
நாயகப் பெருமான்
நாரா. நாச்சியப்பன்
3. துறவியாரின் எச்சரிக்கை
பெருமான் அவர்களை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட அபூதாலிப் அவரைக் கல்வி பயிலச் செய்யவில்லை. பள்ளிக் கூடத்துக்கோ, அல்லது தனி ஆசிரியரிடமோ அனுப்பி வைக்கவில்லை. பெருமானவர்கள் அக்கால வழக்கப்படி ஆடு மேய்த்துக் கொண் டிருந்தார்கள்.
கல்வியறியாதவர் என்னும் கருத்துப்பட்ட “உம்மி’ என்ற அடை மொழியைச் சேர்த்தும் பெரு மானவர்களின் பெயரைக் குறிப்பிடுவதுண்டு.
ஒரு முறை அபூதாலிப் அவர்கள் வாணிகம் செய் வதற்காக ஷாம் நாட்டிற்குப் புறப்பட்டுப் போனார். அப்போது பெருமானும் உடன் வருவதாகக் கேட்டுக் கொள்ளவே அவர் தம்முடன் அழைத்துச் சென்றார்.
ஷாம் தேசத்தில் புஸ்ரா என்னும் நகருக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அங்கே ஒரு மடத்தில் அவர்கள் தங்கினார்கள். அது ஒரு கிறித்தவத் துறவியாரின் மடம். அத் துறவியாரின் பெயர் பஹீரா என்பதாகும்.
பஹீரா சிறந்த கல்வியறிவுடையவர். பழம் வேதங்கள் அனைத்தும் அவருக்கு மனப்பாடம்.
அவர் ஒரு நாள் சிறு பையனாயிருந்த பெருமானை அழைத்துப் பேசிக் கொண்டிருந்தார். பெருமானவர்களின் முகப்பொலிவும், அறிவு நுட்பமும், இனிய மொழிகளும், குணச் சிறப்புக்களும் அவருக்கு ஓரு கருத்தை நினைவுபடுத்தின. பழம் வேதங்களில், உலகில் வெளியாகப் போகும் இறைவனுடைய திருத் தூதரைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கும் மொழிகள் அவர் நினைவுக்கு வந்தன.
பஹீரா என்னும் அத்துறவி அபூதாலிப்பை அருகில் அழைத்து, “ஐயா, இக் குழந்தையைக் கருத் தோடு கவனித்துக் கொள்ளுங்கள். அரேபிய நாட்டிற்கு ஒருகதிரவன் போல் இது பிறந்திருக்கிறது. ஈசா நபியவர்களின் முன்னறிவிப்பின்படி இறைவனால் உலகுக்குக் கடைசியாக அனுப்பப்படுகிற நபி இவர் தாம். இவருக்கு யூதர்களால் இடையூறு வரக் கூடும். கவனித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்றார் அந்த நல்லவர். (ஈசா நபி – இயேசு நாதர்)



