நாயகப் பெருமான்
நாரா. நாச்சியப்பன்

6. அன்பின் அடிமை ஆனவர்

போரில் பிடிபட்டவர்களை அடிமை யாக்குவதும், அவ்வடிமைகளைச் சந்தைகளில் விற்பதும் அரபு நாட்டில் அக்காலத்தில் வழக்கமாக இருந்தது. இவ்வாறு ஒரு போர்க்கைதியாகப் பிடிபட்ட ஸைத் இப்னு ஹாரிஸ் என்பவர் சந்தையொன்றில் அடிமையாக விற்கப்பட்டார். உக்கால் என்ற அச்சந்தைக்கு ஹக்கிம் இப்னு ஹிஸ்ஸாம் என்பவர் சென்றிருந்தார். அவர் ஸைதை விலைக்கு வாங்கினார். தம் அத்தையாகிய கதீஜா நாயகி அவர்களுக்கு அந்த அடிமையை அவர் பரிசாகக் கொடுத்தார். நாயகியாரோ தம் நாயகராகிய நாயகப் பெருமானிடம் அவ்வடிமையை ஒப்படைத் தார்.

பெருமானவர்கள், தம்மிடம் அடிமையாக ஒப்படைக்கப்பட்ட ஸைத் அவர்களை அழைத்து, “ஐயா, உமக்கு விடுதலையளிக்கிறேன். விருப்பம் இருந்தால் இங்கே என்னுடன் இருக்கலாம். இன்றேல் உம் நோக்கம் போல் எங்கு வேண்டுமானாலும் போகலாம். இனி நீர் யார்க்கும் அடிமையல்ல” என்று கூறினார்.

அன்பு மிக்க பெருமானை விட்டு அகல ஸைத் அவர்களுக்கு மனமில்லை. பெருமானுடனேயே தங்கி விட்டார்.

தம் மகன் அடிமையாக்கப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்ட அவருடைய தந்தை ஹாரிஸ் என்பவர், அவரைத் தேடிக்கொண்டு புறப்பட்டு வந்தார். பணங் கொடுத்து விடுதலை செய்வதற்காக வந்த அவர், தம் மகன் முன்பே விடுதலை பெற்றுவிட்ட செய்தியறிந்து மிக்க உவப்படைந்தார்.

தன் மகனைக் கண்டு, தன்னுடன் வீட்டுக்கு வருமாறு அழைத்தார். ஆனால், ஸைத் தன் தந்தையுடன் செல்ல மறுத்து விட்டார்.

“தந்தையே, நான் இனி என்றென்றும் பெருமானின் அடிமையாகி விட்டேன். அவர்களுடைய உயர்ந்த குணங்களும் மிகுந்த அன்பும் என்னை ஆட் கொண்டு விட்டன. நான் விலைக்குப் பெற்ற அடிமையல்ல; அன்பின் அடிமை” என்று கூறித் தன் தந்தையைத் திருப்பியனுப்பி விட்டார்.

தன்பால் அன்பும் மதிப்பும் வைத்திருந்த ஸைத் அவர்களுக்குப் பெருமான் தன் அத்தை மகளையே திருமணம் செய்து கொடுத்து நல் வாழ்வு பெறச் செய்தார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *