நாயகப் பெருமான்
நாரா. நாச்சியப்பன்

8. சிறிய தந்தையின் சீற்றம்

நபி பெருமானின் சிற்றப்பா ஹம்ஸா பெரு வீரர். வேட்டையாடுவதில் விருப்ப முள்ளவர். விடியற் காலையில் வில்லும் அம்புமாய்ப் புறப்பட்டால், பகல் முழுவதும் வேட்டையாடி விட்டு அந்தி நேரத்தில் தான் வீடு திரும்புவார். அவர் பெருமானவர்கள் மீது மிக்க அன்புடையவராயிருந்தும் புனித மார்க்கத்தில் அதுவரை சேரவில்லை.

ஒரு நாள் அவர் வேட்டையாடிவிட்டுத் திரும்பும் வழியில் மனந்துடிக்கும் ஒரு செய்தியைக் கேள்விப் பட்டார்.

அபூஜாஹில் என்பவன் பெருமான் அவர்களின் உறவினன். பெருமான் அவர்களைப் பெற்றெடுத்த குறைஷி இனத்தில் ஒருபெருந் தலைவனாகக் கருதப் பெற்றவன். அவன் பெருவீரன் ஆயினும் மிகக் கொடியவன். வீரர்களுக்குரிய சிறந்த பண்பாடுகள் அவனிடம் கிடையா. பெருமானவர்கள் இறைவனின் தூதராகப் பிறந்துள்ளார்கள் என்ற கருத்தை அவன் ஒப்புக் கொள்ள வில்லை. எனவே இசுலாத்தின் பகைவனா னான். இசுலாத்தை ஒழிப்பதே தன்கடனெனக் கருதிச் செயலாற்றி வந்தான் அத் தீயவன்.

பெருமானவர்களைக் கண்டாலே அவனுக்கு ஆத்திரம் பொங்கி எழும். ஒரு நாள் அவன் நபிநாயகம் அவர்களின் தலையைக் குறி பார்த்துக் கல்லெறிந்தான். அதனால் பெரிய காயம் உண்டாயிற்று. பெருமானவர்கள் பெருந்துன்பத்துக் காளானார்கள். வேட்டைக்குச் சென்று திரும்பி வந்த ஹம்ஸா அவர்கள் இச் செய்தியைக் கேட்டதும் பதறிப் போனார்கள். உடனே பெருஞ் சினத்துடன் அபூஜாஹில் என்ற அத்தீயவனைத் தேடிச் சென்றார்கள். நண்பர்களுடன் உல்லாசமாய் விளையாடிக் கொண்டிருந்த அவன் தலையைக் குறி பார்த்து ஓர் அம்பெய்தார்கள். அந்த அம்பு அவன் தலையிற் பாய்ந்து பெரிய காயத்தை ஏற்படுத்தியது. அதைக் கண்ட பிறகுதான் மன அமைதியடைந்து ஹம்ஸா அவர்கள் திரும்பினார்கள்.

நேராகக் கஅபா என்னும் புனிதத் தலத்திற்குச் சென்று வலம் வந்து, பின் பெருமானிடம் திரும்பி வந்தார்கள்.

“முஹம்மது! வருத்தம் வேண்டாம். உன் பகைவனைப் பழிவாங்கி விட்டேன்” என்று நடந்த செய்திகளை விளக்கிக் கூறினார்கள்.

அது கேட்ட பெருமானவர்கள் தன் சிற்றப்பாவை நோக்கி, “என் அருமைச் சிறிய தந்தையே, இஸ்லாத்தின் பகைவரைப் பழிவாங்க வேண்டும் என்பது என் கருத்தன்று. அவர்களைத் துன்புறுத்துவதால் பயன் ஒன்றுமில்லை. இஸ்லாத்தின் உண்மையை உணர்ந்து தாங்கள் இப் புனித மார்க்கத்தில் சேர்வீர்களானால் அதுவே எனக்குப் பெருமகிழ்ச்சி தரும்'” என்று கூறினார்கள்.

இவ்வினிய சொற்கள் ஹஸரத் ஹம்ஸா அவர் களின் இதயத்தில் ஒரு சிறந்த எழுச்சியைத் தோற்று வித்தன. அவர்கள் அன்றே இஸ்லாத்தைத் தழுவினார்கள்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *