
நாயகப் பெருமான்
நாரா. நாச்சியப்பன்
யாரே காப்பார்?
சண்டை ஒன்று முடிந்தவுடன்
தனியாய்ப் பெருமான் வரும் வழியில்
கொண்ட களைப்பு நீங்கிடவே
குளிர்ந்த நிழலில் தங்கினரே.
போர்வா ளதனை மரக்கிளையில்
பொருத்தி வைத்தே பெருமானார்.
சோர்வு நீங்கிக் கண்ணயர்ந்து
துயில லானார் மரத்தடியில்.
பகைவன் ஒருவன் தற்செயலாய்ப்
பார்த்தான் பெருமான் தூங்குவதை
மிகவும் மகிழ்ச்சி கொண்டவனாய்
மெதுவாய் அருகில் வந்தனனே.
ஏதோ ஓசை கேட்டதனால்
எழுந்த பெருமான் தலைமாட்டில்
சூதாம் எண்ணம் கொண்டவனாய்த்
தோன்றி நின்றோன் தனைக்கண்டார்.
பெருமா னுடைய வாளதனைப்
பிடித்து நின்ற அம்மனிதன்
“அருமை நபியே, இந்நேரம்
யாரே காப்பார் உமை?’ ‘யென்றான்.
”அல்லா!” வென்றார்; அம்மொழியில்
அடங்கி யிருந்த தென்கொல்லோ!
பொல்லா மனிதன் நடுநடுங்கிப்
போட்டு விட்டான் வாளதனை.
விழுந்த வாளை எடுத்தந்த
விந்தைப் பெருமான் தீயோனை
அழுந்த நோக்கி “உனைக்காப்பார்
யாரே?” என்று கேட்டாரே.
“யாரும் இல்லை உமையல்லால்
ஐயா” என்று பயத்தாலே தீரும்
நிலையில் உள்ளவனைத்
திருவார் நபிகள் கண்டாரே.
அருளும் நாயன் தயவாலே
அன்பா உனைநான் மன்னித்தேன்
இருளும் எண்ணம் விலக்கிடுவாய்
இனிது வாழ்வாய் செல்’ லென்றார்.
கொல்ல வருவார் தமைக்கூடக்
குளிர்ந்த அருளால் மன்னிக்கும்
நல்ல உள்ளம் படைத்தவரே
நாயன் தூதர் அறிவீரே.
★ ★ ★



