
நாயகப் பெருமான்
நாரா. நாச்சியப்பன்
21. மகளைக் கொன்றவனுக்கும் மன்னிப்பு
பெருமானவர்களின் மகளார் ஸைனப் மக்காவிலிருந்து மதினாவிற்குச் செல்வதற்காக ஒட்டகத்தின் மீது ஏறினார்கள். அப்போது ஹப்பார் என்பவன் எதிர்பாராத விதமாக ஈட்டியைத் திருப்பிக் கொண்டு மகளாரைத் தாக்கினான். அதனால் அவர்கள் கீழே விழ நேரிட்டது. கர்ப்பிணியாக இருந்த மகளார் கீழே விழுந்த அதிர்ச்சியினால் கருப்பங் கலைந்து சில நாட்களில் உயிர் துறக்க நேரிட்டது. அவர்கள் இறந்த செய்தி யறிந்ததும் ஹப்பார் என்ற அத்தீயவன், அங்குத் தங்கியிருந்தால் தன் உயிருக்கு ஆபத்து அஞ்சி அயல் நாட்டிற்கு ஓடி விட்டான்
சிறிது காலத்திற்குப் பின் அவன் தன் நாட்டிற்குத் திரும்ப நேரிட்டது. அப்போது அவன் நேராகப் பெருமானிடம் வந்து சேர்ந்தான். பெருமானை நோக்கி, “உங்கள் கருணையையும், தயாள சிந்தனையையும் பகைவரையும் மன்னிக்கும் உயர் பண்பையும் எண்ணிப் பார்த்த பின்பே உங்களைத்தேடி வந்தேன். ஆண்டவனுடைய திருத்தூதரே, உங்கள் மூலமாகவே இறைவன் எங்களுக்கு நேர்வழி காட்டி நாசமாகாமல் காப்பாற்றினான். நான் தங்களுக்குப் பெருங்குற்றம் செய்திருக்கிறேன். ஆயினும் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்” என்று அவன் வேண்டி நின்றான்.
அவன் செய்தது பெருங்குற்றமாயினும், தனக் கிழைத்த குற்றமாக இருக்கவே பெருமானவர்கள் சற்றும் தயங்காமல் அவனை அப்போதே மன்னித்து விட்டார்கள்.



