
அருணகிரியார் – குருபரர் அறிவுரைகள்
சாமி சிதம்பரனார்
15. வறுமையின் கொடுமை
செல்வமில்லாமல் – வாழ்வதற்குப் போதுமான சாதனங்கள் இல்லாமல்- துன்பப்படுவதும் வறுமைதான். ஏராளமான செல்வங்கள் இருக்கின்றன; வாழ்க்கையைத் தட்டுத் தடங்கலின்றி இன்பமாக ஓட்டுவதற்கான சாதனங்கள் எல்லாம் இருக்கின்றன; இருந்தும் சமாதானத்துடன் வாழ முடியாமல் சீரழிகின்றனர்; இன்பத்துடன்- மகிழ்ச்சியுடன்- வாழத் தெரியாமல் அல்லற்படுகின்றனர். வாழ்க்கையைத் திட்டமிட்டு நடத்தக் கூடிய அறிவும் ஆற்றலும் இவர்களிடம் இல்லை. இந்த அறிவு வறுமைதான் எல்லா வசதிகளையும் பெற்றிருக்கும் இவர்கள் தொல்லைப் படுவதற்குக் காரணம்.
ஆகவே, செல்வம் இன்மையும் வறுமைதான்; அறிவின்மையும் வறுமைதான். ஏழை என்ற தமிழ்ச் சொல்லே இவ்வுண்மையை விளக்கும். ஏழை என்ற சொல்லுக்கு வறியவன் என்ற பொருளும் உண்டு. அறிவில்லாதவன் என்ற பொருளும் உண்டு. செல்வமற்றவர்களும் வாழ்விலே பல துன்பங்களுக்கும் ஆளாவார்கள். அறிவற்றவர்களும் வாழ்விலே பல வேதனைகளுக்கு ஆளாகித்தான் தீருவார்கள். இவ்வுண்மைகளை எவரும் மறுக்க முடியாது.
வாழ்வதற்கு வசதியற்ற வறுமையின் கொடுமையை அதனால் உண்டாகும் துன்பங்களை- அருணகிரிநாதர் விளக்கமாகப் பாடியிருக்கிறார்.
வடிவும், தனமும், மனமும், குணமும்
குடியும், குலமும், குடிபோ கியவா!
அடிஅந் தம்இலா அயில்வேல் அரசே!
மிடிஎன்று ஒருபாவி வெளிப் படினே.
இதுவே அந்த அருமைச் செய்யுள். இது கந்தரனுபூதியில் காணும் செய்யுள். இதன் பொருளைக் காண்போம்.
பிறப்பும் இறப்பும் இல்லாத முருகனே! கூர்மையான வேற்படையைக் கொண்ட அரசே! வறுமை என்ற ஒரு பாவி என்னிடம் தோன்றியதனால் நான் படும் தொல்லைகளுக்கு- துயரங்களுக்கு – அளவேயில்லை. என்னுடைய வடிவமே- உருவமே- அழகே – சிதைந்து விட்டது. என்னிடம் கொஞ்சம் நஞ்சம் மிஞ்சியிருந்த செல்வமும் போய்விட்டது. என் மனமும் கெட்டுப் போய் விட்டது. என் மனத்திலிருந்த இரக்கம் முதலிய நல்ல குணங்களும் ஒழிந்துவிட்டன. நான் பிறந்த குடிப் பெருமையும் அழிந்துவிட்டது. எனது குடும்பப் பரம்பரைப் பெருமையையும் யாரும் மதிப்பதில்லை. அதுவும் போய் விட்டது. வறுமையென்னும் பாவியால் இவைகள் எல்லாம் என்னை விட்டுக் குடிபெயர்ந்து விட்டனவே! இது என்ன வியப்பு! என்பதே மேலே காட்டிய செய்யுளின் பொருள்.
அருணகிரிநாதர், வறுமையால் தான் பட்ட துன்பத்தை முருகனிடம் இவ்வாறு முறையிட்டார். வறுமையையும், அதனால் அடைந்த துன்பத்தையும் தன்மேல் ஏற்றிக் கூறினார். இதன் மூலம் பொதுமக்களுக்கு வறுமையின் கொடுமையை விளக்கினார். வறுமையின்றி வாழ முயற்சியுங்கள் என்ற அறிவுரையையும் இச் செய்யுளால் மறைமுகமாகக் கூறினார்.
மற்றொரு திருச்செய்யுள் அறிவு வறுமையின் செயலை எடுத்துக் காட்டுகின்றது. அதுவும் கந்தரனுபூதியில் காணும் செய்யுள்தான்.
கரவா கியகல் வியுளார் கடைசென்று
இரவா வகைமெய்ப் பொருள்ஈ குவையோ!
குரவா! குமரா! குலிசா யுத! குஞ்
சரவா! சிவயோ கதயா பரனே!
இது அறிவின்மை- ஞானம் இன்மை- என்னும் வறுமை யைப் போக்கும்படி இரந்து பாடிய பாடல். இதன் பொருளைக் காண்போம்.
குருநாதனே! என்றும் அழியாத இளமையுடன் இருப்பவனே! வச்சிராயுதத்தை உடையவனே! பிணிமுகம் என்னும் யானையை ஊர்தியாகக் கொண்டவனே! சிவ யோகமுள்ளவனே! இரக்கத்திற்கு வாழ்விடமாக இருப்பவனே! என்னுடைய ஞானமின்மை என்னும் வறுமையை ஒழித்தருள வேண்டுகின்றேன். உண்மைப் பொருளைச் சொல்லாமல் ஒளிக்கின்ற வஞ்சகக் கல்வியாளர்கள் பலர் உண்டு. அவர்களின் வீட்டு வாசலிலே நான் சென்று, அவர்களிடம், எனக்கு உண்மைப் பொருளை உபதேசியுங்கள் என்று இரவாதபடி- கெஞ்சாதபடி- எனக்கு அருள் புரிய வேண்டும்; உண்மை ஞானத்தை உபதேசித்தருள வேண்டும்; எனக்கு என்றுதான் உபதேசம் செய்தருள்வாயோ? இதுவே மேலே காட்டிய செய்யுளின் பொருள்.
தனக்கு உண்மையான அறிவைத் தந்தருளும்படி இப் பாடலின் மூலம் முருகனை வேண்டினார் அருணகிரிநாதர். உண்மைகளைக் கண்டறிந்து அதன்வழி ஒழுகும் ஞானமாகிய செல்வத்தால் சாந்தியுண்டு; சமாதானம் உண்டு; உள்ளத்துக்கு ஆறுதல் உண்டு. ஆதலால்தான் ஞானத்தை அருளும்படி முருகனை வேண்டினார்.
மற்றொரு செய்யுளிலே மனவேதனைக்குக் காரணமாயி ருப்பவை எவை எவை உண்டோ, அவைகளையெல்லாம் தீர்த்தருள வேண்டும் என்று முறையிடுகின்றார்.
எந்தா யும்எனக்கு அருள்தந் தையும்நீ!
சிந்தா குலம்ஆ னவைதீர்த்து எனையாள்!
கந்தா! கதிர்வேலவனே! உமையாள்!
மைந்தா! குமரா! மறைநா யகனே!
இதுதான் அச் செய்யுள். இதுவும் கந்தரனுபூதிச் செய்யுள் தான். இச்செய்யுளின் பொருள் கீழ்வருவது:-
கந்தனே! ஒளி வீசும் வேலாயுதத்தை உடையவனே! உமாதேவியின் மைந்தனே! என்றும் மாறாத இளமையுடன் இருப்பவனே! நான்கு வேதங்களுக்கும் தலைவனாயிருப்பவனே! எனக்குத் தந்தையும் நீதான்; என்னிடம் அன்பு காட்டும் தாயும் நீயேதான். மைந்தன் கவலையை- துன்பத்தைத் தீர்ப்பது தந்தை தாயார் கடமை அல்லவா? பொறுப்பல்லவா? மைந்தன் முதலில் தனது துயரத்தைத் தந்தை தாயாரிடம் சொல்லிக் கொள்ளாமல்-முறையிடாமல் – வேறு யாரிடந்தான் முறையிடுவான்? ஆதலால் நான் உன்னிடம் முறையிடுகின்றேன். என் மனத் துயருக்குக் காரணமானவைகளையெல்லாம் தீர்த்தருள்வாய்! என் மனத் துயருக்குக் காரணம் பொருள் வறுமையானாலும் சரி, அறிவு வறுமையானாலும் சரி, வேறு எதுவானாலும் சரி- அவைகளை நீக்கி எனக்கு அருள் புரிவாயாக என்பதே மேலே காட்டிய பாடலின் பொருள்.
இப்பாடல் மூலம், தனது மனத்துயருக்குக் காரணமான செல்வ வறுமை, அறிவு வறுமை இரண்டையும் தீர்க்கும்படி வேண்டினார்.
மேலே காட்டிய மூன்று பாடல்களும், செல்வத்துடன் வாழவேண்டும், அறிவுடன் வாழவேண்டும் என்ற உண்மையை உணர்த்தின. உள்ளத்திலே உறுதியுள்ளவர்கள் இவ்வறுமைத் துன்பங்கள் தம்மிடம் அணுகாமல் செய்துகொள்ள முடியும். முருகனை வேண்டுவது உள்ளத்தில் உறுதி நிலைப்பதற்கு ஒரு கருவியாகும்.



