நாயகப் பெருமான்
நாரா. நாச்சியப்பன்

29. கடன் தீர்த்த பெருமான்

ஹிஜிரி பதினோராம் ஆண்டில் இஸ்லாம் மார்க்கம் முழுமையெய்தி விட்டதென்றும், பெருமானர்கள் இவ்வுலகத்தைத் துறக்க வேண்டிய காலம் அணுகி விட்டதென்றும் இறைவனால் அறிவிக்கப்பட்டது.

உஹதுச் சண்டையில் உயிர் துறந்தவர்களுக்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டிய கடமை மீந்திருந்தது. ஆகவே அவ்வீர முஸ்லிம்கள் அடங்கியிருந்த இடத்திற்குச் சென்று அவர்கள் மேலுலக நல்வா ழ்வுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். அங்கு கூடியிருந்த முஸ்லிம்களுக்கு அவர்கள் ஒரு சொற்பொழிவு ஆற்றி னார்கள்.

எதிர்காலத்தில் முஸ்லிம்கள் ஒருவருடன் ஒருவர் போரிடக் கூடாதென்றும், இரத்தம் சிந்தலாகா தென்றும் அறிவுறுத்தினார்கள். அவ்வாறு போரிட்டுக் கொலைகளில் ஈடுபட்டால், முன்னுள்ள பல கூட்டத்தார்களும் உட்பகை காரணமாக அழிவெய்தியது போல அவர்களும் அழிந்து போக நேரிடும் என்று எச்சரித்தார்கள்.

சிலநாட்களுக்குப் பின் மதீனாவில் உள்ள அடக்கத் தலத்துக்குச் சென்று அங்கே அடக்கமானவர்களுக்காகப் பிரார்த்தனை செய்தார். அங்கிருந்து திரும்பி வந்தது முதல் அவர்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. நாளுக்கு நாள் நோய் மிகுந்து வந்தது.

உடலில் வலுவிருந்த வரைவில் மெல்ல மெல்லப் பள்ளிவாசலுக்கு நடந்து சென்று தொழுகையை நடத்தினார்கள். அந்த நிலை கடந்தபோது ஹஸரத் அபூபக்கர் அவர்களை தமக்குப் பதிலாகச் சென்று தொழுகை நடத்தும்படி வேண்டிக் கொண்டார்கள்.

ஒருநாள் சிறிது உடல் நலமுற்றிருப்பது போல் தோன்றியது. எனவே பெருமானவர்கள் குளித்து விட்டுப் பள்ளி வாசலுக்கு சென்றார்கள். அப்போது தொழுகை நடந்து கொண்டிருந்தது. ஹஸரத் அபூபக்கர் அவர்களே தொழுகையை நடத்திக்கொண்டிருந்தார்கள். பெருமானவர்கள் வந்ததைக் கண்டதும் அபூபக்கர் அவர்கள் தம் இடத்தை விட்டு விலகிக் கொள்ள முயன்றார்கள். ஆனால் விலக வேண்டாம் என்று குறி காட்டிவிட்டு பெருமானவர்கள் ஹஸரத் அவர்களின் அருகில் இருந்து தொழுகையை நடத்தினார்கள். தொழுகை முடிந்தபின் பெருமானவர்கள் ஒரு சொற்பொழிவு ஆற்றினார்கள். அதுவே அவர்களின் கடைசிச் சொற்பொழிவாகும்.

அந்தச் சொற்பொழிவில் அவர்கள் ஹஸரத் அபூபக்கர் அவர்களைப் பாராட்டிப் பேசினார்கள். முன்னிருந்த நபிமார்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாய் மாற்றியது போலத் தம்முடைய அடக்கத் தலத்தை ஆக்கிவிடக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்கள். அப்படிச் செய்வதைத்  தாம் விலக்குவதாக அறிவித்தார்கள். கடைசியில் அங்கு கூடியிருந்தவர்களை நோக்கி, “முஸ்லிம்களே, நான் எவருக்காவது தீங்கு இழைத்திருந்தால் அதற்கு ஈடு செய்ய ஆயத்தமாயிருக்கிறேன். நான் எவருக்காவது கடன்பட்டிருந்தால் அதைத் தீர்ப்பதற்கு ஆயத்தமாயிருக்கிறேன்” என்று கூறினார்கள்.

“ஆண்டவனின் தூதரே, தாங்கள் எனக்கு மூன்று திர்ஹம் கடன்பட்டிருக்கிறீர்கள். எவ்வாறெனில் ஒருமுறை தங்களிடம் ஓர் ஏழைவந்து கேட்டபோது மூன்று திர்ஹம் கொடுக்கும்படி எனக்குக் கட்டளையிட்டீர்கள். அது இன்னும் தரப்படாமல் இருக்கிறது” என்றார் ஒருவர்.

உடனே பெருமான் ஹஸரத் அப்பாஸ் அவர்களை நோக்கி, அப்போதே மூன்று திர்ஹம் அந்த மனிதருக்குக் கொடுக்கும்படி ஆணையிட்டார்கள்.

பின்னர் மதக்கடமைகள் குறித்து அறிவுரைகள் கூறிக் கடைசியில், உலகில் வீண் கவுரவத்தை நாடாமலும், பிறருக்குத் தீங்கு எண்ணாமலும் இருப்ப வர்களுக்காகவே மேலுலக வீடு பேறு உள்ளதென்றும், இறைவனுக்கு அஞ்சி பாவத்தினின்றும் விலகியவர் களுக்கு நல்ல முடிவு உண்டாகும் என்றும் கூறுகின்ற திருக்குர்ஆன் மொழியை ஓதிமுடித்து வீடு திரும்பி னார்கள்.

அதன்பின் அவர்கள் பள்ளிவாசலுக்குச் செல்லவில்லை.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *