அருணகிரியார் – குருபரர் அறிவுரைகள்
சாமி சிதம்பரனார்

16. உண்மை வாழ்வு

இவ்வுலக வாழ்வு நிலையற்றது, அழியக் கூடியது. நாம் பார்க்கும் பொருள்கள் எல்லாம் நிலைத்திருப்பவை அல்ல. கண்ணால் காணும் பொருள்கள் அத்தனையும் அழிந்து போய் விடக் கூடியவைகள். ஆதலால் ஒன்றையும் உண்மையென்று நினைக்காதே, நம்பாதே. எல்லாவற்றையும் பொய்யென்று தெரிந்துகொள், நம்பு.

இவ்வாறு உபதேசம் செய்வோர் உண்டு. இந்த உபதேசம் முழுவதையும் உண்மையென்று கொள்ளுவதற்கில்லை. நாம் பார்க்கும் இந்த உலகம் பொய்யல்ல; இந்த உலகில் உள்ள காடுகள் பொய்யல்ல; மலைகள் பொய்யல்ல; ஆறுகள், நீர்நிலைகள் பொய்யல்ல; பொன், வெள்ளி, இரும்பு முதலிய உலோக வகைகள் பொய்யல்ல. இவைகள் எல்லாம் கண்ணெதிரே காணப்படும் உண்மையான பொருள்கள்தாம்.

இவ்வுலகிலே நடமாடும் விலங்குகள் பொய்யல்ல. வானத்தில் பறந்து திரியும் பறவையினங்கள் பொய்யல்ல; நாளுக்குநாள் பல அற்புதங்களைக் கண்டுபிடித்துச் செய்துவரும் மக்கள் பொய்யல்ல; அவர்கள் செய்யும் வேலைகளையும், அவைகளால் உண்டாகும் பலன்களையும் கேட்கின்றோம், பார்க்கின்றோம், அனுபவிக்கின்றோம். இவைகளைப் பொய் யென்று சொன்னால் யார்தான் ஒப்புக்கொள்ள முடியும்? நம்ப முடியும்?

நாம் வாழ்வது பொய்யல்ல. வாழ்விலே இன்ப துன்பங்களை நுகர்வது பொய்யல்ல. அப்படியிருந்தும் அறிஞர்கள், ஏன் இவ்வுலகைப் பொய்யென்று சொன்னார்கள்? இவ்வுலக வாழ்க்கை நிலையற்றவை, பொய்யானவை, மாயை என்று ஏன் சொன்னார்கள்? ஆன்றோர்கள், அறிவுள்ளவர்கள், ஆராய்ச்சி யுள்ளவர்கள், ஞானிகள் என்பவர்கள் எல்லாம் இப்படிச் சொல்லியிருப்பதற்குக் காரணம் என்ன? இதைத்தான் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நாம் காணும் பொருள்கள் அனைத்தும் நிலைத்திருப்பவை அல்ல. இன்றிருப்பனவெல்லாம் என்றோ ஒரு நாளில் அழிந்து போகக்கூடியனதாம். எத்தனையோ பொருள்கள் அழிந்து போவதைப் பார்க்கின்றோம். மக்கள் பிறக்கின்றனர்; இறக்கின்றனர். விலங்குகள் பறவைகள் எல்லாம் பிறக்கின்றன, இறக்கின்றன. மலை கடலாகவும், கடல் மலையாகவும், நாடு காடாகவும், காடு நாடாகவும், நிலம் கடலாகவும், கடல் நிலமாகவும் மாறியிருக் கின்றன. இவைகள் சரித்திரங் கண்ட உண்மை.

இந்த உண்மையை வைத்துக் கொண்டுதான் இவைகள் மாயை- பொய்- என்று ஆன்றோர்கள் கூறினர். மக்களைத் திருத்துவதற்கே இப்படிக் கூறினர்.

இவ்வுலக வாழ்வு அழியாதது, உலக இன்பம் அழியாதது, நாம் அடையும் சுகம் என்றும் நிலைத்து நிற்கும் என்ற எண்ணம் மக்களிடம் வேரொடி விட்டால் அவர்கள் தன்னலம் பிடித்தவர்களாகி விடுவார்கள். பரோபகார சிந்தையே அவர்களிடம் பிறக்காது. எல்லாம் எமக்கே என்ற பேராசையுடனேயே எல்லாக்காரியங்களையும் செய்வார்கள். எல்லா மக்களும் இந்த நினைப்புடன் நடக்கத் தொடங்கிவிட்டால் மக்களிடம் இன்றுள்ள தன்மையே மாறிவிடும். ஒருவர்க்கொருவர் உதவி செய்வது- துன்புறுவோர்க்குத் துணை செய்து அவர்கள் தொல்லையைத் தணிப்பது- பிறருக்குத் தொல்லை கொடுக்காமல் நேர்மையான நெறியிலே வாழ்வது- என்ற மனிதத் தன்மையே மக்களிடமிருந்து மறைந்துவிடும்.

மக்களிடம் உள்ள மனிதத்தன்மை போய்விட்டால் மனித சமுதாய வாழ்வே சீர்குலைந்துவிடும். மனித வாழ்வுக்கும், மிருக வாழ்வுக்கும் எவ்வித வேற்றுமையும் இல்லாமல் போய்விடும். மனிதனை மனிதன் அடித்துத் தின்னும் காட்டு மிராண்டிகளாகத் தான் மனிதர்கள் வாழ்வார்கள். இந்த நிலைமை ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே உலக வாழ்வின் நிலையற்ற தன்மையை முன்னோர்கள் எடுத்துக் காட்டியிருக்கின்றனர்.

உலக இன்பம்- வாழ்வு- நிலையற்றது என்பதை உணர்ந்தால் தான் மக்கள் நேர்மையுடன் வாழ்வார்கள்; பேராசையின்றி வாழ்வார்கள்; பிறருக்குத் துன்பம் செய்யாமல் வாழ்வார்கள். இக்கருத்துடன்தான் உலக நிலையாமையை எடுத்துக் காட்டும் ஞானநூல்கள்- தத்துவ சாத்திரங்கள்- எல்லாம் பிறந்தன. இவ்வுண்மையை அருணகிரிநாதர் நன்றாக உணர்ந்தவர்.

மெய்யே எனவெவ் வினைவாழ் வைஉகந்து
ஐயோ அடியேன் அலையத் தகுமோ?
கையோ, அறிலோ, கழலோ முழுதும்
செய்யோம்! மயில்ஏ றியசே வகனே.

இவ்வாறு பாடியுள்ளார் அருணகிரிநாதர். இது கந்தரனுபூதிப் பாட்டு.

கைகளும், வேலும், பாதங்களும், உடல் முழுவதும் செந்நிறமாயிருப்பவனே! மயிலின்மீது ஏறிப் பவனி வரும் வீரனே! கொடுமையான செயல்களைச் செய்வதற்கு இடமான இவ்வுலக வாழ்வை என்றும் நிலைத்திருக்கும் உண்மையானது என்று நான் நம்புவதா? இந்நம்பிக்கை காரணமாக ஐயோ! நான் வீணாக அலைந்து திரிவதா? இப்படித் திரிவது மனிதப் பிறப்பெடுத்தற்குத் தகுதியாகுமா? என்பதே மேலே காட்டிய பாடலின் பொருள்.

இவ்வுலக வாழ்வை மெய்யென்று நம்பினால்- அழியாத இன்ப வாழ்வு என்று நினைத்தால்- நமது உள்ளம் நல்ல வழியில் நிற்காது. எத்தகைய கொடுமைகளைச் செய்தாவது இன்பத்தை அடைவதற்கான சாதனங்களைச் சேர்க்கத்தான் தூண்டும். அதனால் நாம் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் அலைவோம். இவ்வுண்மையை உணர்த்திற்று இச்செய்யுள். இதோ மற்றொரு பாடல்.

பாழ்வாழ் வெனும்இப் படுமா யையிலே
வீழ்வாய்; என, என் னைவிதித் தனையே.
தாழ்வா னவைசெய் தனதாம் உளவோ?
வாழ்வாய் இனி நீ மயில்வா கனனே!

இதுவும் கந்தரனுபூதிச் செய்யுள். இதிலும் உலக வாழ்வின் நிலையாமையை எடுத்துக் காட்டியிருக்கின்றார்.

மயில் வாகனத்தையுடைய முருகப் பெருமானே! அழிந்து போகக்கூடிய வாழ்க்கை என்னும் இந்தத் துன்பம் நிறைந்த பொய் வாழ்விலே என்னை வீழ்வாய் என்று கட்டளை இட்டாயே! உன் மனம் புண்படும்படி நான் தாழ்வான காரியங்களைச் செய்தது உண்டோ? அப்படி ஒன்றும் செய்ய வில்லை. ஆதலால் என்னை உய்வித்தால்தான் இனி நீ வாழ்வாய்! இன்றேல் வாழமாட்டாய்!

இது நிந்திப்பதுபோலப் பாடிய வாழ்த்துப் பாடல். இவ்வுலக வாழ்வையே முழுதும் நம்பி, அதில் கிடந்து துன்ப மடையாத வாழ்வை அருளவேண்டும் என்று முருகனைத் துதிக்கும் பாடலாகும்.

இறைவனை நம்புகின்றவர்கள் தீமை செய்வதற்கு அஞ்சுவார்கள்; இறைவன் தனது அன்பர்களுக்கு அருள் செய்ததாக வழங்கும் திருவிளையாடல்களை நினைப்பவர்கள் பிறரிடம் கருணை காட்டுவார்கள்; கொடியோர்களை இறைவன் தண்டித்தாக வழங்கும் வரலாறுகளை எண்ணுகின்றவர்கள் கொடுமை செய்வதற்குத் துணியமாட்டார்கள். இவர்கள் உலக வாழ்வின் நிலையின்மையையும் மறக்க மாட்டார்கள். ஆதலால் தான் தெய்வ சிந்தை வேண்டும்- தெய்வத்தை மறவாமல் வாழ வேண்டும்- என்று முன்னோர்கள் மொழிந்தனர்; பாடினர்; வலியுறுத்தினர். இவ்வுண்மையை அருணகிரிநாதரும் வலியுறுத்தி யிருக்கின்றார்.

கலை கற்கினும்என்? கவி பாடினும்என்?
நிலை கற்கினும்என்? நினைவந்து உணராக்
கொலை கற்றிடுவோர் கொடு வஞ்சகமாம்
மலை கட்டறஎன்று அருள்வாய் குகனே!

இப்பாடலில் மேலேகூறிய உண்மையைக் காணலாம். இதுவும் கந்தரனுபூதிப் பாடல்தான்.

குகப் பெருமானே! உன்னை வந்து அடுத்து, உன் பாதத்தைப் பணிந்து வாழாதவர்கள் நன்மை தீமைகளை அறிய மாட்டார்கள். அவர்கள் பிறரைத் துன்புறுத்தும் கொலைச் செயல்களைத்தான் கற்பவர்கள் ஆவார்கள். உன்னை உள்ளத்தில் எண்ணிப் பணியாத இவர்கள் பல வகையான சாத்திரங்களையும் கற்றால்தான் என்ன பயன்? பலவகைப்பட்ட பாடல்களைப் பாடினாலுந்தான் என்ன பயன்? உடலை உறுதி செய்வதற்கு, உள்ளத்தை ஒரு நிலையில் நிறுத்தும் யோக நிலையைக் கற்றால் தான் என்னபயன்? ஆதலால், கொடிய வஞ்சனைகளைச் செய்வதற்குக் காரணமான- இவ்வுலக வாழ்வு மெய்யென்று நம்பும் அறியாமையாகிய பிணிப்பு- தனை- பந்தம்- அறுந்து தொலையும்படி அருள் புரிவாய்! என்றுதான் எனக்கு இவ் வருளைப் புரிவாயோ! இதுவே மேலே காட்டிய பாடலின் பொருள்.

மேலே எடுத்துக்காட்டிய கந்தரனுபூதிப் பாடல்கள் மூன்றும், உலக வாழ்வின் உண்மையை உணர்த்தின. உலக வாழ்வின் இயல்பை அறிந்தால்தான மக்கள் நல்வழியிலே நடப்பார்கள். மனிதத் தன்மையுடன் நடந்து கொள்ளுவார்கள் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பன. அருணகிரியாரின் அருட் பாடல்கள் இத்தகைய இயற்கை உண்மைகள் பலவற்றை எடுத்து ரைக்கின்றன. அவர் பாடல்களைப் படிப்போர் உண்மைகள் பலவற்றை உணரலாம்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 1 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !