
நாயகப் பெருமான்
நாரா. நாச்சியப்பன்
30. முகம்மது ஒரு தூதரே!
அன்று திங்கட்கிழமை. பெருமானவர்களுக்கு உடல் நலமுற்றிருப்பது போல் தோன்றியது. நண்பகலில் ஹஸரத் அபூபக்கர் அவர்களின் மகன் அப்துற்ரகுமான் பெருமானைப்பார்ப்பதற்காக வந்திருந் தார். அவர் கையில் பல்குச்சி ஒன்று இருந்தது. பெருமான் அவர்கள் அப் பல்குச்சியையே உற்று நோக்கினார்கள். உடனே ஹஸரத் ஆயிஷா நாயகியவர்கள் பெருமானின் கருத்தை அறிந்து அப் பல்குச்சியை வாங்கிக் கொடுத்தார்கள். பெருமானவர்கள் பல் விளக்கினார்கள். அடிக்கடி முகத்தைத் தண்ணீரி னால் துடைத்துக் கொண்டேயிருந்தார்கள். ஆண்டவன் நினைவாகவே யிருந்தார்கள்.
“அல்லா மேலான தோழனிடம்” என்று மும்முறை கூறினார்கள். அவ்வாறு கூறிக் கொண்டிருக்கும் போதே கைகள் அசைவற்றுப் போயின. கண்கள் மூடின. உயிர் புனித உலகம் நோக்கிப் போய் விட்டது.
அறுபத்து மூன்று ஆண்டுகட்கு முன் ரபிஉல் அவ்வல் மாதம் பன்னிரண்டாம் நாள் திங்கட்கிழமை யன்று பிறந்த அவர்கள் அன்று ஹிஜிரி பதினோராம் ஆண்டு அதே மாதம் அதே நாள் அதே திங்கட் கிழமையன்று உயிர்துறந்தார்கள்.
அவர்கள் புனித உலகம் புகுந்த செய்தி காட்டுத் தீயைப் போல் நகரெங்கும் பரவிவிட்டது. மக்கள் யாவரும் பள்ளி வாசலில் வந்து கூடினார்கள்.
ஹஸரத் உமர் அவர்கள், கூட்டத்தின் மத்தியில் உருவிய வாளுடன் நின்று கொண்டு, யாராவது பெருமானவர்கள் இறந்து போனதாகச் சொன்னால் தலையை வெட்டிவிடுவேன் என்று அச்சுறுத்திக் கொண்டிருந்தார்கள். பெருமானைச் சாவு தீண்ட முடி யாது என்பது அவருடைய எண்ணம்- நம்பிக்கை.
ஹஸரத் அபூபக்கர் அவர்கள் வந்தார்கள். உள்ளே சென்று போர்வையை நீக்கிப் பெருமானின் முகத்தைக் கண்டார்கள். முழங்காலிட்டுப் பணிந்து அந்தத் திருமுகத்தில் முத்தமிட்டார்கள்.
“பெருமானே, உயிருடன் இருந்த இருந்த போதும் இனிமையாய் இருந்தீர்கள்; இறந்த பின்னும் அதே இனிமையுடன் விளங்குகிறீர்கள்” என்று கூறிவிட்டு மீண்டும் ஒருமுறை முத்தமிட்டுப் போர்வையை இழுத்து மூடிவிட்டு வெளியில் வந்தார்கள்.
உருவிய வாளுடன் நின்று கொண்டிருந்த ஹஸரத் உமர் அவர்களை நோக்கி, “உமர், பேசாமல் கீழே உட்காருங்கள்” என்று ஆணையிட்டார்கள்.
மக்கள் கூட்டத்தின் மத்தியில் போய் நின்றார்கள்.
“மக்களே, முஹம்மது அவர்களை யாராவது வணங்குகிறவர் இருந்தால், அவர் இறந்துவிட்டார் என்பதை அறியுங்கள். அல்லாவை வணங்குகிறவர்கள் அவர் இறப்பவரில்லை என்பதை அறியுங்கள்” என்று கூறினார் ஹஸரத் அபூபக்கர்.
அவர் தொடர்ந்து, “முஹம்மது ஒரு தூதரே யன்றி வேறல்லர்; அவருக்குமுன் எத்தனையோ தூதர்கள் இறந்துபோயிருக்கிறார்கள். அவர் இறந்து போனாலும் அன்றி வெட்டுண்டாலும் நீங்கள் திரும்பிய கால்களுடன் பின்வாங்குவீர்களா? யார் திரும்பிய கால்களுடன் பின்வாங்குவானோ அவன் அல்லாவிற்கு எவ்வகையிலும் தீங்கியற்றவியலாது. அல்லாவின் பால் நன்றி காட்டுபவர்களுக்கு அதற்குரிய பலனை அல்லா கொடுப்பான்” என்னும் திருக்குர்ஆன் திருமொழியை உரைத்தார்கள்.
ஹஸரத் அபூபக்கர் அவர்களின் மொழிகளைக் கேட்டபின்னர்தான் பெருமான் இறந்துவிட்டார்கள் என்ற செய்தியைப் பலர் நம்பினார்கள்.
துயரம் தாங்கமுடியாமல் ஹஸரத் உமர் அவர்கள் மெய்ந்தடுங்கிக் கீழே சாய்ந்துவிட்டார்கள். சில சிலர் ஏங்கிஏங்கி ஸஹாபாக்கள் மயக்கமுற்றார்கள். அழுதார்கள்.
நபிமார்களை அவர்கள் மரணமடைந்த இடத்திலேயே அடக்கம் செய்தல் வேண்டும் என்று பெருமான் அவர்கள் கூறியதை நினைவு வைத்துக் கொண்டு, உரிய சடங்குகளை முறைப்படி செய்து முஸ்லிம்கள் அனைவரும் பிரார்த்தனை செய்து அவ்விடத்திலேயே அடக்கம் செய்தார்கள்.
இறையுன் புனிதத் திருத்தலமும்
இனிய நபியாம் திருத்தூதர்
உறையும் புனிதத் திருத்தலமும்
ஒவ்வோர் முஸ்லிம் மைந்தனுமே
முறையொன் றேனும் கண்டிடவே
முழுதும் அருள்க! நல்லறமே நிறையும்
பெருமான் வழிபற்றி
நிற்க அருள்க! அருள்கவே!
ஓர் உருதுக் கவிஞரின் பாட்டு இது. இப்பாட்டின் கருத்து: “ஒவ்வொரு முஸ்லிமும் நபிகள் நாயகத்தின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நடக்கவேண்டும். வாழ்வில் ஒரு முறையேனும் புனிதத் திருத்தலமாகிய கஅபாவையும் நபிநாயகம் அவர்களின் அடக்கத் தலத்தையும் காணவேண்டும்; அதற்கு ஆண்டவன் அருள்புரிய வேண்டும்” என்பதாகும்.



