நாயகப் பெருமான்
நாரா. நாச்சியப்பன்

26. கவிஞன் பெற்ற பரிசு

அரபி நாட்டிலே ஒரு பெருங்கவிஞர் இருந்தார். அவர் பெயர் கஅப் இப்னுஸுஹைர். இஸ்லாத்தைக் கண்டித்தும், பெருமான் அவர்களைப் பழித்தும் கவி பாடுவதே தொழிலாகக் கொண்டிருந்தார் அக்கவிஞர். முஸ்லிம்களின் பகைவரான அக்கவிஞரைக் கண்ட இடத்தில் வெட்டித் தள்ளும்படி பெருமானவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள்.

கஅபின் சகோதரர் முஸ்லிமாகியிருந்தார். அவருடைய இடைவிடாத போதனையினால் கஅப்பும் இஸ்லாத்தைத் தழுவ எண்ணங் கொண்டார். ஆனால் பெருமானின் கட்டளைப்படி முஸ்லிம்கள் தன்னைக் கண்டறிந்து கொன்று விட்டால் என்ன செய்வதென்ற அச்சமும் அவர் உள்ளத்தில் தோன்றியிருந்தது.

ஒருநாள் யாருக்கும் தெரியாமல் அவர் மதீனா வந்து சேர்ந்தார். மதீனா நகரில் உள்ளவர்களுக்கோ அவர் யாரென்று தெரியாது.

கஅப் பள்ளிவாசற் பக்கம் வந்து சேர்ந்த போது பெருமானவர்கள், மக்கள் நடுவில் நின்று இறைவன் உண்மைகளையும் கட்டளைகளையும் எடுத்தோதிக் கொண்டிருந்தார்கள். மக்கள் பயபக்தியுடனும் உன்னிப்பாகவும் அத்திரு மொழிகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

கஅப் கூட்டத்தினுள் புகுந்தார். பெருமானவர் கள் சொற்பொழிவு முடிந்ததும் அவர் முன் சென்றார்.

“ஆண்டவனுடைய திருத்தூதரே! கஅப் என்பவனை ஒரு முஸ்லிமாகத் தங்கள் திருமுன்னே கொண்டு வந்தால் நீங்கள் அவருக்கு மன்னிப்புக் கொடுப்பீர்களா?” என்று கேட்டார்.

”ஆம்; மன்னித்து விடுவேன்” என்று நாயகமவர்கள் கூறினார்கள்.

“நான் தான் கஅப்” என்றார் புலவர்.

உடனே அவரைக் கொல்ல வேண்டும் என்று கூடியிருந்த முஸ்லிம்கள் துடித்தார்கள். பெருமானார் அவர்களை அமைதிப்படுத்தினார். நான் இவரை மன்னித்து விட்டேன்” என்று பெருமானார் கூறினார்.

அப்போதே அப் பெருமானைப் போற்றி ஒரு பாடல் பாடினார். அரபி மொழியில் உள்ள அழகான இசைப் பாடல்கள் பலவற்றிலே அது மேன்மை பெற்று விளங்குகிறது. இப்பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த நபிகள் நாயகம் தமது மேலாடையை எடுத்து அக்கவிஞருக்குப் பரிசளித்தார்கள். அக்கவிஞரின் குடும்பத்தார் வழிவழியாக அம்மேலாடையை ஒரு புனிதப் பொருளாகக் காப்பாற்றிவந்தார்கள். பிற்காலத்தில் அம்மேலாடை நாற்பதினாயிரம் திர்ஹமுக்கு விலையாயிற்று. இப்போது அம்மேலாடை கான்ஸ்டாண்டிநோபிலில் புனிதப் பொருளாகப் பாதுகாத்து வைக்கப் பெற்றுள்ளது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *