அவர்களைப் பற்றிப் பாடுகிறார். உதாரணமாகச் சில பாடல் களைக் காண்போம்.

கிரிஉ லாவிய முலைமிசை துகில்இடு
கபட நாடக விரகிகள்; அசடிகள்;
கெடுவி யாதிகள் அடைவுடை உடலினர்; – விரகாலே
கிருபையி னாரொடு மணம்இசை நழுவிகள்;

முழுதும் நாறிகள்; இதமொழி வசனிகள்;
கிடையின் மேல்மனம் உருகியே தழுவிகள்; – பொருளாலே
பரிவி லாமயல் கொடுசமர் புரிபவர்;
அதிக மாஒரு பொருள்தரு பவரொடு
பழய பேர்என இதம்உற அணைபவர்; – விழியாலே
பகழி போல்விடு வினைகவர் திருடிகள்;
தமைஎ ணாவகை, உறுகதி பெறும்வகை
பகர, மாமயில் மிசைவர நினைவதும் ஒருநாளே

பரத்தையர்களின் நடத்தையை இப்பாடல் எடுத்துக் காட்டுகின்றது. இப்பாடல்களில் காணும் வசைமொழிகள் அனைத்தும் பரத்தையர்க்குப் பொருத்தமானவை.

மலைபோல் விளங்கும் முலையின் மேல் உள்ள ஆடையை நழுவ விடுவார்கள்; பிறகு எடுத்துப் போடுவார்கள்; வாலிபர்களின் உள்ளத்தை இழுப்பதற்கே இப்படிச் செய்வார்கள். இவ்வாறு வஞ்சக நாடகம் நடிக்கும் காமிகள்; அசட்டுத்தனமுள்ளவர்கள்; தம்மை அணைவோர்க்குத் தீமை தரும் நோய்கள் பலவும் அப்பிக் கொண்டிருக்கின்ற உடம்புள்ளவர்கள்.

தந்திரத்தினால் அன்புள்ளவர்களுடன் மணம் புரிந்து கொள்ளுவதற்கு இசைவது போல் நடிப்பர். அவர்கள் பொருளைக் கவர்ந்தவுடன் நழுவிவிடுவார்கள். உடம்பு முழுதும் நாற்றமடிக்கும் நோயினர்; ஏமாற்றுவதற்காக, நயமான மொழி பேசுகின்றவர்கள்; படுக்கையின் மேல் மனம் உருகியவர்கள் போல் நடித்துத் தழுவிக் கொள்ளுவார்கள்.

தம்மை விரும்புவோர் பொருள் கொடுக்கும் காரணமாக, அன்பில்லாமல், அவர்களுடன் காமங்கொண்டு அவர்களுடன் காமப்போர் புரிபவர்; அவரை விட அதிகமாக பணம் கொடுக்கின்றவருடன் அவரைப் பழைய அன்பன் எனப் பாராட்டி அவர் இன்பம் அடையும்படி தழுவிக் கொள்ளுகின்றவர்கள்.

தங்கள் கண்பார்வையை அம்பு போல் விடுத்து, தம்மை விரும்புவோர் செயல்களையெல்லாம் கவரும் திருடிகள்; இவர்களை நினைத்து மயங்காதபடி- நன்மையடையும் கதியைப் பெறும் வகையை எனக்கு உபதேசம் செய்வதற்காக, நீ சிறந்த மயிலின்மீது ஏறி வந்து அருள் செய்ய வேண்டும். இவ்வாறு நான் நினைத்து வேண்டுவதாகிய ஒரு நாளை எதிர்பார்க்கின்றேன்.

இதுவே மேலே காட்டிய பாடலின் பொருள். இது குன்று தோறாடல் என்னும் தலைப்பில் உள்ள திருப்புகழ்ப் பாடல்கள் ஒன்றின் முதற்பகுதி. மற்றொரு பாடலின் பகுதியையும் காண்போம்:

மாயா சொரூப முழுச்ச மர்த்திகள்;
ஓயா உபாய மனப்ப சப்பிகள்;
வாணாளை ஈரும் விழிக்க டைச்சிகள்; – முனிவோரும்
மாலாகி வாட நகைத்து ருக்கிகள்;
ஏகாச மீது தனத்தி றப்பிகள்;
வாரீர் இரீர்என முழுப்பு ரட்டிகள்; – வெகுமோகம்
ஆயாத ஆசை எழுப்பும் எத்திகள்!
ஈயாத போதில் அறப்பி ணக்கிகள்;
ஆவேச நீர்உண் மதப்பொ றிச்சிகள்; – பழிபாவம்
ஆம்ஆ றெணாத திருட்டு மட்டைகள்;
கோமா ளமான குறிக்க ழுத்திகள்;
ஆகார ஈன விலைத்த னத்தியர்; – உறவாமோ?

இதுவும் குன்றுதோறாடல் என்னும் தலைப்பில் உள்ள திருப்புகழ்ப் பாடல்கள் ஒன்றின் முதற் பகுதி இப்பாடலில் அமைந்துள்ள வேசையரைக் குறிக்கும் வசைமொழிகள் அனைத்தும் உண்மையானவை.

வஞ்சகமே உருவானவர்கள்; வஞ்சகத்திலே முழுச் சமர்த்துள்ளவர்கள்; ஓயாத தந்திரசாலிகள்; பிறர் மனதைக் கவரப் பசப்பு வார்த்தை பேசுகின்றவர்கள்; தம்மை அடைந்தவர் களின் ஆயுளையே பிளந்து அழிக்கும் விழிகளையுடைய கடைப் பட்டவர்கள்.

தவநெறியிலே நிற்கும் முனிவர்களும்கூட, காம மயக்கமுற்று வருந்தும்படி நகைத்து மயக்குகின்றவர்கள்; போர்வையின் மீதுள்ள தனத்தைத் திறந்து காட்டி மயக்குகின்றவர்கள்; உள்ளத்தில் அன்பில்லாமல், பொருள் படைத்தவர்களைக் கண்டால் வாருங்கள்! இருங்கள்! என்று பொய்யாக நடிப்பவர்கள்.

மிகுந்த மோகத்தையும் அவசரமான காமத்தையும் எழுப்புகின்ற தந்திரசாலிகள்; கேட்டபோது பொருள் கொடா விட்டால் அதற்குமுன் எவ்வளவு பொருள் கொடுத்திருந்தாலும் அதை மறந்து, அடியோடு கோபித்துக் கொள்ளுகின்ற நன்றி கெட்டவர்கள் போதை தரும் பானத்தை அருந்துகின்றவர்கள்; கர்வம் பிடித்தவர்கள்.

பழிபாவம் உண்டாகும் என்பதைப் பற்றிச் சிறிதும் நினைக்காத திருட்டு மட்டைகள்; சந்தோஷமான செயல்களைச் செய்யும் குறுங் கழுத்தையுடையவர்கள்; பெரிய இழிவான விலைக்கு விற்கும் மார்புகளை உடையவர்கள்; இத்தகைய விலைமாதர்களின் உறவு நல்லதாகுமா? ஒரு நாளும் ஆகாது.

இதுவே மேலே காட்டிய பாடலின் பொருள். மேலே காட்டிய இரண்டு பாடல்களிலும் அமைந்திருக்கும் வசை மொழிகளைப் பார்த்தால்- அவைகளின் பொருளைச் சிந்தித்தால்- யார்தான் வேசையர் நட்பை விரும்புவார்கள்?

கபட நாடக விரகிகள்; அசடிகள்; மணமிசை நழுவிகள்; முழுதும் நாறிகள்; திருடிகள்; மாயா சொரூப முழுச் சமர்த்திகள்; மனப் பசப்பிகள்; கடைச்சிகள்; தனத் திறப்பிகள்; முழுப் புரட்டிகள்; எத்திகள்; அறப்பிணக்கிகள்; மதப் பொறிச்சிகள்; திருட்டு மட்டைகள் – இவைகள் எல்லாம் பரத்தையரைப் பற்றிக் கூறும் வசை மொழிகள். இவைகள் மேலே காட்டிய பாடல்களில் உள்ளவை.

காமா காரிகள்; க்ரீடா பீடிகள்; நானா மோடிகள்; மாயா ருபிகள்; பொல்லா மூதேவிகள்; வீணிகள்; ஓயா மாரிகள்; பேய் நீர் உண்ணிகள்; மாபாவிகள்; விடமிகள் (விஷமிகள்); படிறிகள்; கபடிகள்; தூர்த்திகள் என்றெல்லாம் பரத்தையரைப் பற்றிப் பாடியிருக்கின்றார். இவைபோன்ற இன்னும் பல சொற்களைத் திருப்புகழிலே காணலாம்.

பரத்தையர்களைப்பற்றி அருணகிரிநாதர் பாடியிருப்பவைகளைப் படிக்கும் அறிவுள்ளவர்கள் அனைவரும் விலை மாதர்களை வெறுப்பார்கள்; அவர்கள் நேசத்தில் ஈடுபட மாட்டார்கள். பரத்தையர் மோக வலையில் வீழும் இளைஞர்களுக்கு அறிவூட்டவே, அருணகிரியார் பரத்தையர்களின் செயல்களைப் பச்சைப் பச்சையாகப் பாடியிருக்கிறார் என்பதில் ஐயம் இல்லை.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 1 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !