நாயகப் பெருமான்
நாரா. நாச்சியப்பன்

23. பெருமான் இருப்பதே பெரிது

ஹுனைன் சண்டையில் பல கைதிகள் பிடிபட் டார்கள். ஏராளமான பொருள்களும் கிடைத்தன. பிடிபட்டவர்களை மீட்டுக் கொண்டு போக அவர்களின் உறவினர்கள் வரக் கூடும் என்று சில நாட்கள் வரை எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் யாரும் வராது போகவே, பெருமானவர்கள் கைதிகளையும் பொருள்களையும் முஸ்லிம் படை வீரர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தார்கள்.

முதலில் ஐந்தில் ஒரு பங்கு பொருள் பொது நிதிக்காகவும், ஏழைகளுக்காகவும் ஒதுக்கப்பட்டது. மீந்த வற்றையே படைவீரர்களுக்குப் பங்கிட்டளித்தார்கள். அவ்வாறு பங்கிட்ட போது புதிதாக இஸ்லாத்தில் சேர்ந்த மக்காவாசிகளுக்கு மற்றவர்களுக்குக் கொடுத்ததைக் காட்டிலும் சிறிது அதிகமாகவே பங்குப் பொருள் கொடுத்தார்கள்.

அன்சாரி இனத்தைச் சேர்ந்த இளைஞர் சிலருக்கு இந்த நிகழ்ச்சி சிறிது மனக் கசப்பையளித்தது. அவர்கள் தங்களுக்குள் பலவாறாய்ப் பேசி மனம் சலித்துக் கொண்டார்கள். இச் செய்தி பெருமானவர்கள் காதுக்கு எட்டியது. அவர்கள் அன்சாரி இனத்தவர்களை அழைத்துக் கேட்டார்கள்.

“நான் குறைஷி வீரர்களுக்கு அளவிற்கு அதிகமாகக் கொடுத்தது நியாயமற்றதென்று நீங்கள் ஐயப் பட்டதுண்டா?””

“பெருமானவர்களே எங்களில் சில இளைஞர் கள் அவ்வாறு கூறியது உண்மைதான்” என்று முதியவர்கள் ஒப்புக் கொண்டார்கள்.

பெருமானவர்கள் அந்த அன்சாரிகளை நோக்கி உருக்கமான சில கேள்விகள் கேட்டார்கள்.

“தொடக்கத்தில் நீங்கள் வழி தவறிச் சென்று கொண்டிருந்தீர்கள். ஆண்டவன் உங்களை நேர் வழிக்குக் கொண்டு வந்தது என் மூலமாக அல்லவா?

“நீங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து ஒருவருக்கொருவர் பகைத்துக் கொண்டு வாழ்ந்த நிலையை மாற்றி ஆண்டவன் உங்களை ஒற்றுமைப் படுத்தியது என் மூலமாக அல்லவா?

“வறுமைக்காளாகியிருந்த உங்களை ஆண்ட செல்வர்களாய் உயர்த்தியது என் மூலமாக அல்லவா?”

பெருமான் அவர்கள் ஒவ்வொரு கேள்வியாகக் கேட்டுக் கொண்டுவர, அக் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் பதிலாக, “ஆண்டவனின் உதவியும், அவனுடைய திருத்தூதரின் உதவியும் யாவற்றினும் உயர்ந் தன” என்று அன்சாரிகள் கூறிக் கொண்டே வந்தார்கள்.

பெருமானவர்கள் இத்துடன் நில்லாது அவர்கள் மனத்தில் தைக்கும்படியாகச் சில கருத்துக்களையும் கூறினார்கள்.

“அன்சாரிகளே, என் கேள்விகளுக்கு நீங்கள் இப்படித் தான் விடை கூற வேண்டும் என்பதில்லை. வேறு மாதிரியாகவும் கூறலாம். “ஐயா, உங்கள் இனத்தவர்கள் உங்கள் மீது நம்பிக்கை கொள்ளாமல், உங்களைப் பொய்யர் என்று கூறித் துரத்திய போது நீங்கள் எங்களிடம் வந்தீர்கள். நாங்கள் உங்களை உண்மையானவராக ஏற்றுக் கொண்டோம். உதவியற்ற நிலையில் நீங்கள் எங்களை நாடி வந்தீர்கள். நாங்கள் உங்களுக்கு உதவி செய்தோம். ஒன்றுமில்லாமல் வந்த உங்களுக்கு எல்லாம் கொடுத்து நாங்கள் ஆதரவளித்தோம்.”

“அன்சாரிகளே, இவ்வாறு நீங்கள் விடையளித் தால், நான் அதை உண்மை என்று தான் ஏற்றுக் கொள்வேன். குறைஷிகளுக்கு நான் ஏன் அதிகமாகக் கொடுத்தேன். அவர்கள் புதிதாக முஸ்லிம் ஆனவர்கள்- இப்போது பெருந் துன்பத்திற்காளாகியிருக்கிறார் கள். அதிகமாகச் சில பொருள்களைக் கொடுத்து அவர் கள் துன்பத்தைச் சற்று ஆற்றலாம் என்று கருதினேன். அன்சாரிகளே, அவர்கள் ஆடுகளையும் ஒட்ட கங்களையும் தங்கள் வீடுகளுக்குக் கொண்டு செல்கிறார்கள். நீங்கள் இந்த முஹம்மதையல்லவா உங்களோடு வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? எந்த இக்கட் டான நேரத்திலும் நான் உங்களுடன் இருக்கிறேனே.

இது பெரிதில்லையா? ஆண்டவன் உங்கள் மீது கருணை கொண்டு உங்களையும் உங்கள் பிள்ளைகளை யும் பேரர்களையும் வாழ்த்தியருள்வாராக!

நபிநாயகமவர்களின் உருக்கமான சொற்கள் அன்சாரிகளை அழவைத்து விட்டன. “எங்களுக்கு முஹம்மது மட்டுமே போதும்!” என்று கூறித் தாரை தாரையாகக் கண்ணீர் வடித்தார்கள். கண்ணீரால் அவர்கள் தாடிகள் நனைந்து விட்டன.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *