
அருணகிரியார் – குருபரர் அறிவுரைகள்
சாமி சிதம்பரனார்
25. செல்வமும் வறுமையும்
ஒருவன் ஏராளமான செல்வங்களைப் படைத்திருக்கலாம். எல்லா வசதிகளும் அமைந்த குடியிருக்கும் இடம்; ஏவிய வேலைகளைக் கேட்கும் வேலைக்காரர்கள்; எள் என்றால் எண்ணெய் கொண்டுவரும் சுறுசுறுப்புள்ள ஏவலாளர்கள்; தன் விருப்பப்படி நடந்துகொள்ளும் மனைவி மக்கள்; நிலத்திலே திரியவேண்டிய கஷ்டமில்லாதபடி, நினைத்த இடத்திற்கு விரைந்து செல்லக் கூடிய வாகன வசதிகள்; எண்ணியவைகளை யெல்லாம் – விரும்பியவைகளையெல்லாம் – உடனே பெறக் கூடிய பண வசதி- இவைகள் எல்லாவற்றையும் ஒருவன் பெற்றிருக்கலாம்.
இவ்வளவு வசதிகளையும் பெற்ற ஒருவன் மனச்சாந்தி இல்லாமல் வாழ்வானாயின்- மன அமைதியில்லாமல் வாழ்வானாயின்- இருப்பது போதும் என்ற நிலை மனம் இல்லாமல் வாழ்வானாயின்- இன்னும் வேண்டும் வேண்டும் என்று அலைந்து திரிவானாயின்- அவன் வாழ்விலே கடுகளவும் இன்பத்தைக் காண முடியாது. எப்பொழுதும் வேளா வேளைக்கு உணவுகூட அருந்த முடியாமல், ஓய்வு பெற முடியாமல், இரவில் கூட உறக்கமில்லாது கவலையுடன் தான் அவன் வாழ்வான். கவலைப் படுகின்றவன் வாழ்க்கையில் இன்பத்தையோ மகிழ்ச்சியையோ காணமுடியாது. மன நிறைவு இல்லாதவன் எவ்வளவு செல்வங்களை- வசதிகளை- உடையவனாயிருந்தாலும் அவன் வறியவன் தான்; ஏழைதான். இத்தகையோர் சிலரை நாம் கண்டிருக்கலாம்.
ஒருவனுக்கு இருப்பதற்குக் கூட இடம் இல்லை; விரும்பிய உணவை உண்பதற்கும் பணம் இல்லை; அன்றாடம் உழைத்துத் தான் சாப்பிட்டாக வேண்டும்; ஒரு நாளைக்கு உழைப்பில்லா விட்டால்- உழைப்பினால் கிடைக்கும் வருமானம் இல்லா விட்டால்- அவனும் அவன் குடும்பமும் உண்ணா விரதிகளாகத் தான் காலம் போக்க வேண்டும்.
இத்தகைய வறியவன் வாழ்விலே குதூகலத்தைக் காண்கிறோம். போதுமான வருமானமும், தேவையான உணவும் கிடைத்த போது அவனும் அவனைச் சேர்ந்தவர்களும் ஆனந்தக் கூத்தாடுவதைக் காணலாம்; எல்லா வசதியும் இருந்தும் கவலையும் துக்கமும் துணையாகக் கொண்டு வாழ்வோரைக் கண்டு நக்கல் செய்வதைக் காணலாம். நாளையைப் பற்றிய கவலையே அவனுக்கில்லை; ஏராளமான செல்வத்தைக் குவித்து அழகு பார்க்க வேண்டும் என்ற ஆசை அவனிடம் இல்லை. இதனால்தான் வறுமைக்கும் அஞ்சாமல் அதனுடன் போராடி மகிழ்ச்சியடைகின்றான்.
எல்லா வசதிகளையும் படைத்தவர்கள் கவலையால் வருந்துவதற்குக் காரணம் என்ன? ஒரு வசதியும் இல்லாமல் கூலிக்கு உழைப்பவன் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்குக் காரணம் என்ன? – இக்கேள்விக்கு மத நம்பிக்கையும் கடவுள் நம்பிக்கையும் உள்ளவர்கள் உடனே கூறும் பதில் ஒன்றுதான். எல்லாம் தலைவிதிதான்; பூர்வ ஜன்ம வினைதான். அவனவன் தலையெழுத்துப்படியே ஒவ்வொருவனும் இன்ப துன்பங்களை அனுபவிக்கிறான்; இதை மாற்ற நம்மால் முடியாது என்று கூறிவிடுவார்கள். ஆனால் மத நம்பிக்கையும், தெய்வ பக்தியுமுள்ள குமரகுருபரர், மேலே காட்டிய கேள்விகளுக்குச் சொல்லியிருக்கும் விடை இதுவன்று. அது வேறுவிதமானது. சிதம்பர மும்மணிக்கோவையில் உள்ள இருபத்தைந்தாவது செய்யுளில் அவ்விடையைக் காணலாம்.
கொடி, முரசு, வெற்றியைக் காட்டும் வெண்பட்டுக் குடை- இவைகள் மற்ற அரசர்களுக்கு இல்லாமல் செய்தவன்; தான் ஒருவனே இவைகளைக் கொண்டவன்; இவ்வுலகம் பலருக்கும் பொது என்பதை ஒழித்தவன்; தனது ஆட்சிச் சக்கரத்தை எல்லா திசைகளிலும் இயங்கச் செய்திருப்பவன்; செவியினால் எல்லாவற்றையும் கேட்டறிபவன்; தான் சொல்ல வேண்டியதை வாயினால் சொல்லாமல் கண் குறிப்பினால் வெளியிடுகின்றவன்; அவனுடைய கண் குறிப்பைக் கொண்டே அவன் என்ன நினைக்கின்றான் என்பதைத் தெரிந்து கொண்டு அதைச் செய்து முடிக்கும் அமைச்சர்களையும், ஏவலர்களையும் பெற்ற வன் – இவ்வாறு இவ்வுலகை ஆளும் ஒப்பற்ற பெரிய மன்னவன் அவன்.
இத்தகைய அரசன் தன்னைக் காட்டிலும் சிறந்த ஒருவனுடைய செல்வத்தைப் பார்க்கின்றான். அவனுடைய செல்வத்தைவிட, தனது செல்வம் குறைவாகக் காணப்படுகின்றது. அதனால் அவன் தனது செல்வத்தை இழந்தது போன்ற துன்பத்தை அடைகின்றான். பொறாமை கொள்ளுகின்றான். அந்த மிக்கோனுடைய செல்வத்தைக் கவர்வதற்கான வழிகளை எல்லாம் ஆராய்கின்றான்.
இதன் காரணமாக- பிறன் செல்வத்தைக் கண்டு ஆற்றாமையும், பொறாமையும் கொண்டதன் காரணமாக அவன் சுவையுள்ள உணவுகளை உண்ணமாட்டான்; தூங்கும் சுகத்தை அறியமாட்டான்; பெண்களால் அடையும் இன்பத்தையும் துறப்பான். அவன் சிறுமூச்சும் பெருமூச்சும் விட்டுக் கவலைப் பட்டு வருந்துவதைக் காண்கிறோம்.
இப்படியில்லாமல்- எச்செல்வமும் இல்லாமல் வாழுகின்ற ஒருவன், விறகுக் கட்டைத் தலையிலே சுமந்து கொண்டு ஊர் தோறும் சென்று விலைகூறி விற்கின்றான். இதுதான் அவன் தொழில். இதனால் கிடைக்கும் கூலிதான் அவன் வருமானம். இந்த வருவாயைக் கொண்டு கூழும் கீரையும் உண்டு வாழ்கிறான் அவன். தன் மக்களையும், மனைவியையும் பார்த்து மகிழ்கின்றான்.
இவ்வாறு வாழ்கின்றவன் பக்கத்து வீட்டிலே வாழ்கின்ற ஒரு சோம்பேறியைப் பார்த்துப் பழிக்கிறான்; பரிகசிக்கிறான். எனக்கு யாரும் இணையில்லை என்று எண்ணி எப்பொழுதும் உழைக்கிறான். இத்தகைய ஒருவன் உள்ளத்திலே ஒரு கவலையும் இல்லாமல் களிப்புடன் வாழ்வதைக் காண்கின்றோம்.
இக்காட்சியிலிருந்து நாம் தெரிந்துகொள்ளும் உண்மை ஒன்றுண்டு. செல்வம் என்று சொல்லப்படுவது போதும் என்ற மனநிறைவேயாகும். பெரிய வறுமை என்று சொல்லப்படுவது இன்னும் வேண்டும்! இன்னும் வேண்டும்! என்னும் ஆசையே யாகும். இதுவே மேலே கண்ட காட்சியிலிருந்து நாம் காணும் உண்மையாகும்.
மன நிறைவுதான் செல்வம்; ஆசைதான் வறுமை என்று கூறினார் குமரகுருபரர். செல்வம் உள்ளவன் துன்பத்திற்குக் காரணம் மனக்குறைதான்; வறியவன் மகிழ்ச்சிக்குக் காரணம் மனநிறைவுதான். இவ்வுண்மையை உணர்ந்தவர்கள், செல்வம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மகிழ்ச்சியுடன் வாழவே முயல்வார்கள். இப்பொருள் அமைந்த பாட்டு கீழ்வருவதாகும்:-
கொடியும், முரசும் கொற்றவெண் குடையும்
பிறர் கொளப்பொறஅன், தானே கொண்டு
பொதுநீங்கு திகிரி திசை திசை போக்கிச்
செவியில் கண்டு, கண்ணின் கூறி,
இருநிலம் புரக்கும் ஒருபெரு வேந்தன்;
மிக்கோன் ஒருவன் வெறுக்கை நோக்குழித்
தொக்க, தன் வெறுக்கை சுருங்கித் தோன்ற
இழப்புஉறு விழுமம் எய்தி, அழுக்கறுத்து,
மற்றது பெறுதற்கு உற்றன தெரீஇ;
அயில்சுவை பெறாஅன், துயில்சுவை உறாஅன்,
மாண்இழை மகளிர் தோள்நலம் கொளாஅன்,
சிறுகாற்று வழங்காப் பெருமூச்சு எறிந்து
கவலையுற்று அழிவதூஉம் காண்டும்;
அதாஅன்று, விறகெடுத்து ஊர்தொறும் சுமந்து
விற்றுக் கூலிகொண்டு,
புற்கையும், அடகும் மாந்தி, மக்களோடு
முயற்சியில் மகனை இழித்தனன், எள்ளி.
எனக்கு இணை இலை, என வினையன், மற்று ஒருவன்
மனக்களிப்பு உறீஇ மகிழ்வதூஉம் காண்டும்;
அதனால்,
செல்வம் என்பது சிந்தையின் நிறைவே;
அல்கா நல்குரவு அவாஎனப் படுமே.
இதுவே சிதம்பர மும்மணிக்கோவையின் சிறந்த பாட்டு. இச்செய்யுளில் அமைந்துள்ள இரண்டு அடிகள் குறிப்பிடத் தக்கவை.
செல்வம் என்பது சிந்தையின் நிறைவே;
அல்கா நல்குரவு அவாஎனப் படுமே.
இவ்வடிகள் நம் மனத்தில் மறவாமல் உலவ வேண்டிய மணிமொழிகள். இம்மொழிகளை மறவாதவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என்பதில் ஐயம் இல்லை.
அதிருப்திக்கு- மனக் குறைக்கு- இதைவிடச் சிறந்த மருந்து வேறொன்றும் இல்லை, இம்மருந்தைக் கொள்வோர் மகிழ்ச்சியுடன் வாழ்வர் என்பதை மறுப்பார் யார்?



