
அருணகிரியார் – குருபரர் அறிவுரைகள்
சாமி சிதம்பரனார்
13. காலனுக்கு அஞ்சாக் கவிஞர்
சாவு என்றால் அஞ்சாதவர்கள் எவரும் இல்லை. எவ்வளவு துன்பத்தில் வாழ்கின்றவர்களும் கூடச் சாகத் துணிவதில்லை. காடு வா வா என்று அழைத்துக் கொண்டே இருக்கின்றது. வீடு போ போ என்று துரத்திக் கொண்டே இருக்கின்றது. இந்த நிலைக்கு ஆளான முதியோர்களும் சாகத் துணிவதில்லை. நோயாளிகளும் இறக்கத் துணிவதில்லை. எவ்வளவு தொல்லைப் பட்டாலும் உயிருடன் வாழத்தான் விரும்புகின்றனர். ஒரு சிலரே இதற்கு விலக்காக இருக்கும் வீரர்கள்.
உலகம் நிலையற்றது; உலகத்தில் உள்ள பண்டங்கள் எல்லாம் நிலையற்றவை; உலக இன்பம் என்பதும் நிலையான தன்று; அழிந்து போகக்கூடியது. ஆகையால், உலகப்பற்றை விட்டு விலகவேண்டும். எந்த ஆசையும் இல்லாமல் இறைவன் ஒருவனையே கருத்தில் கொண்டு வாழவேண்டும்.
நமது வாழ்வும் நிலையற்றது. என்றைக்கு நாம் சாவோம் என்பதைப் பற்றி நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆதலால், ஆசையின்றி வாழ்வதுதான் அறிவுடைமை என்று வேதாந்தம் பேசி வாழ்வோர் பலர் உண்டு.
இவர்களும் சாவு என்றால் அஞ்சித்தான் நடுங்குவார்கள். ஆறிலும் சாவு, நூறிலும் சாவு என்று தத்துவம் பேசுகின்ற வீரர்களும் தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள முயலாமல் இருக்க மாட்டார்கள்.
உலகமே நிலையற்றது என்று பேசுகின்ற தத்துவ ஞானிகள் கூட உயிர் விட அஞ்சுவார்கள் என்றால் மற்றவர்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்? இவ்வுலக இன்பத்தை வெறுத்து மறுவுலக இன்பத்தை வேண்டுகின்ற- விரும்புகின்ற – பக்த கோடிகள் பலரும் சாவைக் கண்டு அஞ்சினார்கள். தாங்கள் வழிபாடு செய்த தெய்வங்களிடம் தங்களைச் சாகாமல் காப்பாற்ற வேண்டும் – எமனுடைய கையில் அகப்படாமல் தப்புவிக்க வேண்டும் – என்று வேண்டிக் கொண்டிருக்கின்றார்கள்; பாடல்களின் மூலம் மனம் உருகிப் பணிந்திருக்கின்றனர்.
முருகன் அருள் பெற்ற முனிவர் என்று போற்றப்படும் புலவர் அருணகிரிநாதர். அவர் பாடிய கந்தர் அலங்காரத்திலே, தான் சாவதற்கு முன் – தனது உடல் அழிவதற்கு முன்- முருகன் அருள்புரிய வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுகின்றார். அவர் வேண்டுகோளைக் காண்போம்.
திருச்செங்கோடு என்னும் திருமலை தெய்வத் தன்மை பொருந்தியது. சிறந்த சோதி வடிவான நீ வாழ்வதனால்தான் அந்தத் திருச்செங்கோட்டுக்குத் தெய்வத் தன்மை பிறந்தது. அது தெய்வத் தன்மையுடன் விளங்குகிறது என்பதில் ஐயம் இல்லை. இந்த மலையில் வாழ்கின்ற கூர்மை பொருந்தி வேற்படையுடைய தேவனே! நான் உன்னை ஒருபொழுதும் மறக்க மாட்டேன். உன்னுடைய கையில் உள்ள கூர்மையான வேற்படையால் எனது பகைவர்களையெல்லாம் அழித்து என்னைத் துன்புறாமல் காப்பாய் என்ற உறுதியான நம்பிக்கை எனக்குண்டு. ஆதலால், உன்னையே நம்பி நிற்கின்றேன். எனது உடம்பாகிய வீடு ஐம்புலன்கள் வாழ்வதற்காக அமைக்கப்பட்டது. அதற்காக இரண்டு கால்களை நட்டு, இரண்டு கைகளையும் அமைத்துக் கட்டப்பட்ட வீடு. இந்த வீடு நிலையற்றது. எப்பொழுது அழியும் என்பதை நான் அறியேன். இன்றோ, நாளையோ அல்லது மற்றொரு நாளிலோ இந்த வீடு இடிந்து விழுவது நிச்சயம். ஆதலால், இப்பொழுதே நீ உனது கூர்மையான வேற்படையுடன் வந்து என்னைக் காத்தருள வேண்டும். இதுவே எனது வேண்டுகோள் என்று பாடுகிறார் அருணகிரிநாதர்.
தெய்வத் திருமலைச் செங்கோட்டில்
வாழும் செழும்சுடரே!
கைவைத்த வேல்படை வானவனே!
மறவேன் உனைநான்;
ஐவர்க்கு இடம்பெறக் கால் இரண்டு
ஒட்டி, அதில் இரண்டு
கைவைத்த வீடு குலையும்முன்
னேவந்து காத்தருளே.
இப்பாடலிலே, அருணகிரிநாதர் தான் சாவதற்கு முன் தன்னை அணுகிச் சாவாமல் காக்க வேண்டும் என்று முருகனை வேண்டுவதைக் காணலாம்.
இவ்வாறு முருகனை வேண்டிக் கொண்ட அருணகிரிநாதர், தனக்கு முருகன் அருள் கிடைத்து விட்டது என்ற நம்பிக்கை கொண்டார். தனக்கு எவ்வித ஆபத்து வந்தாலும் முருகன் முன்வந்து காப்பான் என்னும் துணிவு கொண்டார். தனக்கு முருகப் பெருமானுடைய பூரண அருள் உண்டு என்பதிலே அவருக்கு உறுதி பிறந்து விட்டது. அதனால், தான் சாவாமல் வாழ முடியும்; தன்னிடம் எமன் அணுக முடியாது; அப்படி அணுகினாலும் அவனிடமிருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என்ற நெஞ்சுரம் பெற்றார். ஆதலால், உயிர்களைக் கவரும் காலனை நோக்கிச் சூள் உரைக்கத் தொடங்கி விட்டார். இச் செய்தியையும் கந்தர் அலங்காரப் பாடல் ஒன்றிலே காணலாம்.
ஏ, குருடனே! அந்தகன் என்னும் பெயருள்ள எமனே! நான் இப்பொழுது செந்தூர் வடிவேலனுக்குத் தொண்டன் ஆகிவிட்டேன். என்னிடம் இப்பொழுது உண்மை ஞானம் பிறந்துவிட்டது. அந்த உண்மை ஞானம் ஒளி பொருந்திய வாளாக என்னிடம் விளங்குகின்றது. இதோ பார்! உண்மை ஞானச் சுடர் வாள் என்னிடம் விளங்குகின்றது அந்தகனே! கொஞ்சம் என் கைக்கு எட்டும் தூரத்தில் வந்து பார்! உனக்குத் தைரியம் இருந்தால் கொஞ்சம் நெருங்கி வா, பார்க்கலாம்! நீ தைரியத்துடன் என் கைக்கு எட்டும் தூரத்தில், என்முன் வந்தால் என்ன செய்வேன் தெரியுமா? உன் கையில் உள்ள தண்டாயுதமும் முத்தலைச் சூலமும் என்னை ஒன்றும் செய்துவிட முடியாது. அவை உன் கையிலிருந்து விழும்படி உன்னை எனது ஞானச் சுடர் வாளால் தாக்குவேன் உன்னை- உன் உயிரை- எப்படிக் காப்பாற்றுவது என்று திகைத்துத் திண்டாடும்படி வெட்டிக் கீழே விழும்படி வீழ்த்துவேன்! என்று பாடியிருக்கின்றார்.
தண்டா யுதமும் திரிசூல
மும்விழத் தாக்கி உன்னைத்
திண்டாட வெட்டி விழவிடு
வேன்; செந்தில் வேலனுக்குத்
தொண்டா கியஎன் அவிரோத
ஞானச் சுடர்வடிவாள்
கண்டா யடா! அந்த கா! வந்து
பார், சற்று என் கைக்கு எட்டவே!
என்பதுதான் மேலேகாட்டிய பொருள் அமைந்த பாடல்.
இச்செய்யுளிலே அவிரோத ஞானச் சுடர் வடிவாள் என்று அமைந்திருக்கும் தொடர்தான் சிறந்த தொடர். ஆழ்ந்த கருத்தமைந்த தொடர். அவிரோத ஞானம் என்பது விபரீத உணர்வு ஒழிந்த அறிவு. அதாவது உண்மை அறிவாகும். அந்த உண்மை அறிவு வாளுக்கு ஒப்பிடப்பட்டது. உண்மை அறிவாகிய ஒளி பொருந்திய கூர்மையானவாள் என்பதே அவிரோத ஞானச் சுடர் வடிவாள் என்பதன் பொருள்.
இதனால் உண்மை ஞானம் பெற்றவர்கள் சாவுக்கு அஞ்ச மாட்டார்கள். காலனை எதிர்த்து நிற்பார்கள் என்பதைக் காணலாம். அருணகிரிநாதர் உண்மையறிவு பெற்றவர். அதில் அவர் வைத்த நம்பிக்கை காரணமாக எமனுக்கும் அஞ்சவில்லை. அவனை அறைகூலி அழைக்கின்றார். போர் செய்ய வருமாறு வீர முழக்கம் செய்கின்றார். இதுதான் சிறந்த ஞானப் புலமை யாகும்.



