
அருணகிரியார் – குருபரர் அறிவுரைகள்
சாமி சிதம்பரனார்
21. விருந்தோம்பல்
நாகரிகம் பெற்ற மக்கள் நண்பர்களை உபசரிப்பதில் வியப்பில்லை. விருந்தினரை வரவேற்பதில் புதுமையில்லை. நண்பர்களுடனும் விருந்தினர்களுடனும் ஒன்றுபட்டுப் பழகுவது நாகரிக முறை என்று கருதுகின்றனர்.
பண்டைக்கால மக்கள் நாகரிகம் அற்றவர்கள்; விஞ்ஞான முறை தெரியாதவர்கள்; சுகாதாரத்தை அறியாதவர்கள்; மலைகளிலும் காடுகளிலும் வாழ்ந்து வந்தவர்கள்; இப்பொழுது இருப்பது போன்ற வீடு வாசல்களை அமைத்துக்கொண்டு வாழத் தெரியாதவர்கள்; ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்திய மக்கள் இப்படித்தான் வாழ்ந்து வந்தனர். மக்கள் வாழ்க்கையைப் பற்றிப் பழைய வரலாறும் இந்த உண்மையை ஒப்புக் கொள்ளுகின்றது. பழைய இலக்கியங்களிலும் இந்த உண்மையைக் காண்கின்றோம்.
எல்லா நாடுகளிலும் மக்கள் ஆரம்ப காலத்தில்- நாகரிகம் வளராத காலத்தில்- இந்த நிலையில்தான் வாழ்ந்து வந்தனர்.
பழந்தமிழ் இலக்கியங்களிலே தமிழ்நாட்டு மக்களின் நாகரிகத்தைக் காணலாம். பண்டைக்காலத் தமிழ் மக்களிடம் இன்று இருப்பது போன்ற சாதியின் பேரால் வேற்றுமைகள் இல்லை. நிலப் பிரிவுகள் காரணமாக வேறு வேறு பெயர் பெற்றிருந்தார்களே அன்றி அவர்களிடம் உயர்வு தாழ்வு இருந்ததாகக்கூடச் சொல்ல முடியாது.
முல்லை நில மக்கள், மருத நில மக்கள், குறிஞ்சி நில மக்கள், நெய்தல் நில மக்கள், பாலை நில மக்கள் என்ற ஐவகைப் பிரிவுதான் அவர்களிடம் இருந்தது. இந்த ஐந்து நிலத்தில் வாழ்ந்த மக்களும், அந்தந்த நிலத்துக்கேற்ற தொழில்களைச் செய்து வந்தனர். இவர்களிலே மருத நில மக்கள்தான் நாகரிகம் வளர்வதற்குக் காரணமாக இருந்தவர்கள் என்பது வரலாறு கண்ட உண்மையாகும். அந்த ஆராய்ச்சி இப்பொழுது வேண்டாம்.
இன்றுள்ள நாகரிகத்தைப் பற்றிச் சிந்திக்கவும் முடியாத ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அந்த மக்களின் பண்பாடு எப்படி இருந்தது என்பதைக் காணும்போது நமக்கு வியப்பு உண்டாகின்றது.
ஒவ்வொரு நிலத்து மக்களுக்கும் தெய்வம் உண்டு. அவர்கள் அத்தெய்வங்களை வணங்கி வழிபட்டனர். இன்றுள்ள தத்துவ ஞானிகள் கருதுவது போல், அக்கால மக்கள் மறுமைப் பயன் வேண்டித் தெய்வங்களை வழிபடவில்லை; மோட்சத்தை விரும்பி- தன் ஆன்மசாந்தியை மட்டும் நாடித் தெய்வத்தை வணங்கவில்லை. தங்கள் வாழ்க்கையின்பத்தைக் கருதியே தெய்வத்தை வணங்கினர்; தங்கள் மக்கள் வளம் பெற்று வாழவேண்டும்; தாங்கள் வாழும் இடத்தில் மழை பெய்ய வேண்டும்; செல்வம் சுரக்க வேண்டும்; பஞ்சம், பட்டினி, பிணியில்லாமல் வாழ வேண்டும் என்றே அவர்கள் தெய்வங்களை வழிபட்டனர். பண்டைத் தமிழ் இலக்கியங்களிலே இந்த உண்மையைக் காணலாம்.
இன்றுள்ள நாகரிகம் அக்காலத்து மக்களிடம் இல்லை தான்; ஆயினும் அவர்கள் குதூகலமாக வாழ்ந்தார்கள்; நோய் நொடியின்றி வாழ்ந்தார்கள்; பட்டினி பசியின்றி வாழ்ந்தார்கள்; தம்மிடம் வந்தோரை உபசரிக்கும் உயர்ந்த பண்புடன் வாழ்ந்தார்கள். இத்தகைய பண்பாடு பண்டைத் தமிழ் மக்களிடம் குடிகொண்டு இருந்தது. இந்த உண்மையைக் குமரகுருபர சுவாமிகள் ஒரு செய்யுளிலே அமைத்துப் பாடி இருக்கின்றார். பண்டைத் தமிழர் நாகரிக வரலாற்றை அப்படியே சுருக்கமாகச் சொல்லி இருக்கிறார்.
கொழுங்கொடியின் விழுந்தவள்ளிக்
கிழங்குகல்லி எடுப்போம்;
குறிஞ்சிமலர் தெரிந்து, முல்லைக்
கொடியில்வைத்துத் தொடுப்போம்;
பழம்பிழிந்த கொழும்சாறும்
தேறலும்வாய் மடுப்போம்;
பசுந்தழையும் மரவுரியும்
இசைந்திடவே உடுப்போம்;
செழுந்தினையும் நறுந்தேனும்
விருந்துஅருந்தக் கொடுப்போம்;
சினவேங்கைப் புலித்தோலின்
பாயலில்கண் படுப்போம்;
எழுந்துகயல் கணிகாலில்
விழுந்துவினை கெடுப்போம்!
எங்கள்குறக் குடிக்கு அடுத்த
இயல்பு இது காண் அம்மே!
என்பதே அச்செய்யுள். இதில் குறக்குடியினரின் வாழ்க்கைப் படம் காணப்படுகின்றது. குன்றத்தில் வாழ்கின்றவர்கள் குறவர்கள்; மலைச் சாதியினர். நாட்டு வாழ்க்கை அவர்களிடம் இல்லை. மலைவாழ்க்கைத்தான் அவர்களுடைய வாழ்க்கை. அந்த மக்களின் வாழ்க்கை எவ்வளவு சிறப்புடன் அமைந்திருந்தது என்பதை இச்செய்யுளால் காணலாம்.
நல்ல சிறந்த கொடியின்கீழ் நிலத்தில் விடப்பட்டிருக்கும் சர்க்கரைவள்ளிக் கிழங்குகளைத் தோண்டியெடுப்போம்; குறிஞ்சிப் பூக்களைப் பறிப்போம்; முல்லை மலர்களையும் சேர்த்து முல்லைக் கொடியிலே வைத்துத் தொடுப்போம். இவை எங்கள் விளையாட்டும், தொழிலும் ஆகும்.
மா, பலா முதலிய பழங்களைப் பறித்து அவைகளின் சாற்றைப் பிழிவோம். தேனும் தேடி எடுத்து வைத்திருப்போம். இந்தப் பழச் சாற்றையும் தேனையும் அருந்துவோம்.
பசுந் தழைகளை வைத்துத் தொடுத்த ஆடைகளை அணிவோம்; மர உரிகளையும் ஆடைகளாக அணிவோம்; இவைதான் நாங்கள் அணியும் ஆடைகள்.
விருந்தினர்கள் வந்தால் அவர்களை வரவேற்போம். நல்ல தினைமாவையும், இனிய தேனையும் அவர்கள் உண்ணும்படி கொடுப்போம். நாங்கள் எவ்வளவு ஏழ்மை வாழ்வு நடத்தினாலும் விருந்தினரைப் புறக்கணிக்க மாட்டோம்.
எங்களுக்குப் படுக்கை புலித்தோல்தான். கோபம் உள்ள வேங்கையை வேட்டையிலே கொல்லுவோம். அதன் தோலைப் படுக்கைக்குப் பயன்படுத்திக்கொள்ளுவோம்.
விடியற்காலத்தில் எழுந்ததும் முதல் வேலையாக மீனாட்சி அம்மையின் பாதங்களிலே விழுந்து வணங்குவோம். எங்கள் தீவினையை ஒழிப்போம்.
எங்கள் குறக் குடிக்கு ஏற்ற தன்மை இதுவாகும்.
குறவர்களின் தெய்வம் – மலைநில மக்களின் தெய்வம்- குறிஞ்சி நிலத் தெய்வம் – முருகன் என்பதே இலக்கணம். ஆனால், இப்பாடலில், குறவர்கள் மீனாட்சியம்மையை வணங்குவதாகக் கூறப்பட்டுள்ளது. இப்பாடல், மீனாட்சி அம்மை குறம் என்ற நூலில் உள்ளது. மீனாட்சி அம்மையைப் பாடுவதற்காகவே- துதிப்பதற்காகவே- போற்றுவதற்காகவே- எழுந்த நூல். ஆதலால், முருகனை வைக்க வேண்டிய இடத்தில் மீனாட்சி அம்மையை வைத்துப் பாடினார் ஆசிரியர்.
மீனாட்சி அம்மை என்பதற்குத் தமிழ்ச் சொல் அங்கயற்கண் அம்மை என்பது.
பண்டைத் தமிழ் மக்களிடம் தெய்வ வணக்கமும் இருந்தது; விருந்தினரைப் போற்றும் வழக்கமும் இருந்தது என்பதை இப்பாடல் காட்டுகின்றது.
மீனாட்சி அம்மை குறம் ஏறக்குறைய நானூறு ஆண்டுகளுக்கு முன் எழுந்த நூல் தான்; ஆயினும் அதிலே பழந்தமிழர் பண்பாட்டைக் காணுகிறோம். தமிழின் பெருமைக்கும், தமிழ்ப் புலவர்களின் தன்மைக்கும் இப்பாடல் ஒரு எடுத்துக்காட்டாக நிற்கின்றது.
சிறந்த தமிழ்ப் புலவர்கள், பழந்தமிழர் பண்பாட்டை மறந்து விடுவதில்லை; சமயம் நேரும்போதெல்லாம் அப் பண்பாட்டை வைத்துப் பாடிவிடுவார்கள்; தாங்கள் பாடும் பாடல்களிலும், எழுதும் நூல்களிலும், பழந்தமிழர் சிறப்பை அமைத்துப் பாடுவதும், எழுதுவதும் அவர்கள் பண்பு. இது தமிழர்களின் வழிவழிப் பண்பாகும். இது பாராட்டப்பட்ட சிறந்த பண்பு என்பதில் ஐயம் இல்லை. இதனால்தான், மறைந்து போன பழந் தமிழர்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள முடிகின்றது.



