நாயகப் பெருமான்
நாரா. நாச்சியப்பன்

10. காதில் விழுந்த வேத வாசகம்

மக்காவுக்கு ஒரு முறை வெளியூரிலிருந்து ஒரு பெரியவர் வந்தார். அவர் தேவுஸ் என்றும் பெரிய குடும்பத்தின் வழியில் வந்த பெருமை யுடையவர்.

மக்காவிலிருந்த குறைஷிக் குலத்துத் தலைவர்கள் எல்லாரும் சென்று அவரை வரவேற்று அழைத்து வந்தனர். அவருக்கு ஆடம்பரமான உபசாரங்கள் நடந்தன. அவர் மக்காவாசிகளுடன் பேசிக் கொண் டிருக்கும் போது நபிநாயகம் அவர்களைப் பற்றிப் பேச்சு வந்தது.

பெருமானைப்பற்றி நிந்தனையும் பழியுமே பேசிய மக்கா வாசிகள், துபைல் இப்னு அம்ரு என்ற அந்தப் பெரியவரிடம் வேறு ஒரு செய்தியும் கூறினர். பெரு மானிடம் ஒரு முறை பேசியவர்கள், ஏதோ மந்திர சக்தியால் ஈர்க்கப்பட்டு தாய் தந்தையரைக் கூட மதிக்காத பாதகர்களாகி விடுகின்றனர் என்று கூறினர்.

குறைஷிகள் கூறிய குற்றச் சாட்டுகளையெல்லாம் கேட்டறிந்த துபைல் என்பவர் பெருமானிடம் மிகுந்த வெறுப்புக் கொண்டார். அவர் முகத்தைப் பார்க்கவும் அவர் பேச்சைக் கேட்கவும் விரும்பாதவராயினார். நாயகமவர்கள் சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்கும் வழியாக அவர் போக நேரிட்டால், முன்னெச்சரிக்கையாகக் காதில் பஞ்சு வைத்துக் கொண்டு போவது வழக்கம்.

ஒரு நாள் துபைல் சொற்பொழிவு நடந்து கொண் டிருந்த பாதையாய்ச் சென்றார். அன்று நாயகத்தின் குரல் இஸ்லாத்தின் முழக்கம்போல் பெரிதாக ஒலித்துக் கொண்டிருந்தது. துபைல் பஞ்சு வைத்திருந்தார்.

ஆனால் அது காதில் இல்லை. மடியில் இருந்தது. மடியில் இருந்த பஞ்சை எடுத்துக் காதில் வைப்பதற்குள் வேத வாசகங்கள் அவர் செவியில் விழுந்து விட்டன.

மனித இனத்தின் நன்மைக்காக இறைவனால் மொழியப்பட்ட அத்திரு வாசகங்களை ஒரு முறை கேட்ட செவிகளை மீண்டும் மூட மனம் வருமோ! கையில் எடுத்த பஞ்சைக் காதில் வைக்க மறந்தார் துபைல்! அவர் மெய்யெல்லாம் ஒரு புளகாங்கித உணர்ச்சி ஏற்பட்டது. சொற்பொழிவு முழுவதையும் விருப்பத்தோடு கேட்டுக் கொண்டு நின்றார்.

பெருமானவர்கள் சொற்பொழிவு முடிந்து வீடு திரும்பிய போது, தாய்ப்பசுவைத் தொடரும் கன்றைப் போல துபைலும் அவர்களைத் தொடர்ந்து சென்றார். முதலில் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்த நாயகமவர்கள், யாரோ கதவைத் தட்டும் ஒலி கேட்டுக் கதவைத் திறந்து விட்டார்கள்.

பெருமதிப்புக்குரிய செல்வந்தராகிய துபைல், பெருமானவர்களின் திருவடியில் விழுந்து கண்ணீர் விட்டு “நான் தங்கள் அடியார்க்கு அடியான்” என்று மனங்கசிந்து கூறினார்கள்.

துபைல் என்ற இப்பெரியவர் தாம் சேர்ந்தது மட்டுமன்றி வேறு பலரையும் இஸ்லாத்தில் சேரத் தூண்டிய பெருமை மிக்கவராவார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *