நாயகப் பெருமான்
நாரா. நாச்சியப்பன்

17. வரும்படி யன்று; வாளே கொடுப்போம்!

குறைஷிகள், யூதர்களையும், அவர்களுடன் நட்புப் பூண்டிருந்த பல கூட்டத்தார்களையும் ஒன்று சேர்த்துக் கொண்டு முஸ்லிம்களைத் தாக்க ஆயத்த மானார்கள். அவர்களுடைய சேனையில் 24,000 வீரர்கள் இருந்தனர். அவர்களை எதிர்த்து நிற்க முஸ்லிம்களிடம் இருந்த சேனையின் எண்ணிக்கை 3000 தான், எனவே மதினாநகரின் பாதுகாப்பற்ற திசையில் அகழ் ஒன்று வெட்டுவதென முடிவு செய்தனர். பரந்த வெளியில் நின்று கொண்டு எதிரிகளின் பெரும்படையோடு பொருதி மீள முடியாதென்ற எண்ணத்தில்தான் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

எதிரிகள் மதீனா நகரைச் சுற்றி வளைத்து முற்றுகை யிட்டார்கள். முஸ்லிம்கள், நகருக்குள் அகழுக்குப் பின்னால் இருந்து கொண்டு, அகழைத் தாண்டி எதிரிகள் உள்நுழையாதபடி பாதுகாத்துக் கொண்டிருந்தார்கள்.

முற்றுகை நீடித்துக் கொண்டிருந்தது. இதனால் அன்சாரி வகுப்பினர் மனம் தளர்ந்து போகக் கூடுமோ என்று பெருமானவர்கள் ஐயுற்றார்கள். எனவே அவர் களுக்கு ஊக்கம் ஊட்டுவதற்காகவேனும் எதிரிகளில் ஒரு கூட்டத்தாருடன் சமாதானம் செய்து கொள்ளலாமா என்று நினைத்தார்கள், கத்பான் என்ற பிரிவினரை அழைத்து அவர்களைக் கண்டையிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்று கேட்க எண்ணினார்கள்.

அதற்குக் கைமாறாக மதீனாவின் விளை பொருள்களில் மூன்றில் ஒரு பங்கை வேண்டுமானால் கத்பான் கூட்டத்தாருக்குக் கொடுத்து விடலாம் எனக் கருதினார்கள்.

இந்த எண்ணத்தை அன்சாரி இனத்துத் தலைவர்களிடம் கூறி ஆலோசனை செய்த போது, அவர் கள் பெருமான் அவர்களிடம் ஒருகேள்வி கேட்டார்கள். பெருமான் அவர்களே, இப்படிச் செய்யும் படி ஆண்டவன் கட்டளையிட்டிருக்கிறானா? அன்றித் தாங்கள் எண்ணுகிறீர்களா?’ என்று கேட்டார்கள்.

தன் கருத்துத்தான் அது என்று பெருமான் அவர்கள் கூறினார்கள்.

ஆண்டவனுடைய பெருமான் அவர்களே, கட்டளை இவ்வாறு இருக்கும் என்றால் நாங்கள் அதை மறுத்துச் சொல்ல முடியாது. ஆனால், இது தங்கள் கருத்தாயிருப்பதால், நாங்கள் கூறும் விண்ணப்பத்தையும் கேட்டுக் கொள்ளுமாறு வேண்டுகிறோம். ஆண்டவனைப் பற்றிய உண்மைகளை அறிவதற்கு முன்னாலே, இந்த மதீனா நகரிலிருந்து விலை கொடுக்காமல் ஒரு பேரீச்சம் பழத்தைக் கூடக் கொண்டு போகமுடியாது – அவ்வாறு கொண்டு போகக் கூடிய ஆற்றல் அந்தக் கத்பான் கூட்டத்தாருக்குச் சிறிது கூடக் கிடையாது. அப்படியிருக்க, தங்கள் மூலமாக ஆண்டவன் தன் நேர்வழியை எங்களுக்குக் காட்டி மேன்மைப்படுத்திவரும் இக் காலத்தில், வரும்படியில் மூன்றில் ஒரு பாகத்தைக் கொடுத்துவிட முடியுமா? அவர்களுக்கு நாம் நம் வாளைத்தான் நீட்ட வேண்டும்!” என்று அந்த அன் சாரித் தலைவர்கள் கூறினார்கள்.

அன்சாரிகள் தளர்ச்சியடையவில்லை. சிறிதும் குன்றா வீர உணர்ச்சியுடன் இருக்கிறார்கள் என்று அறிந்து பெருமான் அமைதியுற்றார்கள்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *