அருணகிரியார் – குருபரர் அறிவுரைகள்
சாமி சிதம்பரனார்

28. கவிதா சக்தியே கலைமகள்

கல்வியைத் தெய்வமாக உருவகம் செய்து வணங்கினர் நமது முன்னோர்கள். மக்களுக்கு நன்மை தரும் பலவும் தெய்வத் தன்மை பொருந்தியவை என்பதே பண்டைச் சான்றோர்கள் கொள்கை. இதை ஒட்டியே கல்வியையும் தெய்வ உருவமாக ஒப்பனை செய்தனர்.

சொல்லிலே- இனிமையான மொழிகளிலே- தெய்வத் தன்மையுண்டு; சொல்லில் அடங்கிய சிறந்த பொருளிலே- கருத்திலே – தெய்வத் தன்மை உண்டு; சொற்களும் பொருள் களும் சிறப்பாக அமையும்படி பாடும் பாடல்களிலே தெய்வத் தன்மையுண்டு என்பதே முன்னோர் கருத்து.

இனிய சொற்களும், இனிய பொருள்களும் அமைந்த பாடல்களிலே சுவையுண்டு; உயிர் ஓட்டம் உண்டு. அவையே பாடுவோர்- கேட்போர் உள்ளத்தை ஆட்கொள்ளும் ஆற்றல் வாய்ந்தவை; பிறர் மனத்தைக் கவரும் வன்மை- ஆற்றல் – சக்தி- படைத்தவை. எவையானாலும் சரி, அதிலே ஒரு தெய்வீக சக்தி உண்டு என்றே அறிவுடையோர் நம்பினர்.

இனிய மொழியும், அரிய பொருளும், உயர்ந்த நடைப் போக்கும் அமைந்த பாடல்களோ, வசனங்களோ எல்லோரிடமும் பிறந்துவிட மாட்டா; நல்ல ஒழுக்கமும், உயர்ந்த குணமும், இரக்க உள்ளமும், பொதுநலங் கருதும் தன்மையும், தன்னலத் தியாகமும் படைத்தவர்களிடமே பிறக்கும்.

இத்தகைய பண்பு படைத்தவர்களைத்தான் உயர்ந்தவர்கள், உத்தமர்கள் என்றெல்லாம் உலக மக்கள் போற்றினர்; வாழ்த்தினர்; புகழ்ந்தனர்; பணிந்தனர். இன்றும் உயர்ந்த பண்புள்ளவர்களை உலக மக்கள் போற்றுவதைக் காண்கின்றோம். அவர்களுக்குச் சாதாரண மக்களை விடத் தனித்த மதிப்பு பெருகிப் பரவுவதைக் காண்கின்றோம்.

இந்த உண்மையை அறிந்த மக்கள், தாமும் புகழ் பெற வேண்டும், மற்றவர்களால் பாராட்டப்பட வேண்டும் என்றுதான் விரும்புவார்கள்; ஆசைப்படுவார்கள். இவ்வாறு விரும்புவதோடு- ஆசைப்படுவார்கள். இவ்வாறு விரும்புவதோடு- ஆசைப்படுவதோடு- நின்றுவிட்டால் மட்டும் போதாது; இந்த நிலையை அடைவதற்கு முயன்றாக வேண்டும். முயல்பவர்கள் முதலில் தோல்வி கண்டாலும் இறுதியில் தங்கள் முயற்சியில் வெற்றி காண்பார்கள்: அதனால் இன்பம் அடைவார்கள் என்பதில் ஐயம் இல்லை.

உயர்ந்த நிலையை அடைய- உத்தமர்கள் என்று பெயர் வாங்க- உலக மக்கள் உள்ளத்திலே மதிப்புப் பெற்று வாழ முயன்று வெற்றி பெற்றவர்கள் வரலாறுகள் பலவுண்டு. அநேகமாக நாம் படிக்கும் பண்டைக் கதைகளும் இப்படிப்பட்ட வரலாறுகளைத் தான் சொல்லுகின்றன. புதிய சரித்திரங்களும் இவற்றைத்தான் கூறுகின்றன. சரித்திரங்களானாலும் சரி, கதைகளானாலும் சரி – அவற்றில் எல்லாம் தெய்வத் தன்மை பெற்று வாழ விரும்பிய வரலாறுகளே – கதைகளே – நிரம்பிக் கிடப்பதைக் காண்கிறோம்.

இந்த உண்மையைக் குமரகுருபர சுவாமிகள் பாடல் ஒன்றிலே காணலாம். உயர்ந்த கவிதையைத் தெய்வத் தன்மை படைத்தது என்று அவர் கூறுகிறார். தெய்வ சக்தி பெற்றால் தான் உயர்ந்த கவிதையைப் பாட முடியும் என்பதும் அவர் கருத்து.

கவிதா சக்தியையே கலைமகளாக உருவகம் செய்து பாடுகின்றார் அவர். சகலகலாவல்லி மாலையின் மூன்றாவது பாட்டில் இவ்வரும்பொருளைக் காணலாம். அப்பாடலையும் அதன் பொருளையும் காண்போம்.

அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்அமுது
ஆர்ந்து, உன் அருட்கடலில்
குளிக்கும் படிக்குஎன்று கூடும்கொலோ?
உளம் கொண்டுதெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர்
கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாப மயிலே,
சகலகலா வல்லியே!

இதுவே அந்தச் செய்யுள். இனிய சொற்களும் அரிய பொருளும் அமைந்த பாடல். இனிய தமிழ்ச்சுவை நுகர்ந்து உனது அருட்கடலில் விளையாடும் நிலைமை எனக்கு எப்பொழுது கிடைக்குமோ என்று கவிதா சக்தியாகிய கலைமகளை நோக்கி வேண்டுகிறார் ஆசிரியர்.

இப்பாடலுக்குப் பொருள் சொல்லும்போது கீழ்வருமாறு மாற்றியமைத்துப் பொருள் சொல்ல வேண்டும். அப்பொழுது தான் எளிதில் பொருள் விளங்கும்.

உளம் கொண்டு, தெள்ளித் தெளிக்கும் பனுவல் புலவோர், கவிதைமழை சிந்தக் கண்டு களிக்கும் கலாபமயிலே, சகலகலாவல்லியே! அளிக்கும் செழுந்தமிழ்த் தன் அமுது ஆர்ந்து, உன் அருள் கடலில் குளிக்கும்படிக்கு என்று கூடுங் கொல் ஓ. இதன் சிறந்த பொருளைக் காண்போம்.

“ஓ, கவிதா சக்தியே! உன்னை உள்ளத்திலே கொண்டவர்கள், தெளிந்த சொற்களைக் கொண்டு விளக்கமான பொருளைக் கூறும் பாடல்களைப் பாடும் புலவர்களாக விளங்குவார்கள். அவர்கள் தங்குதடையின்றி, பலர்க்கும் பயன் தரும்படியான கவிதைகளை மழைபோலப் பொழிவார்கள். அந்தக் கவிமழையைக் கண்டு நீ தோகை பொருந்திய மயிலைப் போல நின்று களித்து நடனமாடுவாய்; எல்லாக் கலைகளையும் உணர்த்த வல்ல உனக்கு இத்தகைய கவி மழையே களிப்பை ஊட்டுவதாகும். இத்தகைய கலைமகளே! எனக்கு இம்மையிலும், மறுமையிலும் இன்பத்தையளிப்பது நல்ல தமிழ்தான்! – குற்றமற்ற வளம்பொருந்திய தமிழ்தான்- தெளிந்த அமுதம் போன்ற தமிழ்தான்! ஆதலரால் அத்தகைய அமுதமான தமிழின் சுவையை அருந்தவே ஆசைப்படுகின்றேன். என் விருப்பப்படி- தமிழ் அமுதத்தை அருந்தி, உனது அருளாகிய கடலிலே குதித்து நீந்தி விளையாடும் பாக்கியம் எனக்கு என்றுதான் கிடைக்குமோ, அறியேன்! விரைவில் தமிழ் அமுதை அருந்தி உன் அருள் கடலில் நீந்தி விளையாடும் பேற்றை அருள்வாயாக! இதுவே மேலேகண்ட பாடலில் அடங்கியுள்ள அரும் பொருள்.

இந்தப் பாடலைப் பார்க்கும்போது இது அருட்பாடல் போலவே- கவிதா சக்தி படைத்த பாடல் போலவே- கவிதா தேவியின் அருள் பெற்ற பாடல் போலவே- அமைந்திருப்பதைக் காணலாம்.

அளிக்கும் செழுந்தமிழ் என்பது அருமையான தொடர். இம்மை, மறுமை இன்பங்களை அளிக்கும் சக்தி பொருந்தியது தமிழ் என்பது இதன் கருத்து. தமிழைத் தெள் அமுது என்று உருவகம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தட்டுத் தடங்கல் இன்றி, இனிய சொல்லும், அரிய பொருளும் அமையப் பாடுவோரே கவிஞர் ஆவார். இதனை, தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை என்ற தொடரால் காணலாம். கலைமகளை – அதாவது கவிதா சக்தியை, மயிலாக உருவகம் செய்திருப்பது பாராட்டத்தக்கது. கவிமழை கலாப மயில் – இவைகள் அருமையான உருவகம். கலாபம் = தோகை.

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 1 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !