அருணகிரியார் – குருபரர் அறிவுரைகள்
சாமி சிதம்பரனார்

குமரகுருபர சுவாமிகள்

குமரகுருபர சுவாமிகள் கி.பி. பதினேழாம் நூற்றாண்டிலே தமிழகத்தில் வாழ்ந்தவர். இலக்கண இலக்கியங்களிலே தேர்ச்சி பெற்றவர். இவர் பல அற்புதங்கள் நிகழ்த்தியதாக இவரைப் பற்றிய வரலாறு வழங்குகின்றது.

இவர் பிறந்து ஐந்து வயது வரையிலும் ஊமையாகவே இருந்தார். திருச்செந்தூர் முருகன் அருளால் பேசத் தொடங்கினார். அவரால் தமிழ் அறிவு பெற்று, அவர் மேல் திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பா என்னும் நூலைப் பாடினார்.

இவர் மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ் என்னும் பிரபந்தத்தைப் பாடினார். அதை மதுரையிலே, திருமலை நாய்க்கர் முன்னிலையிலே, மீனாட்சி அம்மன் சந்நிதியிலே அரங்கேற்றினார். அப்போது மீனாட்சி அம்மை, கோயில் அர்ச்சகரின் புதல்வி உருவில் வந்து திருமலை நாயக்கர் மடியின் மீது அமர்ந்து பிள்ளைத் தமிழைக் கேட்டார்.

இவர் காசிக்குச் சென்றார். கலைமகள் அருள் வேண்டி சகலகலாவல்லி மாலை என்னும் நூலைப் பாடினார். கலைமகள் அருளால் இந்துதானி மொழியை அறிந்தார்.

காசியை ஆண்ட முஸ்லிம் அரசரிடம் சென்றார். அவர் இவரை மதிக்கவில்லை. நிற்க வைத்துப் பேசினார். அடுத்த நாள் இவர் சிம்மத்தின் மேல் அரசவைக்குச் சென்று தமது பெருமையை வெளிப்படுத்தினார்.

முஸ்லிம்கள் இவரைப் பல பரிசோதனைகள் செய்தனர். அவைகளில் எல்லாம் இவர் வெற்றி பெற்றார். இறுதியில் காசியை யாண்ட பாதுஷா இவரிடம் பெரு மதிப்புக் கொண்டான்.

இவ்வாறு இவரைப் பற்றி வழங்கும் கதைகள் பல. காசியிலே கேதார கட்டத்திலே சைவ மடம் ஒன்றைக் கட்டினார் முஸ்லிம் மன்னனே இம்மடம் கட்டுவதற்கு இடம் அளித்தான். அந்த மடத்திற்குக் குமாரசுவாமி மடம் என்று பெயர்.

கேதாரநாதர் கோயில் திருப்பணி இவரால் செய்யப் பட்டது. மதுரை நாயக்க மன்னர் இவருக்கு அளித்த பரிசுகளைக் கொண்டே இக்காரியங்களைச் செய்தார்.

அக்காலத்தில் தருமபுர மடத்திலே நான்காவது குருமூர்த்தியாகப் பட்டத்தில் இருந்தவர் மாசிலாமணி தேசிகர் என்பவர்; அவர் இலக்கிய இலக்கணங்களிலே வல்லவர்; சைவ சித்தாந்தத்திலும், வேதாகமங்களிலும் சிறந்த பயிற்சியுள்ளவர்; சிவானுபூதிச் செல்வர் அவரிடம் குமரகுருபரர் ஞான தீட்சை பெற்றார். குமரகுருபரரால் நிறுவப்பட்டது திருப்பனந்தாள் மடம் என்று கூறுகின்றனர்.

குமரகுருபரர் தமிழும் வடமொழியும் கற்றவர், மொழி வெறுப்பில்லாதவர், தமிழின்மேல் அளவிறந்த பற்றுள்ளவர்.

குமரகுருபரர் பெரிய காவியம் ஒன்றும் பாடவில்லை; புராணங்கூட ஒன்றையும் பாடவில்லை; அவர் பாடியிருப்பன அனைத்தும் சிற்றிலக்கியங்கள்தாம் அவருடைய பாடல்களிலே ஓசைநயம், பொருட் சிறப்பு, கற்பனைகள், இயற்கை நிகழ்ச்சிகள், நீதிகள் எல்லாம் அமைந்திருக்கின்றன.

முருகனைப் பற்றிக் குமரகுருபரர் பாடிய நூல்கள் இரண்டு. அவை, திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பா, வைத்தீசுவரன் கோவில் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் என்பவை.

மதுரை மீனாட்சியம்மையைக் குறித்து மூன்று பிரபந்தங்கள் பாடியுள்ளார். அவை, மீனாட்சி அம்மைபிள்ளைத் தமிழ், மீனாட்சி அம்மை குறம், மீனாட்சி அம்மை இரட்டை மணி மாலை என்பன. மதுரைச் சொக்கநாதரைக் குறித்து மதுரைக் கலம்பகம் என்னும் நூலும் இயற்றியுள்ளார்.

திருவாரூர் தியாகேசரைப் பொருளாகக் கொண்டு திருவாரூர் நான்மணிமாலை என்னும் நூலைப் பாடியிருக்கின்றார்.

சிதம்பரத்தைக் குறித்து, சிதம்பர மும்மணிக் கோவை, சிதம்பரச் செய்யுட் கோவை, சிவகாமி அம்மை இரட்டைமணி மாலை என்ற நூல்களைப் பாடியுள்ளார்.

தமது ஞான குருவான மாசிலாமணி தேசிகரைப் போற்றிப் புகழ்ந்து பண்டார மும்மணிக் கோவை என்னும் நூலைப் பாடினார்.

காசியிலே வாழ்ந்தபோது காசிக் கலம்பகம் என்னும் நூலைப் பாடினார். இது சிவபெருமான் பெருமையைக் கூறுவது.

கலைமகளைப் போற்றி, சகலகலாவல்லி மாலை என்னும் நூலைப் பாடியிருக்கின்றார்.

நீதிநெறி விளக்கம் என்பது குமரகுருபரரால் இயற்றப் பட்ட நீதிநூல்; நூறு வெண்பாக்களைக் கொண்டது; அரிய நீதிகள் பலவற்றை உரைப்பது; இதனைத் திருக்குறளின் கருத்துச் செல்வம் என்று சொல்வார்கள்.

குமரகுருபரர் இயற்றியுள்ள பிரபந்தங்கள் பதினான்கு. அவற்றுள் நீதிநெறி விளக்கம் ஒன்றைத் தவிர மற்றவைகள் எல்லாம் பக்திச்சுவையை ஊட்டும் தோத்திரப் பாடல்கள்.

தமிழிலே, யாப்பிலக்கணத்திலே எத்தனை பாடல் வகைகள் உண்டோ, அத்தனை பாடல் வகைகளையும் பாடும் திறமை குமரகுருபரருக்கு உண்டு. இதனை அவர் இயற்றியுள்ள சிதம்பரச் செய்யுட் கோவையே உணர்த்தும். இந்நூல் செய்யுள் இலக்கணத்திற்கு இலக்கியமாகவே இயற்றப்பட்டதாகும்.

குமரகுருபரருடைய பாடல் சிறப்பையும், அவருடைய கற்பனைத் திறமையையும், அவருடைய நூல்களைப் படிப்போர் பாராட்டாமல் இருக்க மாட்டார்கள்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 1 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !