
அருணகிரியார் – குருபரர் அறிவுரைகள்
சாமி சிதம்பரனார்
18. முருகனிடம் முறையீடு
குமரகுருபரர் முதலில் பாடிய பிரபந்தம் கந்தர் கலிவெண்பா. இது திருச்செந்தூர் முருகனைப் போற்றிப் பாடிய நூல். 244 அடிகளைக் கொண்ட ஒரே செய்யுளால் ஆனது. இந்நூலில் முருகன் பெருமை, அவனது திருவிளையாடல்கள் எல்லாம் கூறப்படுகின்றன. முருகனுக்குப் பரத்துவம் கூறப்படுகின்றது. திருமுருகாற்றுப் படையைப் போல இந்நூலையும் நாள்தோறும் பாராயணம் பண்ணுவோர் உண்டு. இந்நூலைப் பாராயணம் பண்ணுவோர் கல்வியிலே தேர்ச்சி பெறுவார்கள் என்று நம்புகின்றனர்.
இந்நூலின் இறுதியிலே, குமரகுருபரர் முருகனிடம் கல்வியையும் அருளையும் வேண்டி முடிக்கிறார். அவ்வேண்டு கோளைப் படிக்கும்போது, மனிதன் எப்படி வாழ வேண்டும்? எப்படி வாழ்கின்றவன் சிறந்த மனிதன்? – என்ற முடிவைக் காணலாம்.
முருகப் பெருமானே! நீ எனக்கு, நான் பார்க்கும் இட மெல்லாம் நின்று காட்சியளிக்க வேண்டும். பச்சை நிறமுள்ள மயில் வாகனத்தின்மேல் வந்து காட்சி தர வேண்டும்; பன்னிரண்டு வலிய புயங்களுடன் தோன்றுக; பகைவரை அழித்து, அன்பர் களின் அச்சத்தைப் போக்கும் வேற்படையுடன் வருக; கச்சை அணிந்த இடை, சிறிய அடிகள், சிவந்த பன்னிரண்டு கைகள், கருணை காட்டும் பன்னிரண்டு விழிகள், அழகிய முகங்கள் ஆறு, கதிரொளி வீசும்படி அணிந்திருக்கின்ற ஆறு திருமுடிகள்- இவைகளுடன் காட்சி தரவேண்டும்; நான் பார்க்கின்ற எல்லாத் திசைகளிலும் வந்து நின்று காட்சி அளிக்க வேண்டும்.
இவ்வாறு உனது அலங்காரத் திருஉருவுடன் தோன்றி எனது துன்பங்களையெல்லாம் பொடியாக்கி அழிக்க வேண்டும்; நான் கேட்கும் வரங்களையெல்லாம் தந்தருள வேண்டும்; என் உள்ளத்தில் புகுந்து உல்லாசமாக வாழ வேண்டும்; என் உள்ளத்திலிருந்து எனக்கு நீ அருள் செய்ய வேண்டியவை பல உண்டு. அவைகளையும் சொல்லி விடுகின்றேன்.
பலவிதமான கவிகளைப் பாடும் வல்லமை அளிக்க வேண்டும்; ஆசு கவி, மதுர கவி, சித்திர கவி, வித்தார கவி என்னும் நால்வகைப் பாடல்களையும் பாடும் கவித் திறமை அளிக்க வேண்டும். அட்டாவதானம் செய்யும் திறமையையும் அருள் செய்யவேண்டும். இவற்றுடன் உனது பெருமையைப் பேசும் இயல்புள்ள பல நூல் தொகுதிகளையும், பல காவியத் தொகுதிகளையும் நான் கற்றுத் தேறவேண்டும்; ஒலிக்கு அடையாளமான எழுத்தைப் பற்றிக் கூறும் எழுத்திலக்கணம், சொல் இலக்கணம், பொருள் இலக்கணம், யாப்பிலக்கணம், அணியிலக்கணம் ஆகிய ஐவகை இலக்கணங்களையும் நான் கற்க வேண்டும். இவ்வாறு கற்றுச் சிறந்த தமிழ்ப் புலமை பெரும்படி எனக்கு அருள் புரியவேண்டும்.
புலமை மட்டும் வந்துவிட்டால் போதாது; கற்றவற்றுக்குத் தக நடந்து கொள்ளும் ஒழுக்கமும் வேண்டும். ஆதலால் என்னை நன்னெறியிலே நடக்க அருள் செய்யவேண்டும். நல்வினை, தீவினைகளால் வரும் பிறவித் துன்பத்தை நீக்கியருள வேண்டும்; காமம், வெகுளி, மயக்கம் என்று சொல்லப்படும் மூன்று பெருங் குற்றங்களும் என்னை அணுகாமல் அருள் செய்யவேண்டும்.
தாம் என்ற மமதையை ஒழித்து, உன் பெருமையையே ஆராய்ந்து கொண்டிருக்கின்ற பழமையான அடியார்களுடன் என்னைச் சேர்த்தருள வேண்டும்; அழியாத உயர்ந்த இன்பத்தை நான் துய்க்கும் படி- அனுபவிக்கும்படி- செய்யவேண்டும்.
உனது அருளுக்கு இலக்காகாமல் எட்டி நிற்கும் இரக்க மற்றவனாகிய எனக்கும் உனது மெல்லிய தாமரை போன்ற பாதங்களைக் காட்டி என்னை ஆட்கொண்டருள வேண்டும்; என் கண் முன்னே நின்று காட்சியளித்து என்னை ஆண்டு அருள வேண்டுகின்றேன்.
இதுவே குமரகுருபரர் முருகனிடம் வேண்டிக் கொள்ளும் முறையீடு. இவ்வேண்டுகோளில், கல்வி, ஒழுக்கம், பக்தி மூன்றையும் அருளும்படி முருகனிடம் முறையிடுவதைக் காணலாம். குருபரர் வாழ்க்கை வரலாறு இம்மூன்றிலும் அவர் தலைசிறந்து வாழ்ந்தார் என்பதைக் காட்டுகின்றது. மேலே காட்டிய பொருளமைந்த கந்தர் கலிவெண்பாவின் அடிகள் கீழ்வருவன:-
பச்சைமயில் வாகனமும், பன்னிரண்டு திண்தோளும்,
அச்சம் அகற்றும் அயில்வேலும்- கச்சைத்
திருஅரையும், சீறடியும், செங்கையும்,ஈராறு
அருள்விழியும், மாமுகங்கள் ஆறும்- விரிகிரணம்
சிந்தப் புனைந்த திருமுடிகள் ஓர் ஆறும்,
எந்தத் திசையும் எதிர்தோன்ற- வந்து, இடுக்கண்
எல்லாம் பொடிபடுத்தி, எவ்வரமும் தந்து, புகுந்து
உல்லாச மாக உளத்துஇருந்து, -பல்விதமாம்
ஆசுமுதல் நால்கவியும், அட்டாவ தானமும், சீர்ப்
பேசும்இயல் பல்காப் பியத்தொகையும், -ஓசை
எழுத்துமுத லாம்ஐந்து இலக்கணமும் தோய்ந்து,
பழுத்த தமிழ்ப்புலமை பாலித்து, – ஒழுக்கமுடன்
இம்மைப் பிறப்பில் இருவா தனைஅகற்றி,
மும்மைப் பெருமலங்கள் மோசித்துத் – தம்மைவிடுத்து
ஆயும் பழய அடியார் உடன்கூட்டித்,
தோயும் பரலோகம் துய்ப்பித்துச் – சேய
கடியேற்கும் பூம்கமலக் கால்காட்டி ஆட்கொண்டு
அடியேற்கு முன்னின்று அருள்.
இவைகளே கந்தர் கலிவெண்பாவின் இறுதியடிகள். இவ்வடிகளில் அமைந்துள்ள பொருள் மேலே எடுத்துக் காட்டப்பட்டது.



