நாயகப் பெருமான்
நாரா. நாச்சியப்பன்

27. பாவிக்காகச் செய்த பிரார்த்தனை

முஸ்லிம்களிலே முனாபிக்கீன்கள் என்று ஒரு கூட்டத்தார் இருந்தார்கள். முனாபிக்கீன்கள் என்றால் வஞ்சகர்கள் என்று பொருள். இவர்கள் இஸ்லாத்திலே சேர்ந்து கொண்டு உள்ளுக்குள் இருந்தபடியே இஸ்லாத்திற்குத் தீங்கு செய்து கொண் டிருந்தார்கள். பகைவர்களுக்குக் கையாட்களாகவும். முஸ்லிம்களிடையே பிரிவினை செய்பவர்களாகவும் விளங்கினார்கள். பலவகையான தந்திரங்களைக் கையாண்டும் இவர்களால் இஸ்லாத்தை அழிக்க முடியவில்லை.

இஸ்லாமியரை நிரந்தரமாய்ப் பிரித்துவைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், இக்கூட்டத்தார் ஒருமுறை தனிப் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டினார்கள். தபூக் சண்டைக்குப் பெருமானவர்கள் புறப்பட்டுக் கொண்டிருக்கும் போது இக்கூட்டத்தினர் வந்து புதிய பள்ளி வாசலில் தொழுகை நடத்திவைக்குமாறு வேண்டிக் கொண்டார்கள். சண்டை முடிந்தபின் வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி நாயக் மவர்கள் புறப்பட்டுச் சென்றுவிட்டார்கள்.

ஆண்டவன் அருளால் பெருமான் அவர்கள் இப்புதிய பள்ளிவாசல் கட்டப் பெற்றதன் நோக்கத்தை அறிந்தார்கள். முஸ்லிம்களுக்குத் தீங்கு செய்ய வேண்டும் சென்ற தீய கருத்தில் எழுப்பப் பெற்ற இப்பள்ளி வாசலைத் தீயிட்டுக் கொளுத்தி விடுமாறு பெருமானவர்கள் கட்டளையிட்டார்கள். அவ்வாறே அது எரித்துச் சாம்பலாக்கப்பட்டது.

அப்துல்லா இப்னு உபை என்பவன் இந்த முனாபிக்கீன்களின் தலைவனாக இருந்தான். அவன் கடைசியில் ஹிஜிரி ஒன்பதாம் ஆண்டில் கடுமையான நோய்க்கு ஆளானான். பிழைத்து எழக்கூடும் என்ற நம்பிக்கையே யில்லாத அளவு அவனை நோய் ஆட்கொண்டு விட்டது. கடைசிக் காலத்தில் தான் அவனுக்குப் புத்திவந்தது. அவன் மகன் அப்துல்லா உண்மையான முஸ்லிம். இஸ்லாத்திலும் அதன் திருத் தூதரிடத்திலும் உண்மையான நம்பிக்கை கொண்டவர். இரண்டு வேண்டுகோள்களுடன் உபை தன் மகன் அப்துல்லாவைப் பெருமானிடம் அனுப்பி வைத்தான்.தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றத் தனயன் பெருமானை நாடிச் சென்றார்.

பெருமானவர்களிடம் சாவின் பிடியில் அகப்பட்டுக் கொண்டு இருந்த தன் தந்தையின் வேண்டு கோள்களை உருக்கமாகக் கூறினார் அப்துல்லா. பெருமான் இரக்கத்தோடு அவ்விண்ணப்பத்தைக் கேட்டருளினார். உபை இறந்தபின் அவன் பிணத்தை போர்த்தி அடக்கம் செய்யப் பெருமான் அவர்கள் தம் மேலாடையைக் கொடுக்க வேண்டும் என்பது முதல் வேண்டுகோள். பெருமான் அதற்கு இணங்கித் தம் சட்டையைக் கழற்றிக் கொடுத்தார். உபை இறந்த பின் பெருமான் அவர்களே நேரில் வந்து அவனுக்காக மரணப் பிரார்த்தனை நடத்த வேண்டும் என்பது இரண்டாவது வேண்டுகோள். அவ்வாறே தான் வந்து தொழுகை நடத்துவதாக பெருமான் வாக்குக் கொடுத் தார். அப்துல்லா மனநிறைவோடு திரும்பிச் சென்று விட்டார்.

உபை இறந்தபின் பெருமானுக்குச் செய்தியனுப்பினார்கள். அவனுக்காக மரணப் பிரார்த்தனை செய்யப் பெருமான் அவர்கள் புறப்பட்டார்கள்.

அப்போது ஹஸரத் உமர் அவர்கள் பெருமானின் சட்டை நுனியை ஆத்திரத்தோடு பிடித்துக் கொண்டார்கள்.

“இஸ்லாத்தின் பகைவன் அவன், தாங்கள் ஏன் அவனுக்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டும்?” என்று கேட்டார் உமர்.

பெருமான் அவர்களுக்குப் பகைவன் நண்பன் என்ற வேறுபாடு கிடையாது. “உமர், நான் பிரார்த்தனை செய்யத் தான் போகிறேன்!” என்று உறுதி யான குரலில் கூறினார்கள்.

ஹஸரத் உமர் அவர்களுக்கு ஆத்திரம் அதிகமாகியது.

“அந்த வஞ்சகர்களுக்காக நீங்கள் மன்னிப்புக் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி. ஆனால் எழுபது தடவை நீங்கள் மன்னிப்புக் கேட்டாலும் அல்லா அவர்களை மன்னிக்கப் போவதில்லை. திருக்குர் ஆனிலேயே இவ்வாறு தான் அருளப்பட்டுள்ளது” என்று எடுத்துரைத்தார் ஹஸரத் உமர்.

“அவர்களுக்காக மன்னிப்புக் கேட்கவோ, கேட்காமல் இருக்கவோ ஆண்டவன் எனக்கு உரிமை கொடுத்திருக்கிறார். நான் அவர்களுக்காக மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன். என் உரிமையை நான் நிறைவேற்றுவேன். மன்னிப்பதும் மன்னிக்காமல் இருப்ப தும் ஆண்டவன் விருப்பம்!” என்று கூறி விட்டு நபி பெருமான் புறப்பட்டுச் சென்றார்.

உபைக்காக மரணப் பிரார்த்தனை செய்த அன்றைய தினம் பெருமானின் அருள் உள்ளத்தை உணர்ந்து ஆயிரம் முனாபிக்கீன்கள் உண்மையான முஸ்லிம்கள் ஆனார்கள்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *