
அருணகிரியார் – குருபரர் அறிவுரைகள்
சாமி சிதம்பரனார்
22. தெய்வம் போற்றிய தமிழ்
உலகத்திலே தாய்மொழியைத் தெய்வமாகப் போற்றியவர் களிலே தலைசிறந்தவர்கள் தமிழர்கள். தாய்மொழிப் பற்றிலே, தமிழர்க்கு நிகராக வேறு யாரையும் சொல்ல முடியாது.
தமிழர்கள், தமிழின் மேல் கொண்ட அன்பு- பக்தி- பற்று காரணமாகத் தமிழையே தாயெனப் போற்றினர்; தெய்வம் என வாழ்த்தினர்; தெய்வம் ஈன்ற தமிழ் என வாழ்த்தினர்; தெய்வத் தன்மை பொருந்தியது என்று கொண்டாடினர். தமிழின் இன்பத்தை நுகரவே, தெய்வங்கள் எல்லாம் மக்கள் உருவில் வந்தன என்று கூறினர்; பாடினர்; ஆடினர்; மகிழ்ந்து கொண்டாடினர்.
இவ்வுண்மையை விளக்கப் பல பாடல்கள் உண்டு. பிற்காலத்துப் புலவர்களிலே குமரகுருபரர் என்னும் புலவர் தமிழின் தெய்வத் தன்மையைப் பல பாடல்களில் விளக்கிப் பாடியிருக்கின்றார். அவருடைய நூல்களிலே மதுரைக் கலம்பகம் என்னும் பிரபந்தம் சிறந்ததொரு நூல். அதில் உள்ள பாடல்களில் ஒன்றைக் காண்போம். தமிழின் சிறப்பையும் தெய்வத் தன்மையையும் விளக்கும் பாடல் அது.
திருவிளையாடல் புராணக் கதையை மூலமாக- அடிப்படையாக வைத்துக் கொண்டு செய்த- பாடிய- கற்பனைப் பாடல் அதுவாகும். கருத்திலும், கதையிலும், கற்பனையிலும் அப் பாடலில் இனிமை விளையாடுகின்றது; தமிழின் சிறப்பு ஒளி விட்டுத் தவழ்கின்றது. குமரகுருபரர் தமிழின் பால் எவ்வளவு அன்பு கொண்டிருந்தார் என்பதையும் விளக்குகிறது அப்பாடல். முதலில் அப்பாடலைக் காண்போம். அதன்பின் அதன் பொருளைச் சுவைத்து இன்புறுவோம்.
தமரநீர்ப் புவனம் முழுதுஒருங்கு ஈன்றாள்
தடாதகா தேவிஎன்று ஒருபேர்
தரிக்கவந் ததுவும், தனிமுதல் ஒருநீ
சவுந்தரமாறன்ஆ னதுவும்,
குமரவேள் வழுதி உக்கிரன் எனப்பேர்
கொண்டதும் தண்தமிழ் மதுரம்
கூட்டுண எழுந்த வேட்கையால் எனில்இக்
கொழிதமிழ்ப் பெருமையார் அறிவார்
பமரம்யாழ் மிழற்ற நறவுகொப் பளிக்கும்
பனிமலர்க் குழலியர், பளிக்குப்
பால்நிலா முன்றில் தூநிலா முத்தின்
பந்தரில் கண்இமை ஆடாது
அமரர்நா டியரோடு அம்மனை ஆட,
ஐயம்நுண் நுசுப்புஅள வலஎன்று
அமரரும் மருளும் தெளிதமிழ்க் கூடல்
அடல்அரா அலங்கல்வே ணியனே!
சிவபெருமானே! பார்வதிதேவி, தடாதகா தேவி என்ற பெயருடன் பாண்டிய குலத்திலே மதுரையிலே பிறந்தாள்! நீ சவுந்தர பாண்டியன் என்னும் பெயருடன் பிறந்தாய்! முருகன், உக்கிர குமாரன் என்ற பெயருடன் பிறந்தான்! மதுரையில் வளரும் தமிழின்பத்தைச் சுவைக்கத்தான் நீங்கள் இப்படிப் பிறந்தீர்கள். ஆதலால், தமிழின் பெருமையை அளவிட முடியாது!
இக்கருத்தையே இப்பாடல் அழகாக எடுத்துக்காட்டு கின்றது.
இப்பாடலில் மதுரையின் செல்வச் சிறப்பும், தமிழின் பெருமையும் கூறப்படுகின்றன. பமரம் யாழ் மிழற்ற என்பது தொடங்கிப் பின்னுள்ள அடிகளின் பொருளை முதலில் கண்டு அதன்பின் மேல் உள்ள வரிகளுக்குப் பொருள் காணவேண்டும். அப்பொழுதுதான் எளிதில் பொருள் விளங்கும். இப்பாடலின் பொருள் கீழ்வருவது:-
வண்டுகள் யாழ் போலப் பாடுவதனால் தேன் உமிழ்கின்ற குளிர்ந்த மலர்களைத் தலைமயிரிலே பெண்கள் அணிந்திருக்கின்றனர். அவர்கள் பளிங்கால் கட்டப்பட்ட பால்போல் நிலவெரிக்கும் மேல்மாடியிலே முத்துப்பந்தரின் கீழே அம்மானையாடுகின்றனர். அவர்கள் தேவ மாதர்களுடன் சேர்ந்து அம்மானை ஆடுகின்றனர். அம்மானை ஆடும்போது, உண்டோ இல்லையோ என்று ஐயம் கொள்ளும் படியான அவர்களுடைய இடைகள் துவளுகின்றன. அதைக் கண்டு, தேவர்களும், இவர்களின் இடைகள் இதைத் தாங்குவன அல்ல என்று அஞ்சுகின்றனர். இத்தகைய மதுரையிலே தெளிந்த தமிழ் வழங்கும் கூடலிலே வாழ்கின்ற சிவபெருமானே! பிறரைக் கொல்லுந் தன்மையுள்ள பாம்பையும், மலர் மாலையையும் சடையிலணிந்திருக்கின்ற சிவபெருமானே!
ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த உலக முழுவதையும் பெற்றெடுத்தவள் பார்வதி தேவி. அவள் தடாதகை தேவி என்ற பெயருடன் மலையத்துவசப் பாண்டியனுக்கு மகளாகப் பிறந்தாள். ஒப்பற்ற முதல்வனாகிய நீ, சவுந்தர பாண்டியன் என்னும் பெயருடன் மதுரையை அடைந்தாய். தடாதகைப் பிராட்டியை மணந்தாய். முருகப் பெருமான் உக்கிர குமார பாண்டியன் என்னும் பெயருடன் பிறந்தார். இவ்வாறு நீங்கள் மூவரும் தெளிதமிழ் மதுரையிலே பிறந்தீர்கள். இதற்குக் காரணம், குளிர்ந்த தமிழின் இனிமையைச் சுவைக்க வேண்டும் என்னும் ஆவலைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. தமிழை நுகர்வதற் காகவே, மதுரையில், தேவர்களாகிய நீங்கள் மனித உருவில் பிறந்தீர்களானால், இச்சிறந்த தமிழின் பெருமையை யார்தான் அறிய முடியும்? தமிழைப் போல் சிறந்த மொழி ஒன்றும் இல்லை.
இப்பாடல் திருவிளையாடல் புராணக் கதையை அடிப் படையாகக் கொண்டு எழுந்த கற்பனை. தடாதகைப் பிராட்டி என்பவள், மலையத்துவசப் பாண்டியனுடைய தவப்புதல்வி. மலையரசனே மலையத்துவசப் பாண்டியனாகப் பிறந்தான்; அவன் மகளாகிய மலை மகளே- பார்வதி தேவியே- தடாதகைப் பிராட்டியாகப் பிறந்தாள் என்பது புராணக் கொள்கை.
தடாதகைப் பிராட்டியே பாண்டிய நாட்டின் அரசியானாள். அவ்ள திக்விஜயம் செய்து வந்தாள். எல்லா அரசர்களையும் வென்றாள். சிவபிரானை எதிர்த்த போது அவள் நாணித் தலைகுனிந்தாள், அதன்பின் சிவபெருமானே சவுந்தர பாண்டி யனாக வந்து தடாதகைப் பிராட்டியை மணந்து கொண்டார்.
இவர்களுக்கு மகனாக முருகனே உக்கிரகுமார பாண்டியன் என்னும் பெயருடன் பிறந்தான்; மதுரையை ஆண்டான். அவன் செய்த வீரச் செயல்கள் பல. இக்கதைகளை வைத்துக் கொண்டே இப்பாடலைக் குருபரர் பாடினார்.
இவ்வாறு பார்வதி, பரமசிவன், முருகன் மூவரும் மதுரையில் மனிதர்களாகப் பிறந்ததற்குக் காரணம், வேறு எதுவும் இல்லை. தமிழின் இன்பத்தை அனுபவிக்கவே பிறந்தனர். தமிழைப் படித்துப் பேசிப் பாடி அதன் சுவையை நுகரவே தேவர்களாகிய அவர்கள் மனிதர்கள் வாழும் மதுரையிலே மக்களாகப் பிறந்தனர் என்று பாடினார்.
இப்படிப் பாடியதன் மூலம் தமிழின் சிறப்பை- பெருமையை- இனிமையை- தெய்வத் தன்மையை எடுத்துரைத்தார் குமரகுருபரர்.
தமிழுக்கு இப்பாடலில் அமைந்திருக்கும் அடை மொழிகள்- சிறப்புச் சொற்களே தமிழின் பெருமையை உணர்த்துகின்றன. தண்தமிழ், கொழிதமிழ் தெளிதமிழ் என்று மூவகை அடை மொழிகளுடன் தமிழ் வழங்கப் பட்டிருக்கின்றது.
தண்தமிழ்: குளிர்ந்த தமிழ்; இன்பத்தைத் தரும் தமிழ். கொழிதமிழ்: பொருளும் சுவையும் நிரம்பிக் கிடக்கின்ற தமிழ். தெளிதமிழ்: எப்பொருளையும் தெளிவாக விளக்கும் திறம் படைத்த தமிழ்; குற்றம் குறைகள் இல்லாத தெளிவான தமிழ். – இவ்வாறு இத்தொடர்களுக்குப் பொருள் கூறலாம்.
தடாதகைப் பிராட்டியைத்தான் அங்கயற்கண்ணி அம்மை, மீனாட்சி அம்மை என்று வழங்குவர். சிவபிரானை முன்னிலைப்படுத்தியது போல் பாடப்பட்ட பாடல் இது.
பொருளை நன்றாக அறிந்து இப்பாடலைப் பாடும் போது நம் உள்ளத்தைக் கவரும். நல்ல ஆற்றோட்டம் போன்ற நடையும் இனிமையும் அமைந்த சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று. தமிழின் சிறப்பை விளக்கும் சிறந்த பாடல் இதுவாகும்.



