நாயகப் பெருமான்
நாரா. நாச்சியப்பன்

28. காப்பவன் இறைவனே

ஒரு சண்டை முடிந்து பெருமான் அவர்கள் திரும்பிவந்து கொண்டிருந்தார்கள். வழியில் களைப்பாறிச் செல்ல எண்ணினார்கள். தங்கள் வாளை ஒரு மரத்தின் கிளையில் தொங்கவிட்டுவிட்டு அதன் அடியில் படுத்தார்கள். களைப்பின் மிகுதியால் அவர்கள் தூங்கி விட்டார்கள்.

பகைவர்களில் ஒருவன் அவ்வழியாக வந்தான். நபிபெருமான் தூங்குவதைக் கண்டு அவர்கள் அருகில் வந்தான். மரக்கிளையில் தொங்கிய வாளை அவன் எடுத்துக் கொண்டான். அப்போது திடுமென்று பெருமான் அவர்கள் விழித்துக் கொண்டார்கள். அந்தப் பகைவன் அவர்களின் தலைப்பக்கத்தில் உருவிய வாளுடன் நின்று கொண்டிருந்தான்,

விழித்தெழுந்த பெருமானை நோக்கி அவன் கேட்டான்.

”முஹம்மது! இப்போது என்னிடமிருந்து உம்மை யார் காப்பாற்றுவார்?”

உரத்த குரலில் அவன் கேட்ட கேள்விக்கு, பெருமான் அவர்கள் அமைதியாகப் பதில் சொன்னார்கள்.

 “அல்லா!”

அஞ்சாது நபியவர்கள் கூறிய இந்தப் பதில் ஏனோ அப்பகைவனை நடுக்கங் கொள்ளச் செய்தது. நடுக்கமுற்ற அவன் வகையிலிருந்த வாள் நழுவிக் கீழே விழுந்தது.

பெருமானவர்கள் அவ்வாளைக் கையில் எடுத்துக் கொண்டார்கள்.

“இப்போது உன்னை யார் காப்பாற்றுவார்கள்?” என்று கேட்டார்கள்.

கைவாளையிழந்த அவன் மேலும் அச்சத்துடன், “தங்களைத் தவிர ஒருவருமில்லை”  என்று பதிலளித்தான்.

அருள் நிறைந்த நெஞ்சினராகிய பெருமான் அவர்கள், “என்னைக் காப்பாற்றிய அல்லாவே உன்னையும் காப்பாற்றுகிறான்” என்று கூறி அவனை மன்னித்து அனுப்பிவிட்டார்கள்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *