அருணகிரியார் – குருபரர் அறிவுரைகள்
சாமி சிதம்பரனார்

14. தனக்குத்தானே உபதேசம்

தனக்கொரு நீதி, பிறருக்கொரு நீதி என்பது முறை அன்று. முதலில் தன்னைப் பரிசுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்; தகாத வழிகளிலே நடந்து தனக்கு இன்பந் தேடுவது- சுகந் தேடுவது- அடாத செயல். எவ்வளவு துன்பம் வந்தாலும் சரி, நீதி தவறி- முறை தவறி- ஒழுங்கு தவறி- நடக்காதவர்களே உத்தமர்கள்.

தாம் தவறான வழியிலே நடப்பது; நியாய அநியாயம் பாராமல் தாம் இன்புறுவதற்கான சாதனங்களைத் தேடுவது; பிறர் இன்ப துன்பங்களைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல், அவர்கள் செல்வத்தை, உழைப்பைக் கொள்ளை கொள்ளுவது; தம்மை எதிர்த்துச் சமாளிக்க வல்லமையற்றவர்களின் மனம் நோகும்படி அவர்களுக்குத் தீங்கிழைப்பது- சிலர் செய்கை. இத்தகைய மக்களை, யாரும் மதிக்க மாட்டார்கள். இவர்கள் செல்வமும் செல்வாக்கும் படைத்தவர்களாயிருக்கலாம். இருந்தாலும் இவர்களை மனிதத் தன்மையுள்ளவர்களாக அறிவுள்ளவர்கள் எண்ண மாட்டார்கள். இவர்கள் குறைகளை எடுத்துக்காட்ட அஞ்சினாலும் பொது ஜனங்கள் இவர்களைப் புறம் பேசாமல் இருக்க மாட்டார்கள்.

தாம் குற்றவாளிகளாயிருப்பவர்கள் பிறர் குறைகளை எடுத்துக்காட்ட முடியாது. தாம் ஒழுக்கமற்றவராயிருக்கும் போது, பிறரை ஒழுக்கமுடையவராயிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவே முடியாது. ஒழுங்கீனத்தையே வாழ்க்கைக்குத் துணையாகக் கொண்டவர்கள் பிறரைப் பார்த்து, ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்?

ஒருவன் பிறரை ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்டவன். அவன் மற்றொருவனைப் பார்த்து, யாரையும் ஏமாற்றாதே என்று சொல்லுகின்றான். உடனே அவன் என்ன சொல்லுவான்? நீ என்ன யோக்கியனோ? எனக்கு உபதேசம் செய்ய வந்துவிட்டாய்! என்றுதான் பளிச்சென்று சொல்லி விடுவான். விபசாரி ஒருத்தி, அவள் மற்றொருத்தியைப் பார்த்து, வேசி என்று வைதால், அவள் கேட்டுக் கொண்டிருப்பாளா? நீ என்ன பத்தினியோ! என்றுதான் கேட்பாள். இவ்வாறு நடைபெறுவது உலக இயற்கை.

ஒவ்வொருவரும் தம்மை முதலில் திருத்திக் கொள்ள வேண்டும்; தாம் நல்ல வழியிலே ஒழுக வேண்டும்; தாம் அப்பழுக் கின்றி வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்று முன்னோர்கள் வலியுறுத்திக் கூறியிருக்கின்றனர். அறிவுள்ளவர்கள்- ஒழுக்கநெறி தவறாமல் வாழவேண்டும் என்று விரும்புகின்றவர்கள்- பரிசுத்தமாக வாழத்தான் முயல்வார்கள். நம்மால் இன்றும் போற்றப்படும் பெரியோர்கள் இப்படித்தான் வாழ்ந்தார்கள்.

ஒழுக்க நெறியிலே உறுதியாக நடக்க விரும்புவோர் முதலில் உள்ளத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுவார்கள். உள்ளத்திலே தீய எண்ணங்கள் புகுவதற்கு இடங் கொடுக்க மாட்டார்கள். இரண்டாவது பிறருக்குக் கெடுதி தரும் சொற்களை- பிறர் மனம் புண்படும் படியான மொழிகளைப் பேச மாட்டார்கள். நல்ல சொற்களையே பேசுவார்கள். உடம்பையும் கெட்ட காரியங்கள் செய்வதற்கு விட மாட்டார்கள்; தங்கள் உடல் உழைப்பை நல்ல காரியங்களிலே ஈடுபடுத்துவார்கள். இவ்வாறு மனம், மொழி, மெய் மூன்றையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுவதே தம்மைத் தூயவராக வைத்துக் கொள்ளுவதாகும். இவ்வுண்மையை அருணகிரிநாதர் எடுத்துக் காட்டுகிறார்.

கெடுவாய் மனமே! கதிகேள்! கரவாது
இடுவாய்; வடிவேல் இறைதாள் நினைவாய்;
சுடுவாய், நெடுவே தனை, தூள் படவே;
விடுவாய்! விடுவாய்! வினையா வையுமே.

மனமே! நீ மெய், வாய், கண், மூக்கு, காது என்னும் ஐம்பொறிகளின் வசமாகிக் கெட்டுப் போகின்றாய்! நீ உய்யும் படி உனக்கு ஒரு நல்ல வழியைச் சொல்லுகின்றேன் கேட்பாயாக! வறுமையால் வருந்தி உன்னிடம் உதவி தேடி வந்தவர்க்கு உன்னிடம் உள்ளதை ஒளிக்காமல் இன்சொல்லால் மகிழ்வித்துக் கொடுத்து உதவுவாயாக! எப்பொழுதும், வேறு சிந்தனை யில்லாமல், கூர்மையான வேலாயுதத்தையுடைய முருகனுடைய பாதங்களையே நினைத்து வாழ்த்திக் கொண்டிருப்பாயாக! பெரிய துன்பங்களை எல்லாம் தூளாக அழியும்படி, முருகன் திருவடித் தியானமாகிய நினைப்பால் சுட்டெரிப்பாயாக! தீமைக்குக் காரணமாகிய செயல்களையெல்லாம் விட்டொழிப் பாயாக! காலந் தாழ்த்தாமல் விட்டொழிப்பாயாக!

இது கந்தர் அனுபூதிப் பாட்டு. தம்முடைய மனம், மொழி, மெய்கள் சுத்தமாக இருக்கும்படி, தமக்குத் தாமே உபதேசம் செய்துகொண்ட பாட்டு.

அருணகிரிநாதர், தமக்குத் தாமே உபதேசம் செய்து கொள்ளும் மற்றொரு பாடலும் உண்டு.

கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று
உய்வாய் மனமே! ஒழிவாய்! ஒழிவாய்!
மெய், வாய், விழி, நாசியொடும், செவியாம்
ஐவாம் வழிசெல் லும் அவா வினையே.

மனமே! ஒளி வீசும் வேலாயுதத்தைத் திருக்கரத்திலே கொண்டிருப்பவன் முருகப் பெருமான். அவனுடைய பாதத்தையே சரணமாக அடைந்து பிழைப்பாயாக! மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளின் வழியே நடக்க விரும்புகின்ற ஆசையை ஒழித்துவிடு! அவ்வாசைக்குச் சிறிதும் இடங் கொடுக்காமல் இப்பொழுதே ஒழித்து விடுவாயாக!

இதுவும் கந்தரனுபூதிப் பாட்டு, ஐம்பொறிகளின் தன்மைகனான புணர்ச்சி, சுவை, ஒளி, மணம் ஓசை என்னும் புலனுணர்வுகளே பேராசைகளுக்கெல்லாம் காரணம். ஆதலால், அப்புலன்களின் வழியே போகாமல் மனத்தை அடக்குவதே அறிவுடைமை. முருகன் பாத தியானத்தால் உள்ளத்தை அடக்கி யாள முடியும். இவ்வுண்மையை இப்பாடலின் மூலம் கூறினார்.

மற்றொரு செய்யுளிலும், மக்களுடைய துன்பங்களுக் கெல்லாம் காரணம் மனமேதான் என்பதை வலியுறுத்துகிறார் அருணகிரிநாதர். உள்ளத்தை ஆசைப் படுகுழியிலே விழாமல் தடுக்க வேண்டும என்று பாடுகிறார்.

பேரா சைஎனும் பிணியில் பிணிபட்டு
ஓரா வினையேன் உழலத் தகுமோ?
வீரா முதுசூர் பட, வேல் எறியும்
சூரா! சுரலோ கதுரந் தரனே!

வீரனே! பழமையான சூரபதுமன் அழியும்படி வேற் படையை வீசிய சூரனே! தேவலோகம் அசுரர்களால் அழியாத படி அதைப் பாதுகாத்தவனே! என் மனம், பேராசை என்னும் பெருநோயினால் கட்டப்பட்டு விட்டதால், நான் அடையும் துன்பத்துக்கு அளவில்லை. செய்வது இன்னது, செய்யத்தகாதது இன்னது என்று பகுத்தறியும் அறிவின்றிக் கலங்குகின்றேன். உன்னைப் பணியும் நான் இவ்வாறு கலங்குவது தகுமோ?

இதுவும் கந்தரனுபூதிப் பாட்டு. உள்ளத்தில் எழும் பேராசையே தீவினைகளுக்குக் காரணம் என்று உரைத்தது இச்செய்யுள்.

மேலே எடுத்துக்காட்டிய மூன்று செய்யுட்களும், அருணகிரிநாதர் தமக்குத் தாமே உபதேசம் செய்து கொண்டவை. இதுதான் பெரியோர் இயல்பு. இவ்வுலகிலே உத்தமமான நல்ல வாழ்வில் வாழ விரும்புவோர், முதலில் தம்மைப் பரிசுத்தமாக வைத்துக் கொள்ளத்தான் முயல்வார்கள். தாம் குற்றமற்ற வர்களாய் வாழ்கின்றவர்களே உயர்ந்தவர்கள், சிறந்தவர்கள். இவ்வுண்மையையே அருணகிரியாரின் கந்தரனுபூதிச் செய்யுட்கள் எடுத்துக்காட்டின.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 1 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !