நாயகப் பெருமான்
நாரா. நாச்சியப்பன்

11. இருட்டுக் குகையில் இறைவனும் இருந்தான்

பெருமானவர்கள் நபியாகிப் பதின்மூன்றாம் ஆண்டு தொடங்கியது. இறைவன் அவ்வாண்டில் மதினாவிற்குப் போகும்படி கட்டளை பிறப்பித்தான். இக் கட்டளை பிறந்ததும், பெருமான் அவர்கள் ஹஸரத் அபூபக்கர் அவர்களின் வீட்டுக்குச் சென்று செய்தியை அறிவித்தார்கள். அவரும் பெருமானுடன் வருவதாகக் கேட்டுக் கொண்டார். நபி அவர்களும் சம்மதித்தார்கள்.

இந்நிகழ்ச்சி நடந்த இரு நாட்களுக்குப் பின்னர், அபூஜாஹில்லின் யோசனைப்படி அரபியர்கள், பெரு மானைக் கொல்வற்காக இரவில் அவர்கள் வீட்டைச் சூழ்ந்து கொண்டார்கள்.

அரபிகளிடையே ஒரு பழக்கம் இருந்தது. வீரர்கள் பெண்கள் வசிக்கும் வீடுகளுக்குள்ளே புகுந்து கலகம் விளைப்பதில்லை. எனவே, பெருமானவர்கள் வீட்டை விட்டு வெளியில் வரட்டும் என்று காத்திருந் தனர்.

பெருமான் தம் உயிருக்காக அஞ்சவில்லை. ஆனால், பெரும்பாலோர் நம்பிக் கொடுத்த பொருள்கள் அவர்களிடம் இருந்தன. அவற்றை யெல்லாம் திருப்பி ஒப்படைக்க வேண்டுமென்று கருதினார்கள். அதற்காக ஹஸரத் அலியவர்களைத் தம் வீட்டில் இருக்கச் செய்து அவர்கள் மட்டும் இரவில் வெளியேறினார்கள். அவர்கள் வெளியேறிய போது இறைவன் அருளால் வெளியில் காத்திருந்தவீரர்கள் கண்களுக்குத் தென்பட வில்லை. வீட்டை விட்டு வெளியேறிய பெருமான் ஹஸரத் அபூபக்கர் வீட்டுக்குச் சென்றார்கள்.

இருவரும் அங்கிருந்து புறப்பட்டு மூன்று கல் தொலைவில் உள்ள தெளர் என்னும் மலைக் குகையில் தங்கினார்கள். அக் குகைக்குள் மூன்று நாள் வரை தங்கினார்கள்.

பெருமான் வீட்டைச் சூழ்ந்திருந்த அரபியர்கள் பொழுது விடிந்த பின், வீட்டில் பெருமான் இல்லாதது கண்டு ஏமாற்றமும் ஆத்திரமும் அடைந்தனர். எவ்வாறேனும் கண்டுபிடித்துக் கொன்று விடுவது என்ற உறுதியுடன் எல்லாத் திசைகளிலும் புறப்பட்டுச் சென்றனர்.

பெருமானையோ, ஹஸரத் அபூபக்கரையோ பிடித்துக் கொடுப்பவர்களுக்கு நூறு ஒட்டகங்கள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று விளம்பரப் படுத்தினார்கள். இதனால் பரிசுக்கு ஆசைப்பட்டுப் பலர் பெருமானைத் தேடத் தொடங்கினார்கள்.

அத் தீயவர்களில் சிலர் தெளர் மலைப்பக்கமாகவும் சென்றனர். அம்மலைக் குகையின் வாயிலை அணுகிய அவர்கள், பெருமான் அவர்கள் குகைக்குள் ஒளிந்திருக்கக் கூடும் என்று எண்ணினார்கள்.

வெளியில் ஆளரவங் கேட்ட ஹஸரத் அபூபக்கர் அவர்கள், “இங்கே நாம் இருவர் மட்டுமே இருக்கிறோம். அவர்கள் நம்மைக் கண்டால் கொன்று போட்டு விடுவார்கள்” என்று கூறினார். ஆனால், பெருமானோ, “பயப்படாதீர்! நம்மோடு ஆண்ட வனும் இருக்கிறான். அவன் நம்மைக் காப்பாற்றுவான்” என்று ஆறுதல் கூறினார்கள்.

உண்மையில் பகைவர்கள் குகை வாயிலுக்கு வந்த போது, வாயிலின் குறுக்கே ஒரு சிலந்திப் பூச்சி வலை கட்டியிருந்ததைக் கண்டார்கள். மனிதர்கள் குகைக்குள்ளேயிருந்தால், சிலந்திப் பூச்சியின் வலையைக் கலைக்காமல் உள்ளே போயிருக்க முடியாது என்று அவர்கள் எண்ணினார்கள். மேலும் குகைக்கு நேர் எதிரில் தாழ்ந்திருந்த ஒரு மரக் கிளையில் புறாக் கூடும், அதில் முட்டைகளும் இருந்தன. இக்காட்சி களைக் கண்டு அவர்கள் அந்த இருட்டுக் குகைக்குள் நுழைவது வீண் வேலையென்று கருதித் திரும்பிச் சென்றுவிட்டார்கள்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *