
அருணகிரியார் – குருபரர் அறிவுரைகள்
சாமி சிதம்பரனார்
8. சமுதாயத் துரோகிகள்
பிறருக்குத் தீமை புரிவோரைப் பாதகர்கள் என்று சொல்லுகின்றோம்; சமூகத் துரோகிகள் என்று சொல்லுகின்றோம். ஒன்றுக்கும் கட்டுப்படாமல் மனம் போன போக்கில் திரிவோர் உண்டு. இவர்கள் நாம் செய்யும் காரியங்கள் நன்மை யானவைகளா? தீமையானவைகளா? நாம் செய்யும் காரியங் களால் மற்ற மனிதர்களுக்கு நன்மையுண்டா? தீமையுண்டா? நாம் செய்யும் வேலைகளை அறிஞர்கள் ஒப்புக்கொள்வார்களா? ஒப்புக் கொள்ள மாட்டார்களா? நம்மைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்? என்று நினைக்கவே மாட்டார்கள். தாம் நினைத்தவைகளை யார் தடுத்தாலும் கேட்காமல் செய்து கொண்டேயிருப்பார்கள். இப்படிப்பட்டவர்களை அடங் காப்பிடாரிகள் என்று அழைக்கின்றோம். தாம் தோன்றித் தம்பிரான்கள் என்று பட்டஞ் சூட்டி அழைக்கின்றோம்.
நல்ல நடத்தைகள் என்பவைகளைக் கைவிடுகின்றவர்கள், செய்யவேண்டிய கடமைகள் என்பவற்றைச் செய்யாமல் விடுகிறவர்கள், செய்யத் தகாதவை என்பவைகளைத் தாராளமாகச் செய்கின்றவர்கள் ஒழுக்கம் அற்றவர்களாகக் கருதப் படுகின்றனர்; அறிவற்றவர்களாக எண்ணப்படுகின்றனர்; மக்கள் சமுதாய ஒழுங்கை மதிக்காத ஆணவம் பிடித்தவர்களாக நினைக்கப்படுகின்றனர். இவர்களை மக்கள் சிறிதும் மதிப்ப தில்லை.
சமுதாய ஒழுங்கு- சமுதாயக் கட்டுப்பாடு – சமுதாய நீதி என்பவை எக்காலத்திலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. யுகத்துக்கு யுகம் மாறுதல் உண்டு; காலத்திற்கேற்ப மாறிக் கொண்டே வரும். மனித சமுதாய வளர்ச்சியை அறிவோர் இந்த உண்மையை உணர்வார்கள். ஒரு காலத்திலே, புலால் உண்பது, கள்ளுண்பது, விபசாரம் செய்வது, சூதாடுவது போன்ற சில செயல்கள் பாபமான செயல்களாகக் கருதப்படவில்லை. இவைகள் வாழ்க்கையின் இயற்கை நிகழ்ச்சிகளாகவும், பொழுது போக்கும் இன்பங்களாகவும் எண்ணப்பட்டு வந்தன. பிற்காலத்திலே இவைகளை மாபாதங்கள் என்று எண்ணினர்; நீதிநூல்களிலே இவைகளைக் கண்டித்து எழுதி வைத்தனர்; இவைகளைக் கடிவதே- விலக்குவதே- ஒழுக்கம், அறிவுடைமை, புண்ணியமான செயல் என்று கொண்டனர். சமுதாய ஒழுங்கில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு இது ஒரு உதாரணமாகும்.
ஒரு காலத்திலே, ஒருவன் ஏராளமான சொத்துச் சுதந்திரங்களைப் பெற்று இன்ப வாழ்விலே புரளுவது அவன் செய்த பூர்வ புண்ணியப் பலன் என்று நினைத்தனர். அவனுடைய வாழ்வைக் கண்டு பொறாமைப்படுவது பாவம் என்று எண்ணினர். கோடிக்கணக்கான மக்கள் அந்த ஒருவனுக்காக உழைப்பது, அவன் இட்ட வேலைகளைத் தட்டாமல் செய்வது, அவனுக்கு அடங்கி நடப்பது, அவன் கொடுத்தாலும் சரி, கொடுக்கா விட்டாலும் சரி, அவனைத் தெய்வப் பிறவியாக நினைத்துத் தொழுவது- இவைகள் தலைவிதி, தெய்வக் கட்டளை, பூர்வ ஜென்மத்தில் செய்த கர்மபலன் என்று எண்ணப்பட்டன. இது பண்டைக் காலத்துச் சமுதாய நீதி. இந்த நீதிதான் சரியானது என்று வாதிப்போர் இன்றும் இருக்கின்றனர்.
ஆனால் இன்றைய சமுதாய நீதியிலே பல மாற்றங்களைப் பார்க்கிறோம். உழைப்பவர்களே சமுதாய ஊழியர்கள், உழைக்காதவர்கள் சமுதாயத் துரோகிகள் என்று பேசப்படுகிறது. சமுதாய நன்மைக்காகப் பொருள் சேர்க்கின்றவனே தேசபக்தன்; ஒரு நன்மையும் செய்யாமல்- ஒருவருக்கும் உதவாமல்- பொருளைக் குவித்து வைத்துக் கொண்டிருப்பவன் தேசத் துரோகி. சமுதாயத் துரோகி என்று சொல்லப்படுவதைக் கேட்கிறோம். உழைப்பாளிகளால்தான் உலகம் வாழ முடியும், வளர முடியும், இன்புற முடியும் என்ற கொள்கை எங்கும் பரவி வருவதைக் காண்கிறோம்.
நமது சமுதாய வாழ்வு எப்படி இருந்தது? எந்தெந்த நடத்தைகளை நமது சமுதாயம் ஒழுக்கம் என்று போற்றி வந்தது?- என்பவைகளைப் பண்டைத் தமிழ் நூல்களிலே பார்க்கலாம். எந்தெந்தக் காலத்தில் எவை எவை சமுதாய ஒழுங்குகளாக எண்ணப்பட்டன என்பதையும் அந்தந்தக் காலங்களில் காணலாம்.
அருணகிரிநாதர் சமுதாய ஒழுக்கங்கள் இன்னின்னவை என்று சுட்டிக் காட்டுகிறார். அவர் கூறும் ஒழுக்கங்களும் நீதிகளும் அவர் காலத்தில் நமது நாட்டு அறிஞர்களால் போற்றப் பட்டவை, ஒப்புக் கொள்ளப்பட்டவை என்று தான் நாம் கொள்ள வேண்டும். அவர் சுட்டிக்காட்டும் ஒழுக்கங்களிலே பல இக்காலத்திற்கும் ஏற்றனவாயிருப்பதைக் காணலாம்.
நரகத்திலே கிடந்து துன்புறப் போகும் மனிதர்கள் யார் என்று பாடுகிறார் அருணகிரிநாதர்; நரகத்துக்குத் தகுதியான வர்களின் அட்டவணையையே தந்திருக்கிறார்.
ஓதி வைத்தவர் கூலிகொ டாதவர்;
மாத வர்க்கு அதி பாதக மானவர்;
பூச லில்கன லாய்எரி காளையர்; – மறையோர்கள்
ஊர்த னக்குஇட ரேசெய்வர்; ஏழையர்
ஆர்த னக்குஉ தாசினம ஆனவர்;
ஓதும் உத்தம நீதியை நாடிலர்; – இரவோருக்(கு)
ஏதும் இத்தனை தானம்இ டாதவர்;
பூத லத்தினில் ஓரம்அ தானவர்;
ஏதி னில்சிவ ஞானியை மோனியை – இகழ்வோரும்;
ஏத சிற்றறி ஞானம்இ லாதவர்;
யோகம் அற்றிடு போகிதம் மீறினர்;
ஈனர்; இத்தனை பேர்களும் ஏழ்நரகு – உழல்வாரே;
இப்பாடலில் நரகத்தையடைவோர்கள் யார் யார் என எடுத்துக் காட்டினார்.
ஓதிவைத்த ஆசானுக்குக் கூலி கொடுக்காதவர்கள்; சிறந்த தவசிகளுக்குப் பெருந் தீமை செய்கின்றவர்கள்; வாய் வழக்குப் போரில் நெருப்பாகக் கோபிக்கும் வாலிபர்கள்; வேதியர்கள் வாழும் ஊருக்கு தீமை செய்கின்றவர்கள். ஏழை மக்களால் விரும்பப்படாமல் வெறுக்கப்படுகின்றவர்கள்; நீதி நூல்கள் கூறும் சிறந்த நீதியை அலட்சியம் செய்கின்றவர்கள்; வறுமையால் வந்து இரப்போருக்குச் சிறிதளவேனும் உதவி செய்யாதவர்கள்; இவ்வுலகில் நீதிவழி நின்று பேசாமல் ஒரு பக்கமாக நின்று பேசுகின்றவர்கள்; குற்றமற்ற சிவஞானத்தையுடைய மௌனிகளை இகழ்ந்து பேசுவோர்; குற்றமுள்ள கீழ்மைகளைக் கண்டறியும் அறிவில்லாதவர்கள்; யோக மார்க்கத்தை அறியாமல் மாதர்களின் போக இன்பத்திலே மூழ்கியவர்கள்- இவர்கள் அனைவரும் உயர்ந்தவர்கள் அல்லர்; ஈனமானவர்கள். இத்தனை பேர்களும் ஏழு என்று சொல்லப்படும் நரகங்களில் கிடந்து வருந்துவார்கள்; இதுவே மேலேகாட்டிய பாடலின் பொருள். இது, குன்று தோறாடல் என்னும் தலைப்பில் உள்ள திருப்புகழ்ப் பாட்டு ஒன்றின் முதல் பகுதி.
மற்றொரு பாடலிலும் ஒழுக்கமற்றோர் வரிசையைக் காணலாம். ஒழுக்கமற்றவர்களைக் குண்டர்கள் என்று குறிப்பிடுகிறார் அருணகிரியார். குண்டர்கள் என்ற சொல் தமிழிலே நெடுங்காலமாக வழங்கி வரும் சொல்; குண்டர் என்ற சொல்லுக்கு, அடிமைகள்; வேசிமக்கள்; ஒழுக்க மற்றவர்கள்; பிறருக்குத் தீமை செய்வோர்; இரக்கம் அற்றவர்கள்; வஞ்சகர்கள்; கைக்கூலி வாங்கிக்கொண்டு காலித்தனம் செய்வோர்; அடங்காப்பிடாரிகள்- என்று பல பொருள் கூறலாம்.
தோழமை கொண்டு சலஞ்செய் குண்டர்கள்;
ஓதிய நன்றி மறந்து குண்டர்கள்;
சூழ்விர தங்கள் கடிந்த குண்டர்கள்; – பெரியோரை
தூஷண நிந்தை பகர்ந்த குண்டர்கள்;
ஈவது கண்டு தகைந்த குண்டர்கள்;
சூளுற வென்பது ஒழிந்த குண்டர்கள்;- தொலையாமல்
வாழ நினைந்து வருந்து குண்டர்கள்
தேவர்கள் சொங்கள் கவர்ந்த குண்டர்கள்;
வாதை நமன்றன் வருந்தி டும்குழி- விழுவாரே.
இப்பாட்டு யார் யார் குண்டர்கள் என்பதைக் குறிப்பிடுகின்றது.
நட்புக் கொண்டு பிறகு துன்பந் தருகின்ற குண்டர்கள்; சிறந்தது என்று சொல்லப்பட்ட நன்றியை மறந்த குண்டர்கள்; நன்மைக்காக ஆராய்ந்து சொல்லி வைத்த விரதங்களை இகழ்ந்த குண்டர்கள்; பெரியோர்களைத் தூஷித்துப் பழி பேசிய குண்டர்கள்; பிறர், வருந்துவோர்க்குக் கொடுப்பதைத் தடுத்த குண்டர்கள்; சொன்ன உறுதி மொழியை நிறைவேற்றாமல் கைவிட்ட குண்டர்கள்; எப்பொழுதும் அழியாமல் நன்றாக வாழ வேண்டும் என்று நினைத்து, அதற்கான முயற்சியைச் செய்யாமல் சும்மா வருந்திக் கொண்டிருக்கின்ற குண்டர்கள்; தேவர்களுக்கு உரிமையான சொத்துக்களைக் கவர்ந்த குண்டர்கள்- இவர்கள் எல்லாம் துன்பந்தரும் எமலோகத்தில் உள்ள – துன்பமயமான- நரகக்குழியில் விழுந்து துடிப்பார்கள்.
இப்பாடலும் குன்றுதோறாடல் என்னும் தலைப்பில் உள்ள திருப்புகழ்ப் பாடல்கள் ஒன்றின் முதல் பகுதியாகும்.
மற்றொரு பாட்டிலே, தீமை செய்கின்றவர்களை- ஒழுக்கங் கெட்டவர்களை- துட்டர்கள் என்றே குறிப்பிடுகிறார் அருணகிரிநாதர். ஒழுக்கமற்ற துஷ்டர்களைக் குறிக்கும் ஒரு பட்டியலைக் கீழ்வரும் பாடலில் காணலாம்:-
ஆசார ஈனக் குதர்க்க துட்டர்கள்;
மாதா பிதாவைப் பழித்த துட்டர்கள்;
ஆமாவின் ஊனைச் செகுத்த துட்டர்கள்; – பரதாரம்
ஆகாது எனாமல் பொசித்த துட்டர்கள்;
நானாஉ பாயச் சரித்ர துட்டர்கள்;
ஆவேச நீரைக் குடித்த துட்டர்கள்; – தமியோர் சொம்
கூசாது சேரப் பறித்த துட்டர்கள்;
உரார்கள் ஆசைப் பிதற்று துட்டர்கள்;
கோலால வாழ்வில் செருக்கு துட்டர்கள்; – குரு சேவை
கூடாத பாவத்து அவத்த துட்டர்கள்;
ஓயாது தேடிப் புதைத்த துட்டர்கள்;
கோமாள நாயின் கடைப்பி றப்பினில் – உழல்வாரே.
இதுவே துட்டர்கள் வரிசையைக் காட்டும் பாடல். இதில் குறிப்பிடப்பட்டிருப்போர் இன்றும் மக்களால் துஷ்டர்களாகக் கருதப்படுகின்றனர் என்பது உண்மை. இத் துஷ்டர்களை அனைவரும் வெறுப்பார்கள் என்பதில் ஐயம் இல்லை.
ஆசாரமற்ற விதண்டாவாதம் பேசும் துட்டர்கள்; தாய் தந்தையரை இகழ்ந்த துட்டர்கள்; பசுவின் மாமிசத்தை அறுத்த துட்டர்கள்; பிறர் மனைவியைக் கூடுவது பாவம் என்று கருதாமல் அவர்களை அனுபவித்த துட்டர்கள்; பல வகைப்பட்ட தந்திரங்களைச் செய்து ஏமாற்றி வாழும் துட்டர்கள்; மதுபானம் செய்யும் துட்டர்கள்; தனியே செல்வோர் பொருளை வழிப்பறி செய்த துட்டர்கள்; ஊரார்களுடன் ஒட்டி வாழாமல்- அவர்கள் விருப்பத்துக்கு மாறாக- தம்மையே பெரிதாக நினைத்துப் பிதற்றுகின்ற துட்டர்கள்; கோலாகலமாகக் கர்வம் கொண்டு அடாதவைகளைச் செய்யும் துட்டர்கள்; குருவுக்குப் பணிவிடை செய்யாத பாவத்தையுடைய வீணான துட்டர்கள்; ஓயாமல் பொருள் தேடி அதை நல்வழியிலே செலவு செய்யாமல் மறைத்து வைத்திருக்கும் துட்டர்கள்- இவர்கள் எல்லாம் பரிகசிக்கத்தக்க நாயைப் போலக் கடைப்பட்ட பிறப்பினராகக் கருதப்பட்டு வருந்துவார்கள். இதுவே மேலே காட்டிய பாடலின் பொருள்.
இப்பாடல் திருநாகீச்சுரத் திருப்புகழின் முதற் பகுதி. இது போன்ற நீதிகளை, இன்னும் பல திருப்புகழ்ப் பாடல்களிலும் காணலாம். இவ்வாறு அருணகிரியார் எடுத்துக் காட்டும் நீதிகள் அனைத்தும் மனித சமுதாயத்தைத் திருத்தும் கருத்துடைய வைளேயாகும்; அருணகிரியார் காலத்தில் தமிழகத்தில் வெறுக்கப்பட்ட செயல்கள் இவை இவை என்று காண்பதற்குத் துணை செய்வனவாகும்.



