
நாயகப் பெருமான்
நாரா. நாச்சியப்பன்
2. தேர்ந்தெடுத்த சிற்றப்பா
தாயும் தந்தையுமற்ற நிலையில் பெருமானவர்கள், தம் பாட்டனாராகிய அப்துல் முத்தலிப் அவர்களிடம் வளர்ந்து வந்தார்கள். அப்துல் முத்தலிப் அவர்கள் மூப்படைந்து வந்ததால் நாளுக்கு நாள் அவர்களுடைய உடல் நிலை தளர்ந்து வந்தது. எனவே, அநாதைக் குழந்தையாகிய பெருமான் அவர்கள் தக்க ஆதரவில் வளரத் தான் உயிருள்ள போதே ஏற்பாடு செய்ய வேண்டு மென்று கருதினார் அன்புப் பாட்டனார்.
அப்துல் முத்தலிப் அவர்கள், தாம் அருமை மைந்தர்கள் அனைவரையும் ஒருநாள் அழைத்து இது குறித்து ஆலோசனை செய்தார்கள்.
முதலில் அபூலஹப் எனும் மைந்தர் குழந்தையை வளர்க்கும் பொறுப்பைத் தாமே ஏற்றுக் கொள்வதாக மனமுவந்து கூறினார். ஆயினும் பெருமானவர்களை அவரிடம் ஒப்படைக்கப் பாட்டனாரின் உள்ளம் இசையவில்லை.
“மகனே, நீ பணக்காரன். பணக்காரர்களுக்கே இயல்பாயுள்ள கல்மனம் உன்னிடம் இருக்கக் காண்கிறேன். கண்டிப்பான உன் இயல்பினால், தாய் தந்தையற்ற இக்குழந்தை கண்கலங்க நேரிடுமென அஞ்சுகின்றேன். ஆதலால் உன்னிடம் இப் பொறுப்பை ஒப்படைக்க நான் விரும்பவில்லை” என்று அம் முதியவர் கூறிவிட்டார்.
இரண்டாவதாக ஹஸ்ரத் ஹம்சா அவர்கள், பிள்ளையை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள உடன்பட்டார்கள். அவரிடம் பெருமானவர்களை ஒப்படைக்கவும் அவருடைய பாட்டனாருக்கு மனம் வரவில்லை.
“மகனே, உனக்குப் பிள்ளைகளே யில்லை, ஆகையால் பிள்ளையின் அருமையை நீ உணர மாட்டாய், ஆகவே, இந்த அநாதைக் குழந்தையை உன்னிடம் ஒப்படைக்க நான் நினைக்க வில்லை” என்று கூறிவிட்டார் பெரியவர்.
அடுத்து ஹஸரத் அப்பாஸ் அவர்கள் முன்வந்த போது, அவரை நோக்கி அப்துல் முத்தலிப் இவ்வாறு கூறினார்.
மகனே, உனக்குப் பிள்ளைகள் அதிகம். அவற்றை வளர்த்துப் பாதுகாக்கவே உனக்குச் சரியாக இருக்கும். அத்தோடு, இந்தப் பிள்ளையையும் சேர்த்துக் கொண்டால், நீ எப்படி இதைக் கவனித்து வளர்க்கப் போகிறாய்?” என்று கேட்டு மறுத்து விட்டார்.
கடைசியாக, அபூதலிப் அவர்களின் முறை வந்தது. அவர் தன் தந்தையை நோக்கி, “தந்தையே, நான் பெரிய பணக்காரனுமல்லன்; பிள்ளைகள் இல்லாதவனு மல்லன்; அதிகப் பிள்ளைகள் பெற்றவனுமல்லன். ஆகவே, இவனை வளர்க்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைக்க வேண்டுகிறேன்” என்று பணிவுடன் கேட்டுக்கொண்டார்.
தன் உடன் பிறந்தார்களுக்குக் கூறிய பதிலையே தந்தையார் கூறிவிடுவாரோ என்ற பயம் அவர் உள்ளத்தில் இருந்தது.ஆனால் அப்துல் முத்தலிப் அவர்கள் அன்புடன் அவரை நோக்கி, “மகனே, என் ஆசையை நிறைவேற்றத் தகுதியுடையவன் நீ என்பதில் ஐயமில்லை. ஆயினும், குழந்தையின் கருத்தை யும் அறிந்து கொள்வோம்” என்று கூறிப் பெருமான வர்களை அழைத்தார்.
“கண்மணியே, எனக்கு வயது அதிகமாகி விட் டது. இன்னும் எத்தனை நாள் உயிருடன் இருப்பேன் என்று சொல்ல முடியாது. எனக்குப் பின் உன்னை வளர்க்கும் பொறுப்பை இவர்கள் ஏற்றுக் கொள்ள முன் வருகிறார்கள். இவர்களில் யாருடன் இருக்க உனக்கு விருப்பம்?” என்று பெருமானை நோக்கிக் கேட்டார் அவர்.
பெருமானவர்கள் சிரித்துக்கொண்டே சென்று அபூதலிப் அவர்களின் மடியில் அமர்ந்து கொண்டார்கள்.
இக் காட்சியைக் கண்டதும் அப்துல் முத்தலிப் அவர்களின் கண்களில் நீர் ததும்பியது. தன் அருமை மகனை நோக்கி, “அபூதாலிப், பாவமறியாத இக்குழந்தைக்குத் தந்தையின் அன்பு இப்படிப்பட்டதென்று தெரியாது. தாயையும் இவ்வளவு சிறுவயதிலேயே இழந்து விட்டது. ஒரு குறையும் வராமல் காப்பாற்றுவது உன் பொறுப்பு ” என்று கூறினார்கள்.
இந்த ஏற்பாடு நடந்த சில நாட்களுக்குப் பின் னர், அவர்கள் மன அமைதியுடன் தம் கண்களை மூடினார்கள்,
அபூதாலிப் அவர்கள் தம் தந்தைக்கு வாக்குக் கொடுத்த வண்ணமே, குழந்தையை என்றும் தம்முடன் வைத்துப் போற்றி வளர்த்து வந்தார்கள்.



