
நாயகப் பெருமான்
நாரா. நாச்சியப்பன்
9. மக்கா மலையை முட்டிய பேரொலி
பெருமானைப் பிறவிப் பகைவராகக் கருதிய அபூ ஜாஹில் என்பவன் ஒரு நாள் குறைஷி இனத்துத் தலைவர்கள் அனைவரையும் கூட்டினான். அவர்கள் அனைவருக்கும் வீர உணர்ச்சி வரும்படியாகப் பேசி னான்.
“இளைஞர்களே, உங்கள் மதமும் கடவுள்களும் ஒரு தனி மனிதனால் கேவலப் படுத்தப்படுவதைப் பார்த்துக் கொண்டு உங்களால் உயிரோடு இருக்க முடி கிறதா? வீரமற்ற கோழைகளா? ஏன் சும்மாயிருக்கிறீர் கள்?” என்று கேட்டதோடு அவன் நின்று விடவில்லை. யார் நபிபெருமான் அவர்களின் தலையை வெட்டிக் கொண்டு வருகிறானோ, அவனுக்குச் சமூக சேவைப் பரிசாக நூறு ஒட்டகங்கள் கொடுப்பதாகவும் ஆசை யூட்டினான்.
தம் இதயமே வீரத்தின் இருப்பிடமாகக் கொண்ட உமர் இப்னு சத்தாப் என்பவர் இச் சொற்களைக் கேட்டு எழுச்சி பெற்றார், அவர் அபூஜாஹிலை நோக்கி, “நான் இவ் வேலையை முடித்து வருகிறேன். ஆனால், நீர் சொன்னபடி நடப்பதாகச் சத்தியம் செய்து கொடுக்க வேண்டும்” என்று கேட் டார். உடனே அபூஜாஹில் அவரைக் கஅபாவிற்கு அழைத்துக் கொண்டு சென்றான். அங்குள்ள ஹூபல் என்னும் உருவச் சிலையின் முன் நின்று தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதாகச் சத்தியம் செய்தான். உமர் இப்னுகத்தாப்பும் தம் பகைவரைக் கொல்லும் வரை எவ்விதமான இன்பத்தையும் நினைத்துப் பார்ப்பதில்லை என்று உறுதி பூண்டார்.
இஸ்லாத்தில் சேர்ந்தவர்களைத் துன்புறுத்துவதே தம் இன்பமாகக் கொண்டிருந்த உமர் இவ்வாறு உறுதி பூண்டபின் உருவிய வாளுடன் புறப்பட்டார்.
நபிபெருமானைத் தேடிப் புறப்பட்ட உமரை நண்பர் ஒருவர் வழியில் சந்தித்தார். உருவிய வாளுடன் கருவிய நெஞ்சுடன் உமர் விரைந்து செல்லும் காரணத்தைக் கேட்டறிந்த அந்த நண்பர், உமரைக் கேலி செய்தார்.
“”உமது குடும்பத்திலேயே இஸ்லாம் புகுந்து விட் டது. உம் சகோதரியும் மைத்துனரும் இஸ்லாத்தில் சேர்ந்து விட்டார்கள். வெட்கமிருந்தால் முதலில் வீட்டில் உள்ளவர்களைத் தீர்த்துக் கட்டி விட்டுப் பிறகு மற்றவரைப் பற்றிச் சிந்தியும்!” என்று எள்ளி நகையாடினார் அவர்.
உமர் நேராகத் தம் சகோதரியின் வீடு சென்றார். கதவு தாளிடப்பட்டிருந்தது. உள்ளே அவர் சகோதரி யும் மைத்துனரும் திருக்குர்ஆனை ஓதிக்கொண்டிருந்தனர். உமர் கதவைத் தட்டினார். அவர் குரல் காதில் விழுந்தவுடன், அவர் சகோதரி திருக்குர்ஆன் எழுதியிருந்த தாள்களை ஒளித்து வைத்துவிட்டு வந்து கதவைத் திறந்தார்.
உள் நுழைந்த உமர் கடுங்கோபத்துடன் “இப்போது சற்று முன் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? என் காதில் விழுந்தது என்ன? என்று கேட்டார்.
சினம் பொங்கும் அவர் விழிகளைக் கண்டு அஞ்சிய அம்மையார் “ஒன்றும் இல்லை” என்று கூறினார்கள் “இல்லை, நீங்கள் மதம் மாறிவிட்டீர்கள் என்று சீறிக் கொண்டே தம் மைத்துனரை அடிக்க முற்பட்டார் உமர். கணவனைக் காப்பாற்ற வந்த அவர் சகோதரி அவ்வடியை ஏற்றுக் கொண் டார். அடி பலமாக விழுந்ததால் அப்பெண்மணிக்கு இரத்தக் காயம் ஏற்பட்டது.
அப்படியிருந்தும், சற்றும் கலங்காமல், “உமர், என்ன செய்தாலும் இஸ்லாம் எங்கள் மனத்தை விட்டு அகலாது” என்று உறுதியுடன் கூறினார். காயத்தின் வழியே குருதிபாய்ந்தோடும் அந்நிலையிலும் கலங்கா உறுதியுடன் வெளிப்பட்ட இச் சொற்கள் உமரின் மனத்தைக் கரையச் செய்து விட்டன. உமர் உடன் பிறந்தாளை நோக்கிப் பரிவுடன், “நீங்கள் ஓதிய வாசகங்களை எனக்குக் காட்டுங்கள்” என்று கூறினார்.
ஒளித்து வைத்த தாள்களை எடுத்து வந்து காட்டினார் அம்மையார்.
அவற்றை எடுத்துப் படித்துப் பார்த்த உமர் அச் சொற்றொடர்களில் படிந்துள்ள உண்மைகளுக்கு ஆட் பட்டார். புது மனிதரானார். புத்துணர்ச்சியுடன் நபி பெருமான் இருக்கும் இடத்தைத் தேடிச் சென்றார்.
நபிபெருமான் அவர்கள் அப்போது அர்க்கம் என்ற நண்பரின் வீட்டில் நம்பிக்கை யுள்ளவர்களுடன் இருந்து தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்.
அபூஜாஹில்லிடம் உமர் உறுதியுடன் புறப்பட்ட செய்தி அங்கிருந்த முஸ்லிம்களுக்குத் தெரிந்திருந்தது. எனவே, உமர் வந்து கதவைத் தட்டியபோது, அதைத் திறக்க யாரும் முன்வர வில்லை. அச்சத்தால் பேசாதிருந்த அவர்களை நோக்கி ஹஸரத் ஹம்ஸா அவர்கள் “அஞ்ச வேண்டாம். அவரை நான் கவனித்துக் கொள்கிறேன். ஏதேனும் தீமை நிகழுமாயின் அவர் கை வாளாலேயே அவர் தலையைக் கொய்து விடுகிறேன். சென்று கதவைத் திறந்து விடுங்கள்” என்று கூறினார்.
கதவைத் திறந்தவுடன் உள்ளே நுழைந்த உமரை எதிர்சென்று கண்டார் நபிநாயகம். அவருடைய சட்டை நுனியைப் பற்றிக் கொண்டு, “உமர், என்ன நோக்கத்தோடு இங்கு வந்தீர்?’ என்று கேட்டார்.
ஏற்கனவே மனம் மாறிப் போயிருந்த உமர் அவர் கள் வணக்கத்துடன் இனிய குரலில் “இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவே இங்கு வந்தேன்!” என்று கூறினார்கள்.
“ஆண்டவன் மிகப் பெரியவன்” என்ற திரு மொழி நபிநாயகப் பெருமானின் திருவாயிலிருந்து வெளிப்பட்டது. வியப்பும் திகைப்பும் களிப்பும் ஒருங்கே கொண்ட அங்கிருந்த முஸ்லிம்கள் அனைவரும் அதே திருவாசகத்தை உரத்துக் கூவினர். அந்த ஒலி மக்கா மலையிலே சென்று முட்டி எதிரொ லித்தது.
அதுவரை மறைவான இடங்களிலே கூடித் தொழுகை நடத்தி வந்த முஸ்லிம்கள், உமர் தங்கள் மார்க்கத்தில் சேர்ந்த பின், அச்சம் நீங்கி கஅபா விலேயே சென்று தொழுகை நடத்தத் தொடங்கி னார்கள்.



