
நாயகப் பெருமான்
நாரா. நாச்சியப்பன்
13. உள்ளந் தளராத வீரர்
ஹிஜிரி மூன்றாம் ஆண்டில் மதினாவில் இருந்த முஸ்லிம்களைத் தாக்குவதற்காக மக்காவாசிகள் ஆயத்தம் செய்தார்கள். ஒற்றர்கள் மூலமாக இச் செய்தியை அறிந்த பெருமானவர்கள் முஸ்லிம்களைப் போருக்கு ஆயத்தம் செய்தார்கள். அப்போது இஸ்லாத்திற்காகப் போராட நின்ற வீரர்கள் எழுநூறு பேர் தான்.
படை வீரர்கள் மதினா நகரின் எல்லைக்கு வெளியே வந்ததும், அவர்களை ஓரிடத்தில் நிறுத்திச் சரிபார்த்துக் கொண்டு வந்தார் பெருமான். உரிய வயது வராத சிறுவர்களையும், மிக முதிர்ந்த வயதுடையவர்களையும் ஊருக்குத் திரும்பிச் செல்லுமாறு கட்டளையிட்டார்கள். ஆனால், நம்பிக்கையும் உணர்ச்சியும் அதிகம் உள்ள ஓர் இளைஞன் அவ்வாறு போக மனமற்றிருந்தான். அவன் இதற்காக ஒரு தந்திரம் செய்தான். தன்னைப் பரிசோதிக்க நேரிட்ட போது, பெருவிரல் நுனியில் எம்பிநின்று கொண்டு, தான் உயரமுள்ளவன் என்று காட்டினான். அவன் தந்திரம் பலித்தது, அவனைப் பெரிய மனிதனாகக் கருதிப் படையில் லவத்துக் கொண்டார்கள். அச்சிறு வன் பெயர் ராபி அ-பின் கதீஜ்.
அடுத்து, அவனினும் வயது குறைந்த ஸம்ரா என்ற சிறுவனைத் திரும்பிப் போகச் சொன்ன போது, அவன் மறுத்து விட்டான். தான் ராபி அவை மல்யுத் தத்தில் தோற்கடிக்கும் வலிமையுடையவனென்றும், அப்படியிருக்க அவனே படையில் சேர அனுமதியுள்ள போது தான் ஏன் சேரக் கூடாதென்றும் கேட்டான் ஸம்ரா. உடனே இருவரையும் மல்யுத்தம் செய்யவிட்டார்கள். அதில் ஸம்ரா வென்றான். ஆகவே, அவனும் போர்ப்படையில் சேர்த்துக் கொள்ளப் பட்டான்.
வயது முதிர்ந்து உடல் தளர்ந்த ஒரு முதியவர், மதினாவுக்குத் திரும்பிப்போக மறுத்து விட்டார். அதற்கு அவர் கூறிய காரணம் இது: “நான் கப்ருக் குள் (புனித குழிக்குள்) காலைத் தொங்க விட்டுக் கொண்டிருக்கிறேன். (விரைவில் இறந்து விடுவேன்.) இந்த நிலையில் நபியவர்களைப் பாதுகாப்பதற்காகப் போர் செய்து இறப்பதையே நான் பெரிதும் விரும்புகிறேன்” என்றார் அம் முதியவர்.
உண்மைப் பற்றுதலும் நம்பிக்கையும் உணர்ச்சியும் கொண்ட இந்தப் படை போரில் வெல்லும் என்பதில் ஐயம் உண்டோ?



