
நாயகப் பெருமான்
நாரா. நாச்சியப்பன்
25. வள்ளல் பெற்ற திருமகள்
எமன் மாநிலத்தில் தை என்ற கூட்டத்தார் வாழ்ந்து வந்தனர். அவர்கள் தூண்டுதலால் இஸ்லாத்திற்கு எதிர்ப்பாகக் கலகமும் குழப்பமும் ஏற்பட்டன. ஹஸரத் அலியவர்களைப் பெருமானவர்கள் அங்கு அனுப்பிக் குழப்பத்தை அடக்கி வரப் பணித்தார்கள்.
ஹஸரத் அலியவர்கள் வரும் செய்தி யறிந்து அம் மாநிலத்தின் தலைவனான அதி என்பவன் பயந்தோடி விட்டான். தலைவனற்ற அக்கூட்டத்தாரை எளிதில் அடக்கி, அவர்களில் பலரை அடிமையாக்கிக் கொண்டும் பொருள்களைக் கைப்பற்றிக் கொண்டும் மதீனாவிற்கு வந்து சேர்ந்தார்கள்.
சிறைப்பட்டவர்களிலே அதியின் உடன் பிறந்தவளான ஸபானா என்ற மங்கையும் இருந்தாள். அவள் பெருமானவர்கள் முன் கொண்டுவந்து நிறுத்தப் பட்டவுடன், அவர்களை நோக்கி, “ஆண்டவனுடைய தூதரே, என் தந்தை இறந்துவிட்டார். என்னை ஆதரிக்க வேண்டிய உடன்பிறந்தவனோ ஓடிச் சென்றுவிட்டான். இந்நிலையில் என்னை மீட்பதற்கு யாரும் இல்லை. ஆகவே, தாங்கள் கருணைகூர்ந்து பொருள் எதுவும் எதிர்பாராமல் என்னை விடுதலை செய்ய வேண்டுகிறேன். தங்கள் கருணை ஒன்றையே நான் நம்பிக் கொண்டிருக்கிறேன்.
என் தந்தை ஹாத்திம் கருணையுள்ளம் படைத்தவர். சிறைப்பட்ட எத்தனையோ பேரை அவர் பணம் கொடுத்து விடுதலை செய்திருக்கிறார். பெண்களின் மானத்தைப் பாதுகாத்திருக்கின்றார். ஏழைகள் பலரைக் காப்பாற்றியிருக்கிறார். துன்பப்பட்டவர்களுக்கு ஆதரவளித்திருக்கிறார். இல்லை என்று வந்தவர்களுக்கு இருப்பதை அள்ளிக் கொடுத்திருக்கிறார். ஆனால், அவர் மகளான என்னைக் காப்பதற்கு யாருமில்லை” என்று கலங்கிக் கண்ணீர் உகுத்தாள்.
ஹாத்தீம் என்பவரைப் பற்றி அரபு நாடு முழுவதுமே அறிந்திருந்தது. அவர் பெரும் வள்ளல். அவரைப் பற்றிப் பெருமானாரும் அறிந்து வைத்திருந் தார். எனவே, அந்த வள்ளலின் அருமைச் செல்வியை நோக்கி அவர் ஆதரவுடன், “பெண்ணே, ஒரு முஸ்லிமுக்கு இருக்க வேண்டிய நல்ல குணங்கள் அனைத்தும் உன் தந்தையிடம் இருந்தன. முஸ்லிம் அல்லாதவரின் ஆத்மாவுக்காக பிரார்த்தனை செய்ய எனக்கு அனுமதியிருந்தால் நான் அவர் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனைப் பிரார்த்தித்திருப்பேன். அவ்வளவு நல்ல மனிதர் அவர் என்று கூறி முஸ்லிம்களை நோக்கி இரக்க முள்ளவர்களை ஆண்டவன் நேசிக்கிறான். அவர்களுக்குப் பரிசும் வழங்குகிறான். இதோ, இரக்கமுள்ள ஹாத்திமின் மகளான இப்பெண் விடுதலையாகி விட்டாள்” என்றார்கள்.
பெருமான் அவர்களின் கருணையை அறிந்த அந்தப் பெண் மீண்டும் அவர்களை நோக்கி, “என் உறவினர் அனைவரும் சிறையில் இருப்பதால், என்னையும் சிறையிலேயே வைத்திருக்க வேண்டுகிறேன். அவர்களை வெட்டிக் கொல்வதாக இருந்தால் முதலில் என் தலையை வெட்டுமாறு கட்டளையிட வேண்டுகிறேன். ஏனெனில், என் உறவினர் இறந்து போனபின் நான் மட்டும் வாழ்ந்திருக்க விரும்பவில்லை” என்று கூறினாள்.
இதைக் கேட்ட பெருமான் அவர்கள் பெருங் கருணைகொண்டு, பிடிபட்டதைக் கூட்டத்தார் அனைவரையுமே விடுதலை செய்ய ஆணையிட்டார்கள்.
திரும்பி வந்த தன் சகோதரியின் வாயிலாகப் பெருமானவர்களின் உயர் குணங்களைக் கேட்டறிந்த அதி, அவளுடன் மதீனாவிற்கு வந்து பெருமானைக் கண்டு அவர்கள் வாழ்த்தைப் பெற்று இஸ்லாத்தில் சேர்ந்து கொண்டான்.



