அருணகிரியார் – குருபரர் அறிவுரைகள்
சாமி சிதம்பரனார்

3. முருகனை வேண்டுதல்

உடல் நிலையற்றது; இதை நிலையாக வைத்திருப்பதற்கு இளமை முதல் நாம் படும் பாட்டுக்கு அளவேயில்லை. நம்மைப் பெற்றோர், நாம் பிற்காலத்தில் வலுவுடன் வாழ நமக்குக் கொடுத்த கொழுப்புள்ள உணவுகளுக்கு அளவில்லை; நமக்கு நோய்நொடிகள் வராமலிருக்க எத்தனையோ மருந்துகளும் கொடுத்தார்கள்; நம்மை அன்புடன் ஆடை அணிகள் பூட்டி வளர்த்தார்கள்; அவர்கள் தமது வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி நம்மை வளர்த்த அருமை பெருமைகளை ஆரும் அறிவார்கள்.

நாமும் வயதேறியபின் நமது உடலைப் பாதுகாக்க முனைந்து வருகிறோம்; உடம்பு நலம்பெறப் பல உணவுகளை உண்ணுகிறோம்; நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளுவதிலே கண்ணுங் கருத்துமாயிருக்கின்றோம். எவ்வளவு செய்துதான் என்ன? இந்த உடல் என்றேனும் ஒரு நாள் திடீரென்று மறைந்து விடத்தான் போகிறது.

மெலிந்த உடல்தான் நோயால் பிணிக்கப்பட்டு விரைவில் மறையும்; வலுத்த உடல் நோய்களால் பற்றப்படாது, எளிதில் மறையாது என்பதில்லை. இளைத்தவர்கள் நீண்ட நாள் வாழ் வதைக் காண்கிறோம். வலுத்தவர்கள் திடீரென்று மறைவதைப் பார்க்கின்றோம். காய் உதிர்வதும், பழம் உதிராமல் இருப்பதும் நாம் காணும் காட்சியல்லவா?

இந்த நாளில் ஏற்படும் திடீர்ச் சாவைப் பற்றிக் கேட்கவா வேண்டும்! நம்மைச் சுற்றி எமதூதர்கள் சூழ்ந்திருக்கிறார்கள்; நாம் போகும் இடங்களுக்கும் அவர்கள் தொடர்ந்துதான் வந்து கொண்டிருக்கிறார்கள். மோட்டார் காரில் போகும் போது கார் கவிழ்ந்தால் போச்சு; எதிரில் வரும் காருடன் மோதிக் கொண்டால் போச்சு; புகைவண்டியில் போகும் போது எத்தனையோ ஆபத்து; வானவூர்தியில் செல்லும் போது, அது முறிந்து வீழ்ந்தாலும் போச்சு; கப்பலில் செல்லும் போது அது கவிழ்ந்தாலும் போச்சு. சும்மா தெருவில் நடந்து செல்லும்போது எத்தனையோ ஆபத்துக்கள். இவ்வாறு உயிரை வாங்குவதற்கு எவ்வளவோ துறைகள் இருக்கின்றன. வீட்டிலிருந்து புறப்பட்டால், திரும்பி வீட்டுக்கு வருவோம் என்ற நிச்சயம் இல்லை.

இந்த நிலையில்தான் நமது வாழ்வு அமைந்திருக்கின்றது. இருந்தும் இதைப் பலர் எண்ணிப் பார்ப்பதில்லை. ஆயிரங் கோடி ஆண்டுகள் வாழப் போவதாகச் சிலர் எண்ணிக் கொண்டு காரியங்கள் செய்கின்றனர்.

நீண்ட நாளைக்கு நாம் உயிர் வாழ்ந்தாலும் எப்பொழுதும் நல்ல இளமைப் பருவத்துடன் இருக்கப் போவதில்லை. நாளேற நாளேற உடல் தளர்ச்சியடையத் தான் செய்யும்; உடலின் பலம் குறையும்; காது செவிடாகும்; கண் குருடாகும்; பிணிகள் பல உண்டாகும். படுத்த படுக்கையிலேயே மல மூத்திரங்கள் கழியக்கூடிய நிலையும் ஏற்படும். இந்த நிலையிலே உள்ள வயதேறியவர்கள் பலரை நாம் பார்த்திருக்கின்றோம்.

நமக்கு என்றும் நிலைத்த இன்பத்தைத் தருவது இறைவன் அடிகளைத் தவிர வேறொன்றும் இல்லை. இவ்வுலகில் கவலையில்லாமல் நிம்மதியாக வாழ்ந்தவர்கள் இறந்த பின்னரும் இன்புறுவார்கள் என்பது முன்னோர்கள் நம்பிக்கை. ஆதலால் வீணாக உடம்பு மூத்து இளைத்து நோயுற்று மடிவதற்கு முன் மனக் கவலையின்றி வாழும் வழியைத் தேடிக்கொள்வது அறிவுடையோர் கடமையாகும். மனக் கவலைக்கு மருந்து கடவுள்- இறைவன் – நினைப்பைத் தவிர வேறு ஒன்றும் இல்லை யென்பது உண்மை.

உலகிலே துன்பங்கள் பலவற்றை அடைந்தவர்கள். இறுதியாக இறைவனைத் தான் சரணமாக அடைந்திருக்கின்றனர். இதன் மூலம் தங்கள் துன்பங்களை மறந்து இன்பத்தைப் பெற்றிருக்கின்றனர். இத்தகைய பெரியார்களிலே அருணகிரிநாதரும் ஒருவர். அவர் முருகனைக் குறித்துப் பாடிய பாடல்களிலே திருப்புகழ் என்னும் பாடல்கள் சிறந்து விளங்குகின்றன. அவர் அப்பாடல்களை முருகப் பெருமானுக்கு மலர்மாலையாக- வாடாத தமிழ்மலர் மாலைகளாக- புனைந்து போற்றி இன்புற்றார். அப்பாடல்கள் இன்றும் அடியார்கள் உள்ளத்திலே அன்புத் தேனை ஊறச் செய்யும் அரும் பாடல்களாகத் திகழ்கின்றன. அவற்றுள் ஒரு பாடலைக் காண்போம்.

நிலையாப் பொருளை உடலாக் கருதி
நெடுநாள் பொழுதும் அவமேபோய்
நிறைபோய்ச், செவிடு குருடாய்ப் பிணிகள்
நிறைவாய்ப், பொறிகள் தடுமாறி
மலம் நீர்ச் சயனம் மிசையாய்ப் பெருகி
மடிவேற்கு, உரிய நெறியாக
மறைபோற் றரிய ஒளியாய்ப் பரவும்
மலர்தாள் கமலம்- அருள்வாயே;
கொலைநாட்டு அவுணர் கெடமாச் சலதி
குளமாய்ச் சுவற முதுசூதாம்
குறிபோய்ப் பிளவு பட, மேல் கதுவு
கொதிவேல் படையை விடுவோனே
அலைவாய்க் கரையின் மகிழ்சீர்க் குமர!
அழியாப் புனித வடிவானார்
அரனார்க்கு அதிக பொருள்காட்டு அதிப!
அடியார்க்கு எளிய – பெருமாளே.

இதுவே அப்பாடல். இதன் அரிய பொருளைக் காண்போம்.

நிலையாத பொருளை நிலைத்த உடலாக எண்ணி நீண்ட நாட்களை வீணாக்கினேன்.

எனது உடல்நலம் குன்றி, செவிடும் குருடுமாகி, பிணிகள் நிறைந்து, ஐம்பொறிகளும் தடுமாறி, மலமும் நீரும் படுக்கையிலே பெருகியோடும்படி இருந்து இறந்து போகின்ற எனக்கு ஏற்ற வழியாக, வேதத்தாலும் துதிக்க முடியாத, பேரொளியாய்ப் பரந்து நிற்கின்ற மலர்களாகிய உனது பாத பங்கயத்தை நான் அடையும்படி அருள் செய்யவேண்டும்.

கொலைத் தொழிலையுடைய அசுரர்கள் அழியும்படி பெரிய கடல் குளம்போல் வற்றவும், அதிலே மாமர வடிவாக நின்ற சூரபன்மன் இரண்டாகப் பிளந்து போகவும் வீரமிக்க வேற்படையை விடுகின்ற தலைவனே! கடல் அலைகள் மோதும் அழகிய திருச்செந்தூர் நகரில் மகிழ்ந்திருக்கும் குமரனே! சிவபெருமானுக்குச் சீரிய பொருளை உபதேசித்த தலைவா! அடியவர்களுக்கு எளிய பெருமாளே!

பொருளுணர்ந்து இப்பாடலைப் பாடும்போது நம் உள்ளமும் அழகுத் தெய்வமான முருகனின் பாதகமலங்களில் ஒன்றுகிறது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 1 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !