
நாயகப் பெருமான்
நாரா. நாச்சியப்பன்
7. தேவதூதரும் திரு ஒளித் தோற்றமும்
நபிபெருமான் அவர்கள் அக்காலத்தில் தனியேயிருந்து சிந்தனை செய்வதை வழக்கமாகக் கொண் டிருந்தார்கள். சில சமயம் ‘ஹிரா’ என்னும் மலைக் குகையில் போய் இருப்பார்கள். அங்குப் போகும் பொழுது இரண்டு மூன்று நாட்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்களை எடுத்துக் கொண்டு போய் இருப்பதும் உண்டு. ஒவ்வோர் ஆண்டிலும் ரம்ஸான் மாதம் முழுவதும் அக்குகையிலேயே சென்று இருந்து. இறைவணக்கத்திலும் நற்சிந்தனையிலும் காலங்கழிப்பார்கள்.
பெருமானவர்களுக்கு வயது நாற்பது ஆகியது ரம்ஸான் மாதம் திங்கட்கிழமை யன்று இரவில் ஹிராக் குகையில் இறை வணக்கம் செய்து கொண்டிருந்தார் கள். அப்போது அவர்கள் எதிரே ஒரு பெருஞ்சோதி தோன்றியது. அச்சோதியின் இடையில் ஒரு திருவுருத் தோன்றி, “முஹமது படிப்பீராக!” என்று கூறியது.
“எனக்குப் படிக்கத் தெரியாதே” என்றார் பெருமான்,
“யாவற்றையும் படைத்த தலைவனாகிய இறைவன் திருப்பெயரைக் கூறிப் படிப்பீராக! அவன் சதைக் கட்டியினால் மனிதனைப் படைத்தான்! படிப் பீராக! உங்கள் நாயன் எதிர்பாராமல் கொடுப்பவன்.
அவன் எழுதுகோலினால் மனிதனுக்குக் கற்றுக் கொடுத்தான். மனிதனுக்குத் தெரியாத பொருள்களை யெல்லாம் அவனே விளக்கியருளினான்” என்னும் கருத்துள்ள அரபி மொழிச் சொற்களை அவ்வானவர் கூறியருளினார்.
இம்மொழிகளைக் கேட்டதும் பெருமானவர்களுக்கு மயிர்க் கூச்செறிந்தது. மயக்கம் உண்டாயிற்று. மயக்கம் தெளிந்து எழுந்ததும் நடுக்கத்துடன் ஹிராக் குகையிலிருந்து புறப்பட்டு வீட்டிற்கு வந்து சேர்ந் தார். போர்வையை எடுத்து உடலை மூடிக் கொண்டு படுத்து விட்டார். நடுக்கங் குறைந்து சிறிது மன ஆறுதல் ஏற்பட்டவுடன் நடந்ததை யெல்லாம் தம் மனைவியாரான கதீஜாப் பெருமாட்டியிடம் கூறினார்.
கதீஜாப் பெருமாட்டியவர்கள் பல வகையாகப் பெருமானுக்கு ஆறுதல் கூறித் தேற்றினார்கள். நாயகியார் தம் சிறிய தந்தையின் புதல்வரான வர்க்கா என்பவரிடம் இச் செய்திகளைக் கூறினார். இவற்றைக் கேட்டவுடன் வர்க்கா பெரும் பரவசமடைந்தார்.
“புனிதம்! புனிதம்! மூசா நபியவர்களிடம் வெளியான தேவதூதரே முகம்மது அவர்களிடம் தோன்றியிருக்கிறார். இவர் மக்களுக்கு ஒரு நபியாக விளங்குவார். அவரிடம் இச்செய்தியைக் கூறித் தைரியமாக இருக்கச் சொல்லுங்கள்” என்று சொல்லியனுப்பினார்
வர்க்கா வேத ஆராய்ச்சி செய்தவர். அவ்வேதங்களின் மூலம், அரேபியாவில் ஒரு நபி தோன்றுவார் என்ற செய்தியை அறிந்து அதை எதிர் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் பெருமான் அவர்களை நேரில் சந்தித்தபோது, இறைவன் மீது ஆணையிட்டு “இம் மக்கள் கூட்டத்திற்கு ஆண்டவன் உம்மை நபியாகத் தேர்ந்தெடுத்திருக்கிறான். இறைவனின் செய்திகளை அறிவிக்கும் தேவ தூதரே உம்மிடம் வந்தவர். மக்கள் உங்களைப் பொய்யன் என்று தூற்றுவார்கள். பெருந் தொல்லைகளை விளைவிப்பார்கள். உமக்கு எதிராகப் போர் புரிவார்கள். நாட்டை விட்டே துரத்துவார்கள். அப்படி நடக்கும் போது நான் உமக்காகப் போராடுவேன்” என்று கூறினார்.
பெருமான் அவர்களை இறைவனுடைய தூதர் என்று முதன் முதல் ஏற்றுக் கொன்டதும், சிலை வணக்கத்தைக் கைவிட்டு, ஒரு தெய்வக் கொள் கையை ஒப்புக்கொண்டு பின்பற்றியதும், முதலில் பெருமானுக்கு உறுதுணையாக இருந்ததும் கதீஜாப் பிராட்டியாரே யாவார்கள்.
பெருமானர்களிடம் வெளியாகிய தேவ தூதர் ஜிப்ரீல் ஆவார். இத்தூதர் பின் பல முறைகள் அவ்வப்போது தோன்றித் தெய்வச் செய்திகளைப் பெருமானுக்கு அறிவிப்பார். பெருமானவர்கள் தமக்கு வெளியாக்கப்பட்ட தெய்வச் செய்திகளை முதலில் மிக நெருங்கியவர்களிடம் மட்டுமே அறிவித்தார். பிறரிடம் அவர் இச்செய்திகளை அறிவித்த போது அவர்கள் நம்பாதது மட்டுமன்றி, எதிர்க் கவும் தொடங்கினர்.



